உங்களைப் போலவே சிலர் ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கிறார்கள். பட்டப்படிப்பில் மதிப்பெண் குறைவாகப் பெறுவது வேலைக்காக நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது ஒரு கேள்வியாக எழும் வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் நீங்கள் ஏன் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றீர்கள் என்பது உங்களுக்குத் தான் தெரியும். உடல்நலக் குறைவு, கவனமின்மை, சொந்தப் பிரச்னைகள் போன்ற ஏதாவதொரு காரணம் இருக்கலாம்.
இதில் எதை நேர்முகத் தேர்வில் கூறலாம், எதைக் கூறக் கூடாது என்பது நிச்சயமாக நீங்கள் யோசிக்க வேண்டிய ஒன்று. நேர்முகத் தேர்வில் உண்மையைத் தான் பொதுவாகக் கூற வேண்டும் என்பது ஒரு பொதுவான அறிவுரையாகக் கூறப்படுகிறது. எனினும் சில இடங்களில் நாம் சில காரணங்களை உருவாக்கிக் கூற வேண்டிய அவசியமும் இருக்கிறது.
கவனமின்மையால் மதிப்பெண் குறைந்து விட்டது என்று நீங்கள் கூறினால், கவனமின்மை என்பது உங்களது குணாதிசயமா எனக் கேட்கப்படலாம். இது போன்ற கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வதில் தான் உங்களது திறன் வெளிப்படும். உடல் நலக் குறைவு என்பதை பொதுவாக புத்திசாலித்தனமாக வெளிப்படுத்தினால் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். எப்படியென்றாலும் இரக்கத்திற்கு நேர்முகத் தேர்வுகளில் இடம் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.