மார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா? | Kalvimalar - News

மார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா? நவம்பர் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ.,முடித்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வேலைக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம் இருந்தது. படிப்பு முடித்தபின் எல்.ஐ.சி.,யில் ஏஜென்டாக பணி புரிய துவங்கினார்.

போட்டித் தேர்வுகள் எழுதி பாங்க், இன்சூரன்ஸ் போன்ற எண்ணற்ற நிதிச் சேவை நிறுவனங்களில் நிர்வாகப் பணிக்குச் சென்றால் நிம்மதியாக வேலை பார்க்கலாமே என அவரது வீட்டினரும் நண்பர்களும் கேட்டனர்.

ஆனால் எல்.ஐ.சி., ஏஜென்டாக அவர் ஒரு ஆண்டு தான் பணி புரிந்திருந்தாலும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடிந்திருப்பதை அவராலேயே உணர முடிந்தது. அவரது பெற்றோரும் அவரது மார்க்கெட்டிங் திறன்களை அறிந்து கொண்டனர். மார்க்கெட்டிங் தான் தனது துறை என்பதை அறிந்த அவர் தான் குடி
யிருந்த சிறு நகரத்திலிருந்து பெரிய நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். தற்போது வேகமாக வளர்ந்து வரும் நிதிச் சேவை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பணிக்கான விளம்பரங்களை கவனித்து அவற்றுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்.

நேர்முகத் தேர்வுகளில் அவரது ஆங்கிலம் தகராறு செய்தாலும் எனக்கு ஆங்கிலத் திறமை மட்டும் தான் இல்லை.. தமிழ் தகவல் தொடர்புத் திறனும் மார்க்கெட்டிங் திறனும் தன்னிடம் இருக்கிறது என வெளிப்படையாக நேர்முகத் தேர்வுகளில் கூறத் தொடங்கினார்.

ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலத்தை முன்னேற்றிக் கொள்வதிலும் பிரச்னை இல்லை என அவர் அளித்த உறுதியை ஏற்று அன்னிய நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்று அவருக்கு கள அதிகாரி வாய்ப்பை அளித்தது. பிசினஸ் செய்வதை விட புதிதாக ஏஜன்டுகளை நியமிப்பதில் அவர் பெரும் பணியாற்ற வேண்டியிருக்கிறது என அவருக்குக் கூறப்பட்டது.

ஒரு ஏஜென்டாக தான் பணி
புரிகையில் அவர் சந்தித்த பிரச்னைகளை நன்கு மனதில் அலசிப் பார்த்து, புதிதாக ஏஜென்டுகளை நியமிப்பதில் அவர் கவனம் செலுத்தினார். இதில் அவருக்குத் திறன் இருப்பதை அந்த நிறுவனம் மட்டுமல்லாது அவரும் இதை புரிந்து கொண்டு ஒரே ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தில் வேக வேகமாக மேலே மேலே செல்லத் துவங்கினார்.

தற்போது இவர் ஏஜென்டுகளை நியமிப்பதிலும் அவர்களின் நடைமுறைப் பிரச்னைகளைக் களைவதிலும் திறம் படைத்த இளம் அதிகாரியாக அடையாளம் காணப்படுவதால் வேறு கம்பெனிகளும் அவருக்கு மேலும் மேலும் அதிகம் சம்பளம் தரத்தயாராக இருக்கின்றன. இந்த நடைமுறை உதாரணம் நமக்குக் காட்டுவது ஒன்றே ஒன்று தான்.. உங்களது திறன் என்ன என்பதை நீங்கள் முதலில் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதற்கேற்ற வாய்ப்பை அறிய முயலுங்கள்.

விடாமல் உழைக்கத் தயாராக நீங்கள் இருக்கும் போது உங்களுக்கான வாய்ப்பு உங்கள் அருகிலேயே இருப்பதற்கான சூழல் தான் தற்போதைய பொருளாதாரத்தில் உள்ளது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவது மட்டுமே இன்றைய இளைஞனுக்கான கதவுகளைத் திறப்பதில்லை என்பதையும் நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் துறை உங்களது அடிப்படைத் திறனோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய இளைஞனுக்கான அடிப்படை விதியாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us