சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு, பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை: ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, விசாரணையை எதிர்கொண்டு வரும், அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு, பணிநீட்டிப்பு வழங்க, பல்கலை வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்துள்ளார். இந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, புகார்களுக்கு உள்ளான துணை வேந்தருக்கு, பணி நீட்டிப்பு வழங்க துடிப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
அவசரம் காட்ட வேண்டாம்
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ மாணவர்களுக்கு, வரும், ௧௯ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப் பட்டு இருக்கலாம் என்றாலும், நோய்த்தடுப்பு கோணத்தில், இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.