ராணுவ அகாடமி தேர்வு எழுத பெண்களுக்கு அனுமதி! | Kalvimalar - News

ராணுவ அகாடமி தேர்வு எழுத பெண்களுக்கு அனுமதி! செப்டம்பர் 22,2021,10:56 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: முப்படையில் நிரந்தர வீரர்களாக பணியில் சேருவதற்கான தேசிய ராணுவ அகாடமியின் நுழைவுத் தேர்வு எழுத, பெண்களையும் அனுமதிக்கும் அறிவிக்கை அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை வீரராக நிரந்தர பணியில் சேருவதற்கான என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. இந்த தேர்வை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வை ஆண்கள் மட்டுமே எழுத தகுதி பெறுகின்றனர். பெண்கள் இந்த நுழைவு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்து குஷ் கல்ரா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


அதன் விபரம்:


தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர் 10வது அல்லது பிளஸ் - 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 15 - 18 வரையில் இருக்க வேண்டும். திருமணம் ஆனவராக இருக்கக் கூடாது.


உடற் தகுதி சோதனை


இந்த தகுதிகளை பூர்த்தி செய்வோர் தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வில் தேர்ச்சி அடைவோருக்கு நேர்முக தேர்வுகள், மருத்துவ மற்றும் உடற் தகுதி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதிலும் தேர்ச்சி அடைவோருக்கு தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின், சம்பந்தப்பட்ட படைப் பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டு, படையில் நிரந்தர வீரர்களாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.


மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் இருந்தாலும் இந்த தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதற்கு பாலினம் மட்டுமே காரணமாக கூறப்படுகிறது. பெண்கள் நிராகரிக்கப்படுவதற்கு அரசியலைப்புக்கு உட்பட்டு விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்த பாரபட்சமான நடவடிக்கை வாயிலாக பாகுபாடற்ற அரசியலமைப்பு மதிப்பீடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் அவமதித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராணுவ அமைச்சகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


அதன் விபரம்:


தேசிய ராணுவ அகாடமி நுழைவுத் தேர்வு வாயிலாக முப்படைகளுக்கான நிரந்தர வீரர்களை தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதிப்பது என, மத்திய அரசும், ஆயுத படைகளின் உயர்மட்ட பிரிவும் முடிவெடுத்து உள்ளன. இதற்கான முறையான அறிவிக்கை, அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும்.


பயிற்சி முறைகள்


இந்த கால அவகாசத்தை மனதில் வைத்து பெண்களுக்கான தேர்வு மற்றும் பயிற்சி முறைகள் குறித்து திட்டமிடப்படும். பெண் தேர்வர்களுக்கான பாட திட்டம் மற்றும் பயிற்சி வகுப்புகளை வடிவமைக்க நிபுணர்கள் குழு நியமிக்கப்பட உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் பெண்களின் எடை, உயரம் போன்றவை முக்கிய தகுதிகளாக பரிசீலிக்கப்படும். 


ஆண்களுக்கு உள்ளதை போலவே பெண்களுக்கு வேறு விதமான உடற் தகுதிகள் மதிப்பிடப்படும். அவை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். ஆயுதப்படை இயக்குனரகம், மருத்துவ சேவை பிரிவு மற்றும் நிபுணர் குழு இணைந்து முப்படைகளுக்குமான உடல் தகுதியை முடிவு செய்யும்.


வயதில் ஆண்களுக்கு இணையான தகுதி பெண்களுக்கு கடைப்பிடிக்கப்படாது. பயிற்சியில் உடற் பயிற்சி, ராணுவ பயிற்சி, விளையாட்டு பயிற்சி ஆகியவற்றில் பெண்களுக்கு பிரத்யேகமான பயிற்சி முறைகள் வகுக்கப்பட உள்ளன.


துப்பாக்கி சுடுதல், சகிப்புத்தன்மை பயிற்சி, கடுமையான நிலப்பரப்புகளில் வாழ்வது உள்ளிட்ட பயிற்சிகளை சரியாக செய்ய முடியவில்லை எனில், அவை களத்தில் பெண் அதிகாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதில் சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி திட்டம் வடிவமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us