மாணவர்களை வரவேற்க மாநகராட்சி பள்ளிகள் தயார் | Kalvimalar - News

மாணவர்களை வரவேற்க மாநகராட்சி பள்ளிகள் தயார்அக்டோபர் 27,2021,21:17 IST

எழுத்தின் அளவு :

நீண்ட இடைவெளிக்கு பின், நவ., 1ம் தேதி முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளதால் மாணவர்களை வரவேற்க, சென்னை மாநகராட்சி பள்ளிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் என, 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக, 90 ஆயிரம் மாணவர்கள் வரை படித்து வந்தனர். 


ஊரடங்கால் பலர் வேலையிழந்த நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர், இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.


மேலும், மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் பள்ளிகள் அளவிற்கு உயர்த்தப்பட்டதால், தயக்கமின்றி மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். அதன்படி நடப்பு கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகளில், 1.10 லட்சம் மாணவர்கள் என, சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 


இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பள்ளிகள் துவங்கி நடந்து வரும் நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவ., 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.


பள்ளிகள் திறப்புக்கு முன், மாணவர்களின் பெற்றோரிடம், அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.மாணவர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பான சூழல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், தொற்று பாதிப்பு ஏற்படாது; அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக, பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கடைப்பிடிக்கப்படும் வழிகாட்டி நெறிமுறைகளை காட்டிலும், சற்று கூடுதலான வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு ஏற்ப கழிப்பறை, கை கழுவும் வசதி, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலான வகுப்பறைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


அனைத்து பள்ளிகளிலும் கை கழுவும் வசதி, சோப்பு, தண்ணீர் கட்டாயம் வைத்திருக்க, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உணவு சாப்பிடும் இடங்களில், கூட்டமாக அமர்வதை தவிர்த்து, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்திருப்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.


மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறித்து பரிசோதிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தலைமையாசிரியர் முதல் பள்ளியின் கடை நிலை ஊழியர்கள் வரை, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை மாநகராட்சி உறுதி செய்துள்ளது. கூடுதல் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், வகுப்பறை எண்ணிக்கைக்கு ஏற்ப, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


இதன்படி, ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால், ஒரு மாணவருக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டி இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற பள்ளிகளை அடையாளம் கண்டு, சுழற்சி முறை வகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி கல்வித்துறை செய்து வருகிறது.


ஆசிரியர்களுக்கு பயிற்சி!


சென்னை மாநகராட்சி பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 36 ஆயிரத்து, 911 மாணவர்கள்; 25 ஆயிரத்து, 169 மாணவியர் என, 60 ஆயிரத்து, 80 பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பறையிலும், 20 மாணவர்கள், சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட உள்ளனர். 


வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை, பெற்றோர் தயக்கமின்றி பள்ளிக்கு அனுப்பலாம். -பாரதிதாசன், மாநகராட்சி கல்வி அலுவலர்


&'குழந்தையாக பழகுங்கள்!&'


சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:


ட்குழந்தைகள் முதல் வளர் பருவத்தினர் அதிகளவில் இருப்பதாலும், பள்ளிகள் நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்படுவதாலும், மாணவர்களிடத்தில் குழந்தையாக பழகி, அவர்களை பள்ளி சூழலுக்கு பக்குவப்படுத்தவும், பெற்றோர்களாக இருந்து கவனித்துக் கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி உள்ளோம். இதனால், அச்சமின்றி தங்களது குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us