பொறியியலில் தாய்மொழி உதவாது! | Kalvimalar - News

பொறியியலில் தாய்மொழி உதவாது!ஜூன் 08,2021,12:07 IST

எழுத்தின் அளவு :

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


டாக்டர் டி.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, &'இ - மெயில்&' கடிதம்:


தமிழ் உள்ளிட்ட, எட்டு பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வியை பயிற்றுவிக்க, ஏ.ஐ.சி.டி.இ., என்ற அகிலஇந்திய தொழில்நுட்ப கழகம் அனுமதி வழங்கி உள்ளது.


&'இது, தமிழுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்; கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிக்க நல்ல வாய்ப்பு&' என பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் இது முரண்பாடான கருத்து என்பதை, 2019-ல் வெளியான செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


கடந்த, 2010ல் அண்ணா பல்கலை, &'சிவில், மெக்கானிக்&' பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆரம்பம் முதலே, அதற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.அண்ணா பல்கலையின் சார்பில் அளிக்கப்பட்ட தகவல்படி, 2019-ம் ஆண்டு நிலைமை மிக மோசமாக இருந்தது.


திருச்சி, திண்டிவனம், துாத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருக்குவளை உட்பட, 12 இடங்களில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், சராசரியாக, 1.6 முதல், 6 சதவீதம் வரை தான் தமிழ் வழி பாடத்திட்டத்திற்கான இடங்கள் நிரம்பின. அதாவது, 120 இடங்கள் உடைய திருச்சியில், 44 சீட்டுகள் மட்டும் நிரம்பின. மற்ற கல்லுாரிகளில் அதிகபட்சமாக, எட்டு இடங்களில் தான் மாணவர்கள் சேர்ந்திருந்தனர். ஆரணியிலும், அரியலுாரிலும் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இது, அண்ணா பல்கலை அதிகாரிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.


மேலே கூறப்பட்ட இடங்களில், தமிழ் வழி பொறியியல் கல்வி நடைமுறையில் இருப்பது, யாருக்கும் தெரியாதா என்ன?தமிழ் வழி கல்வி குறித்து, அரசு தான் ஊக்குவிக்க மறந்து விட்டதா?தரமான கல்வி இல்லாததாலும், மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், தமிழகத்தில் இருந்த, 525 பொறியியல் கல்லுாரிகளில், 126 கல்லுாரிகள் மூடுவிழா கண்டுவிட்டன.


ஆண்டுதோறும் பொறியாளர் பட்டம் முடித்து வெளியே வரும் லட்சக்கணக்கான பட்டதாரிகளில், 40 சதவீதம் பேர் தான் வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதியுடன் உள்ளனர் என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 


லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பொறியியல் படித்த மாணவர்கள், கிடைத்த வேலையை, மிக குறைந்த சம்பளத்திற்கு பார்த்து வருகின்றனர். தரமான கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களே தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான போட்டி தேர்வுகளில் பங்கெடுக்க திணறுகின்றனர்.


தரமான தொழில் நிறுவனங்கள், ஆங்கிலம் தெரியாதவரை உள்ளே நுழையவே விடாது. தமிழில் பொறியியல் படிப்போருக்கு, வேலைவாய்ப்பு என்ன என்பதை, அரசு கூறுமா? சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழி வழி கல்வி நடைமுறையில் இருப்பதை, நம்மோடு ஒப்பிடுவது அர்த்தமற்றது.


காரணம், அந்நாடுகளில் ஒரே தாய்மொழி தான். மேலும், அந்நாடுகள் வேலை வாய்ப்பை அள்ளித்தரும் உயர்ந்த நிலையில் உள்ளன. நாம், வேலை தேடி அலையும் பரிதாப நிலையில் இருக்கிறோம். ஆகையால், தாய்மொழியில் பொறியியல் கல்வி என்பது, நம் மாணவர்களுக்கு உதவாது. கிராமத்து மாணவர்களுக்கு உதவுவதாக எண்ணி, அவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விடாதீர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us