நோய் பரவும் விதம்! | Kalvimalar - News

நோய் பரவும் விதம்!

எழுத்தின் அளவு :

நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பல்வேறு வழிகளில் பரவும். சில நோய்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளிலும் பரவுகின்றன.

நேரடித் தொற்று: நோய்க்கிருமி உள்ள ஒரு மனிதன் அல்லது விலங்கிடமிருந்து மற்றொரு மனிதன் அல்லது விலங்கிற்குப் பரவுவதே நேரடித் தொற்றாகும்.
1. மனிதன் - மனிதன்: நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபரைத் தொடுவதாலோ அல்லது உடல் திரவத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வதாலோ மற்றொரு நபருக்கு நோய் பரவுகிறது. உதாரணம்: முத்தம் கொடுத்தல். சில சமயங்களில் கருவுற்றிருக்கும் தாய் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்குத் நோய்த்தொற்று பரவும் வாய்ப்புண்டு.

2. நீர்த்திவலை (Droplets): ஒருவரின் உடலில் நோய்த்தொற்று இருக்கும்போது, இருமினாலோ, தும்மினாலோ வெளிவரும் நீர்த்திவலையால் அருகில் இருப்பவர்கள் மேல் பட்டு அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும்.

மறைமுகத் தொற்று:
நோயால் பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்து ஆரோக்கியமான மனிதனுக்கு எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாமலே நோய் பரவினால் அதுவே மறைமுகத் தொற்றாகும். இதில் இருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
1. ஆசன-வாய் வழி: மலமானது (மிக நுண்ணிய அளவில்) நோய்த்தொற்று உள்ள மனிதனிடம் இருந்தோ விலங்கிடம் இருந்தோ இன்னொரு மனிதனுக்கு வாய்வழியாகப் பரவுகிறது. இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், சமையல்காரர்கள் மலம் கழித்துவிட்டு கையை சரியாகக் கழுவாமல் அதே கையால் சமைப்பதால் நிகழ்கிறது.
2. காற்றுவழி: சில நேரங்களில் நோய்த்தொற்று உள்ள மனிதன் தும்முவதாலோ, இருமுவதாலோ, சிரிப்பதாலோ - ஏன் சுவாசித்தால்கூட அந்தக் கிருமி காற்றில் சிறிது நேரத்திற்கு நிலைத்து இருக்கும். அந்தக் காற்றை மற்றொரு மனிதர் சுவாசிப்பதால் ஏற்படுவதே காற்றுவழி நோய் பரவுதலாகும்.
3. தொடுபொருட்கள்: நோய்த்தொற்று உள்ள மனிதரிடம் இருந்து ஆரோக்கியமான மனிதனுக்குப் பரவும் ஊடகமாக தொடுபொருட்கள் விளங்குகின்றன. உதாரணமாக, வெளிநாடுகளில் தண்ணீர் குடிக்க ஆங்காங்கே குழாய்கள் இருக்கும். அத்தண்ணீரை நோய்க்கிருமி உள்ள மனிதன் வாய்வைத்துப் பருகுவதால், தண்ணீர் மாசடைந்து, பின் ஓர் ஆரோக்கியமான மனிதன் நீரைப் பருகினால், அந்த நோய் அவனுக்குப் பரவ வாய்ப்புள்ளது. மற்ற உதாரணங்கள்: கதவின் கைப்பிடி, மாடிப்படி கைப்பிடி மற்றும் பலர் உபயோகிக்கும் கணினியின் விசைப்பலகை மூலமும் நோய்த் தொற்று பரவும்.
ஓம்புயிர் (Host) தொற்று: ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கோ அல்லது ஒரு விலங்கிடமிருந்து மனிதனுக்கோ நோயைப் பரப்ப, ஓர் உயிரி ஊடகமாகச் செயற்படுவதே ஓம்புயிர் தொற்றாகும்.
விலங்கு வழி நோய்த்தொற்றின் ஒரு வகை இது. (உதாரணமாக, ஒரு முதுகெலும்பு உள்ள உயிரினங்கள், நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு, நேரடியாக மனிதனுக்குப் பரப்பும், ரேபீஸ் (வெறிநாய்க்கடி நோய்), போன்ற நோய் வகையிலிருந்து வேறுபட்டது).
பூச்சிக் கடி: ஓம்புயிர் பரவும் நோய்கள் பெரும்பாலும் பூச்சிக் கடிகளாலேயே பரவுகின்றன. உதாரணமாக, ஒரு கொசு, மலேரியா பாதிக்கப்பட்ட மனிதரின் இரத்தத்தைக் குடிக்கும்போது, அவருடைய இரத்தத்தில் இருக்கும் மலேரியா ஒட்டுண்ணி கொசுவிடம் வருகிறது. பின் அதே கொசு ஆரோக்கியமான மனிதரைக் கடித்தால் அந்த ஒட்டுண்ணி அவருக்குப் பரவுகிறது. பிளேக் (Plague) என்னும் கொடிய நோயால் ஐரோப்பாவில் 14ஆம் நூற்றாண்டில் கோடிக்கணக்கானோர் இறந்தனர். அது எலிகளிடமிருந்து மனிதனுக்கு உண்ணிகளின் மூலமே பரவியது.

ரோகிணி முருகன்

வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்குமா? வெவ்வேறு வைரஸ்களுக்குத் தகுந்தாற்போல் மாறிமாறி இருக்குமா?
குறிப்பிட்ட வைரஸ் நம் உடலுள் எந்த அமைப்பைப் பாதிக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல்தான் அறிகுறிகளும் இருக்கும். இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் சுவாச அமைப்பைப் பாதிக்கும். அதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், சளி, ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கும். ரேபிஸ் வைரஸ் வேறு மாதிரி அறிகுறிகளைக் காட்டும். நமக்கு எந்த உடல் உள்ளுறுப்பு அந்த வைரஸால் தாக்கப்படுகிறதோ அந்த உறுப்பின் செயற்பாடுகளில் பாதிப்பு இருக்கும். அதையொட்டியே அறிகுறிகளும் இருக்கும்.

டாக்டர் வசந்தி
துணை இயக்குநர், கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us