நீட் மட்டுமே அல்ல வாழ்க்கை! | Kalvimalar - News

நீட் மட்டுமே அல்ல வாழ்க்கை!செப்டம்பர் 20,2021,13:13 IST

எழுத்தின் அளவு :

நீட் என்ற, தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று என்று ஒரு தமிழக அமைச்சர், நீட் தேர்வு நாளின் போது டிவிக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது, பின்னணியில், எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... என்ற பாடல் வரிகள் ஒலித்து கொண்டு இருந்தன.

இந்த நீட் அரசியல், தமிழகத்தில் அனிதாவில் ஆரம்பித்து, இந்த ஆண்டு சவுந்தர்யா வரை, 13 பிள்ளைகளுக்கும் மேலாக காவு வாங்கியுள்ளதை, கண்கள் பனிக்க, இதயம் கனக்க கடந்து போக முடியவில்லை. &'நீட் சமூக நீதிக்கு எதிரானது; கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிரானது; பின்தங்கிய, பட்டியல் இன மக்களை மேலே வர விடாமல் தடுப்பது...&' என தொடர்ந்து கூறி, கிராமப்புற, அரசுப்பள்ளி மற்றும் பட்டியலின மக்களை, நீட்டிற்கு எதிராக திருப்ப அரசு நினைக்கிறது.


மேலும் இந்த பிரிவினருடன், கட்சியினரும் சேர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வு ஆதரவாளர்களை புறக்கணித்தும், விமர்சனங்களை தொடர்ந்து வைக்கின்றனர்.


தி.மு.க., மேடைக்கு மேடை பேச்சு


&'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்&' என்பது போல, &'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரே தீர்மானத்தில் நீட்டை ஒழிப்போம்&' என இன்றைய முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மேடைக்கு மேடை பேசினார்.


அவரின் மகனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாகவும் ஆகியுள்ள உதயநிதி, &'நீட்டை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்கிறது. சூடு, சொரணை உள்ள அரசா இருந்தால் நீட்டை தடுத்திருக்க முடியும்&' என அப்போது அறைகூவல் விடுத்தார்.


ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் தகாத வார்த்தைகளை கூறி, &'எதுவும் நடக்காது என தெரிந்தும் தீர்மானம் போட்டது எதற்கு?&' என, அ.தி.மு.க., அரசை சாடினார். 


முதல்வரின் சகோதரி கனிமொழியோ, &'இது திராவிட மண். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஓட ஓட விரட்டுவோம்&' என வீர வசனம் பேசினார்.


இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், ஒரு அமைச்சர், &'அப்படி நீட்டை நீக்க முடியாவிட்டால், மாணவர்களை &'காப்பி&' அடிக்க விடுவோம்&' என்றார். ஏன் இதையெல்லாம் ஞாபகப்படுத்துகிறேன் என்றால், தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். மாணவி அனிதாவின் தற்கொலையில் அரசியல் செய்ய ஆரம்பித்து, ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் மனதை மடைமாற்றம் செய்ய முயற்சிப்பது ஏன் என மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


எப்போது, திராவிடம் பேசி, தமிழகத்தை பிற மாநிலங்களிலிருந்து அன்னியப்படுத்த முயற்சி துவங்கியதோ, அன்றே, கல்வியிலும் அரசியல் புகுந்து விட்டது. கோவில்களில் ஆரம்பித்து, கல்குவாரியில் தொடர்ந்து, ஆற்று மணல் கொள்ளையில் கைகோர்த்து, கல்வியிலும் நுழைந்து, எதிர்காலத்தை சூனியமாக்கி விட்டனர்.


நம்மில் பெரும்பாலானோர் அதை உணராமல் ஊமையாகிப் போனோம். தமிழக கட்சிகளின் எண்ணத்தை உணர்ந்தவர்கள் நன்கு படித்து, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் வேலைக்கு சென்று, நம் நாட்டின் புகழை ஏந்தி பிடிக்கின்றனர். எனவே, நீட்டிற்கு பின்னால் இருக்கும் அரசியலை உணராத வரை, 100 அனிதாக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்த அரசியல் களம்.


கடந்த 2007க்கு முன் வரை, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வு இருந்தது. அதற்கு பின், மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதிலிருந்து 2017ல் நீட் வரும் வரை, எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவ, பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்தனர் என்று அரசியல்வாதிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். 


தனியார் பொறியியல் கல்லுாரிகள் அதிகமானதால், தேவைக்கும் அதிகமாக காலியிடங்கள் இருப்பதால், பொறியியலுக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லாமல் ஆகிவிட்டது. அதனால் அதன் தரம் எப்படி உள்ளது என்பதை நாடறியும். ஆனால், உயிர் காக்கும் மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ படிப்புக்கு தகுதி வாய்ந்த, தரமான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லவா... அதற்காகத் தான் நீட் தேர்வு நடக்கிறது.


நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இன்று மத்திய அரசை எல்லாவற்றிலும் எதிர்க்கும் மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், பஞ்சாப் என எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வு சுமுகமாக நடந்து வருகிறது. அங்கு யாரும், &'நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லையே; தேர்வை சரியாக எழுதவில்லையே; எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையே...&' என உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை.


ஏனெனில், அந்த மாநிலங்களில் நீட் தேர்வில் அரசியல் இல்லை; ஆனால், நம் மாநிலத்தில் தலைவிரித்தாடுகிறது. தமிழகம் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் நீட் மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத் தேர்வு உள்ளது. அந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்குத் தான், கல்லுாரிகளில் படிக்க இடம் கிடைக்கிறது. அதனால், நீட் தேர்வு அந்த மாநிலங்களின் மாணவர்களுக்கு கடினமான ஒன்றாக இல்லை. 


ஆனால், தமிழக கல்வி நிலையங்களில் அரசியல் தலையீடு புரையோடி போயுள்ளதால், கல்வித்தந்தைகளின் கஜானாவை காப்பாற்ற, தொடர்ந்து களப்பலி கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில் கற்பித்தல் தரம் மிகக் குறைவாக இருப்பதாலும், மனப்பாடம் செய்து தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வைக்கப்படுவதாலும், மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், நீட் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.


ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பு


நீட் தேர்வில் வெற்றி பெற்று, குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு, மருத்துவம் படிக்க, சாதாரண பட்டப்படிப்புக்கு ஆகும் செலவு தான் ஆகும். நீட் வருவதற்கு முன், தமிழகத்தில் இரட்டை இலக்கங்களில் கூட இல்லாத மருத்துவ மாணவர் சேர்க்கை, இப்போது மூன்று இலக்கங்களைத் தாண்டி செல்கிறது.நிறைய ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், கல்வித்தந்தைகளை உருவாக்கியவர்கள், நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து, மாணவர்களை சீரழித்துவருகின்றனர்.


ஆனால், இவர்களைப் பற்றி கவலைப்படாமல், நீட் தேர்வு எழுத தமிழகத்திலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே, அரசியல் தலைவர்களின் பேச்சை, தமிழக மாணவர்கள் பொருட்டாக மதிக்கவில்லை என்பது புலனாகும். எனினும் ஒரு சில மாணவர்கள், தமிழக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி, &'நீட் தேர்வு ரத்தாகும்&' என காத்திருந்து, அப்படி ஆகாததால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.


நீட் போலவே மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களுக்கான ஜே.இ.இ., என்ற தேர்வை, ஆண்டுதோறும் ஆறு லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.மத்திய அரசின் பொறியியல் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வு மூலம், 23 - 24 ஆயிரம் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயரிய கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.


ஜே.இ.இ., தேர்வில் தவறும் எந்த மாநில மாணவரும், எந்த சூழ்நிலையிலும், தற்கொலை போன்ற தவறான முடிவை எடுப்பதில்லை. நீட் போலவே ஜே.இ.இ.,யிலும் வென்றால், படிக்க நன்கொடை கிடையாது; யாருக்கும் முன்னுரிமை கிடையாது; எல்லாரும் சமம். அமைச்சரின் பிள்ளையாக இருந்தாலும், ஆண்டியின் பிள்ளையாக இருந்தாலும் நிலைமை ஒன்று தான். 


தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் என குரல் கொடுப்பவர்களால், மாணவர்களின் மொழி அறிவு பாதிக்கப்படுகிறது. ஆனால், இருமொழி கொள்கையை பின்பற்றும் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் நடத்தும் சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.இ., - சி.எஸ்.ஐ.இ., போன்ற பள்ளிகளில் தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் பன்னாட்டு மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. எனவே, தமிழக அரசியல் தலைவர்கள் கூறுவதை நம்பாமல், நம் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும்; பல மொழிகளை கற்க வேண்டும்.


பொய் பேச்சுகளை நம்பாதீர்


தேசிய அளவில் நடத்தப்படும், சர்வதேச அளவில் நடத்தப்படும் கல்வி நிலையங்களின் நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் சேர்ந்து மருத்துவம், இன்ஜினியரிங் கற்க வேண்டும். 


உலகின் சிறந்த அறிவை எல்லாம் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதன் மூலம் நம் நாட்டின், தமிழகத்தின் புகழ் ஓங்க வேண்டும். அதற்கு முக்கியமாக தமிழக அரசியல்வாதிகளின் பொய் பேச்சுகளை நம்பக் கூடாது; சிறந்த முறையில் படிக்க வேண்டும். குறிப்பாக, தமிழக அரசியல்வாதிகளின் நீட் பேச்சை நம்பி, உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.


மருத்துவத்திற்கான நீட் தேர்வில் வெற்றி பெற முடியாவிட்டாலும் உலகம் பரந்து விரிந்துள்ளது என்பதை உணர வேண்டும்.&'பைலட்&'டாக முடியவில்லையே என கவலைப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தற்கொலை செய்திருந்தால், நமக்கு ஒரு ஏவுகணை நாயகன் கிடைத்திருக்க மாட்டார். வழக்கறிஞராக முடியவில்லை என ஜெயலலிதா வாழ்க்கையை முடித்திருந்தால், தமிழகத்தின் முதல்வராகி இருக்க மாட்டார்.


மகாகவி பாரதியைப் பார்த்து &'பித்தன்&' என்றவர்களால் அவர் மனமுடைந்து இருந்தால், இன்று நமக்கு ஒரு மகாகவி கிடைத்திருக்க மாட்டார். இப்படி வெற்றி பெற்ற பலரும் அவர்கள் கனவுகளுக்காக தங்களை வருத்தாமல், வாழ்வை வசப்படுத்தியவர்கள். மருத்துவம் தாண்டி 1,000த்திற்கும் மேற்பட்ட படிப்புகள் நம் நாட்டில் உள்ளன.


இதில் ஒரு சிலவற்றை மருத்துவத்திற்கு அடுத்த இலக்காக நிர்ணயிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.இதைச் சொல்வது எளிது; நடைமுறைப்படுத்துவது கடினம் என சொல்லலாம். பேருந்து நடத்துனராக இருந்த சிவாஜி ராவ் இன்று பார் போற்றும் ரஜினிகாந்த் ஆனதற்குப் பின் உழைப்பு, நம்பிக்கை இருந்தது.


நான் 10ம் வகுப்பு முடித்த பிறகு, தொழிற்கல்வி படிக்க முயன்று தோற்றேன். பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் போது வழக்கறிஞராவதே என் கனவு. ஆனாலும் கைக்கு எட்டவில்லை என கயிற்றில் உயிரை மாய்த்து இருந்தால், இன்று கல்வியாளராக மாறியிருக்க மாட்டேன்; 16க்கும் மேற்பட்ட முனைவர்களை உருவாக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்.


அடிப்படை உண்மை


நீட்டே இல்லாமல் இருந்தாலும் உரிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என்ற அடிப்படை உண்மையை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. நீட்டிற்கும் மேலே நீண்ட கல்வியுலகம் உள்ளது என்பதை மாணவரும், பெற்றோரும் உணர வேண்டும். வீணான அரசியல் மாயையில் சிக்கி, அடித்தட்டு மக்களுக்கு பேராயுதமாகக் கிடைத்திருக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை புறக்கணித்தால், நாம் கால ஓட்டத்தில் தனிமைப்பட்டு விடுவோம். 


காலச்சூழல், சமகால போட்டிகளுக்கு நம்மை நாம் உற்சாகமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; குறைகளை அறிந்து களைய முயற்சிக்க வேண்டும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்!


முனைவர் இரா.காயத்ரி கல்வியாளர்

இ- மெயில்: r.gayatrisuresh@yahoo.com 

மொபைல்: 094442 09529


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us