மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., ஒதுக்கீடு அமல் | Kalvimalar - News

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி., ஒதுக்கீடு அமல்ஜூலை 30,2021,17:25 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், அனைத்து இந்திய ஒதுக்கீடு எனப்படும் மத்திய தொகுப்பில், ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கும், 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப் பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே இவை அமலுக்கு வருகின்றன.நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கான, &'நீட்&' எனப்படும் நுழைவுத் தேர்வு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்படுகிறது.


இதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 சதவீதம் மற்றும் முதுநிலை படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை, மத்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். மத்திய தொகுப்பில் உள்ள இடங்களில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த 2007 வரை, மத்திய தொகுப்பில் எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 2007ல் இருந்து, எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப் படு கின்றன.மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீடு சட்டம், 2007ல் அறிமுகம் செய்யப்பட்டது.


அந்த சட்டத்தில், ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப் பட்டு உள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களான சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லுாரி, அலிகர் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் ஹிந்து பல்கலையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய தொகுப்பின் கீழ் இந்த ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது.


பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை அளிப்பதற்காக, இரண்டு கல்வியாண்டுகளில் கூடுதல் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை.


ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் உத்தரவிட்டார்.


மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில், நடப்பு 2021 - 2022 கல்வியாண்டில் இருந்து இட ஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய தொகுப்பில் உள்ள இடங்களில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படும்.இந்த முடிவால், எம்.பி.பி.எஸ்., படிப்பில் 1,500 ஓ.பி.சி., பிரிவு மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 550 மாணவர்களும் பயன்பெறுவர்.


பட்ட மேற்படிப்பில் 2,500 ஓ.பி.சி., பிரிவு மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 1,000 மாணவர்களும் பயன்பெறுவர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய தொகுப்பு முறை, 1986ல் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள மாணவரும், நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள கல்லுாரியில் படிக்கும் வாய்ப்பு உருவானது.


மத்திய தொகுப்பு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவின்படி, நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு பிரிவினரும், நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள கல்லுாரியிலும் சேர முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


&'மருத்துவக் கல்வியில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது&' என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


இளைஞர்களுக்கு வாய்ப்பு!


மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தி தரும். நம் நாட்டில் சமூக நீதியைக் கட்டிக் காப்பதில், இது புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.


-நரேந்திர மோடி, பிரதமர்


எத்தனை இடங்கள்?


மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது:


கடந்த 2014ல் இருந்து, மருத்துவக் கல்வியில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. அதன்படி, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்கள், 56 சதவீதம் உயர்ந்துள்ளன.


முதுநிலை பட்டப் படிப்புக்கான இடங்கள், 80 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், 179 புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில், 289 அரசு கல்லுாரிகள், 269 தனியார் கல்லுாரிகள் என, 558 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சிறந்த வாய்ப்பு!


இட ஒதுக்கீடு குறித்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: &'மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்&' என, மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நான் தொடர்ந்த வழக்கின் காரணமாக இதை நடைமுறைப்படுத்துவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தி.மு.க.,வுக்கு வெற்றி: முதல்வர் பெருமிதம்


&'இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில், அகில இந்திய தொகுப்பில், 27 சதவீதம் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது, தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி&' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:


மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வந்து, கால் நுாற்றாண்டு ஆன பின்னும், முழுமையாக செயல் வடிவம் பெறவில்லை. இந்நிலையில், நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளது. சமூக நீதி வரலாற்றில் முக்கிய நகர்வாகும்.


மாநிலங்கள், அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கும், 15 சதவீத மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளங்கலை இடங்களிலும், 50 சதவீதம் முதுநிலை மருத்துவ இடங்களிலும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும், மத்திய அரசின் முடிவு, தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.


குறிப்பாக, தி.மு.க.,வின் சமூக நீதிப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மத்திய அரசு அறிவிப்பில், இந்த இட ஒதுக்கீட்டின்படி, நாடு முழுதும், 1,500 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 2,500 பேருக்கு, முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும் என, கூறப்பட்டுஉள்ளது. நடப்பு கல்வியாண்டில் இருந்து, 4,000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, மருத்துவ கல்வி கிடைக்கப் போவதை, தி.மு.க., சட்ட போராட்டம் வழியாக உறுதி செய்து சாதனை படைத்திருக்கிறது.


எனினும், 69 சதவீத ஒதுக்கீட்டின்படி, பிற்படுத்தப்பட்டோருக்கான, 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான், எங்களது உறுதியான கோரிக்கை. அத்தகைய சமூக நீதியை அடையும் வரை, தி.மு.க., அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us