மாணவர்கள் பயன்பெறும் வகையில், திருவொற்றியூர் மேற்கில், நுாலகம் அமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் மேற்கில், அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர், கலைஞர் நகர், கார்கில் நகர் என, 20க்கும் மேற்பட்ட நகர்களில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, பத்துக்கும் மேற்பட்ட, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
கிழக்கு பகுதியிலும், 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், மேற்கு பகுதியைச் சேர்ந்த, 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மேலும், கல்லுாரி மாணவர்களும், இங்கு ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு, எல்லாவிதமான புத்தகங்களும் தேவைப்பட்டால், திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள, கிளை நுாலகத்திற்கு தான் வரவேண்டும்.
இங்கு வர போக்குவரத்து நெரிசல், ரயில் தண்டவாளம் என, பல இடர்பாடுகள் உள்ளன. அதனால், மேற்கு பகுதியிலேயே, மாணவர்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் பயன்பெறும் வகையில், தினசரி செயல்படும் நுாலகம் அமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.