கொரோனாவை அழிக்கும் சோப்பு! | Kalvimalar - News

கொரோனாவை அழிக்கும் சோப்பு!

எழுத்தின் அளவு :

'கோவிட் -19' எனும் கொரோனா வைரஸ் தாக்குதலால், 185 நாடுகள் பாதிப்படைந்துள்ளன. மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அரசுகள் அறிவுறுத்துகின்றன. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கின்றனர். அவை அனைத்திலும் சோப்புப் போட்டு கை கழுவச் சொல்வது முதன்மையானது. சாதாரண சோப்பு எப்படி வைரஸை அழிக்கும்?
சோப்பின் இரண்டு பகுதிகள்:
1. நீரை விலக்கும் பகுதி (Hydrophobic)

2. நீரை விரும்பும் பகுதி (Hydrophilic)
அழுக்கு என்பது நீரை விலக்கும் இயல்பு கொண்டது. சோப்பின் நீரை விலக்கும் பகுதி, அழுக்கோடு போய் ஒட்டிக்கொள்ளும். அதன் பின், சோப்பு மூலக்கூறுகளின் நீரை விரும்பும் பகுதியானது, வெளிப்புறம் இருக்கும். அப்போது சோப்பு மூலக்கூறோடு சேர்ந்து அழுக்கையும் நீரால் நீக்க முடியும். இத்தகைய சோப்பு கொரோனா வைரஸுக்கு எதிராக எப்படிச் செயற்படுகிறது?
அதற்கு கொரோனா வைரஸின் வேதியியல் வடிவமைப்பைப் பார்க்க வேண்டும். ஆர்.என்.ஏ. (RNA)
என்னும் மரபுப் பொருளின் மீது கொழுப்பாலான படலம்தான் கொரோனா வைரஸ்.
அதைத் தவிர, அதன் பரப்பில் புரதத்தால் ஆன குச்சி போன்ற அமைப்புகள் உண்டு. அந்தக் குச்சி போன்ற அமைப்புகள்தான் செல்களைத் துளைத்துத் தாக்குகின்றன.
கொழுப்புப் படலமும் அழுக்கு போல நீரை விலக்கும் அமைப்புதான். சோப்பின் நீரை விலக்கும் அமைப்பு கொழுப்புப் படலத்தைத் தாக்கி வைரஸ் செல்லின் மேற்புறப் படலத்தைத் தகர்க்கிறது.
அப்போது வைரஸ் செல் சிதைந்து செல்களின் உள்ளிருக்கும் ஆர்.என்.ஏ. வெளிவந்து வைரஸ் அழிக்கப்படுகிறது.
அதன் பின்னர், பிற அழுக்குகள் போல வைரஸ் செல்லின் பகுதிகள் சோப்பால் கழுவிவிடப்படுகின்றன. எனவே, சோப்பு போட்டுக் கைகழுவுங்கள்.
- ஹாலாஸ்யன்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us