சமீப காலமாக விலங்குகள் மூலம் பரவும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இப்படியான தொற்று பரவ, மனிதர்கள்தான் முக்கிய காரணிகளே தவிர, விலங்குகள் அல்ல. விலங்கு வழி நோய்கள் (Zoonotic diseases) அதிக அளவில் தாக்குவதற்கு, பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தொடர்ச்சியாக அழித்து வருவது முக்கிய காரணம் என, சுற்றுச்சூழல், விலங்கியல் நிபுணர்களும், இயற்பியல் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.
பல்லுயிர்ப் பெருக்கத்தடை என்பது, விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல், உயிரோடு விலங்குகளை விற்பனை செய்தல், அதன் மூலம் மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரவுதல் என, நம்முடைய தவறுகளால் ஏற்படும் முக்கிய பிரச்னை.
நிபா, எபோலா, ஜிகா, கொரோனா போன்ற பலவகையான தொற்று நோய்கள் விலங்குகள் மூலம் வந்திருப்பதால், இந்தக் கருத்தில் பல நாட்டு விஞ்ஞானிகள் ஒத்துப்போகின்றனர். இதை அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யும் ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மனித இனத்திற்குத் தொற்றுநோய்கள் மிகவும் ஆபத்தானது என, சர்வதேச பல்லுயிர் மற்றும் சூழல் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகின் 17% நோய்களுக்கு, நோய் பரப்பும் உயிரிகள் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தொற்றுநோயால் உலகில் 7,00,000 மக்கள் இறந்துள்ளனர். விலங்குகளின் வாழ்விட அழிப்பால், மனிதர்களுக்குத் நோய்த்தொற்றுகள் எளிதில் பரவுகின்றன.
'கோவிட் -19' எனப்படும் கொரோனா தொற்று, வெளவால்கள் மூலம் பரவியதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எனினும் ஏதோ ஒரு விலங்கு அல்லது பறவை எச்சத்தில் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என்பது, பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்து. எவ்வாறு பரவியது என்பதற்கான அறிவியல்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் முன்னாள் நுண்ணுயிரியல் தலைவர் ஷோபா ப்ரூர் கூறியதாவது, ''விலங்கு வழி நோய்கள் தற்போது அதிகரித்துள்ளது என்பது உண்மை. அதற்குக் காரணம், மனித வாழ்விடங்களில் இத்தகைய கிருமிகள் தற்போது பரவுகின்றன. இதுவரை அவற்றின், வாழ்விடம் மனிதர்களை விட்டு விலகியே இருந்தது.” என்றார்.
தேசிய இயற்பியல் அறிவியல் மையத்தின் உதவிப் பேராசிரியர் உமா ராமகிருஷ்ணன், ”மற்ற உயிரினங்களைவிட, எலிகள், வெளவால்கள் ஆகியவைதான் நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வாழ்விட அழிப்பு, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்” என்றார்.
இப்போது நிகழ்ந்துள்ள கொள்ளை நோயான கொரோனா இதற்கான உதாரணம்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தை பல அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. நியூயார்க் நகரில் அமைந்துள்ள, பழங்குடி அமைப்பும், பல்லுயிர்ப் பெருக்கத்திற்குத் தேவையான இடத்தைவிட்டு வைத்தால் மட்டுமே, மக்கள் தப்பிக்க முடியும் என்ற கருத்தைக் கூறியுள்ளது.
- சு. சந்திரசேகரன்