கடந்த 2019ம் ஆண்டில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 931 இந்திய மாணவர்கள், கல்வி கற்க வெளிநாடுகளுக்கு சென்ற நிலையில், 2020ம் ஆண்டில், 2 லட்சத்து 61 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே சென்றுள்ளனர்.
லோக் சபாவில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் வி. முரளீதரன் பதில் அளிக்கையில் இத்தகவலை வெளியிட்டார். 2016ம் ஆண்டில், 3 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரும், 2017ம் ஆண்டில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 823 பேரும், 2018ம் ஆண்டில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 342 பேரும் கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது, 2020ம் ஆண்டில் சர்வதேச கல்விக்காக செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததற்கு கொரோனா தாக்குதலே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடியே 37 லட்சத்து 26 ஆயிரத்து 945 இந்தியர்கள் வேலைக்காக அயல்நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.