திருச்சி: &'அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம், எட்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்&' என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது.
தீர்மானங்கள் விபரம்:
முதன்மை கல்வி அலுவலரின் பணிச்சுமையை குறைக்க, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிச்சுமையை குறைக்க, கூடுதல் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும்.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர், இரவு காவலர், இளநிலை உதவியாளர்களை நியமிக்க வேண்டும். அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது, எட்டு பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களாக, மூத்த தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி வர்ணம் பூச வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.