1918-ஆம் ஆண்டு தனது கோரக்கரங்களால் உலகைத் தழுவியது ஸ்பானிஷ் காய்ச்சல். உலகம் முழுவதிலும் இக்காய்ச்சலுக்கு சுமார் 5 கோடிப் பேர் மரணமடைந்தனர். பலியானவர்களில் சுமார் 7 லட்சம் பேர் அமெரிக்கர்கள். குறிப்பாக 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் அங்கு 2 லட்சம் பேர் பலியாயினர்.
நாடு முழுவதும் இருந்த சவப்பெட்டி செய்வோரும், இறந்தவர்களைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் ஓய்வு ஒழிச்சலின்றி வேலைசெய்ய நேர்ந்தது. அதேநேரம், பொதுமக்கள், வெளியிடங்களில் அதிக அளவில் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
சவப்பெட்டிகளுக்கான தேவை அதிகரிக்கவே, அவை அதிக அளவில் உருவாக்கப்பட்டன. முதல் உலகப்போரில் இறந்தவர்களுக்காகத் தயாரான சவப்பெட்டிகளை இரயிலோடு கடத்திய நிகழ்ச்சிகளும் கூட நடைபெற்றன. தட்டுப்பாடு காரணமாக, ஒரே சவப்பெட்டியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சூழலும் நிலவியது.
அக்காலகட்டத்தில், பிலடெல்பியா நகரில் மட்டும் ஒரே நாளில் ஆயிரம் பேர் இறந்தனர். நகர் முழுக்க பிணங்களைச் சுமந்துசெல்லும் குதிரை வண்டிகள் நிரம்பியிருந்ததைக் கண்டவர்கள், அது ப்ளேக் தாக்கிய மத்திய கால ஐரோப்பிய நகரத்தைப்போல் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இப்படித்தான் மனிதர்களை உலுக்கிய நோய்களின் வரிசையில் ஸ்பானிஷ் ஃப்ளூவும் இணைந்தது.
- பாசன்