படிக்கும் காலத்திலேயே நாம் பெற வேண்டிய திறன்கள் எவை எனக் கூறலாமா? அவை நமக்கு நல்ல வேலை பெற உதவுமா? | Kalvimalar - News

படிக்கும் காலத்திலேயே நாம் பெற வேண்டிய திறன்கள் எவை எனக் கூறலாமா? அவை நமக்கு நல்ல வேலை பெற உதவுமா?நவம்பர் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பு முடித்து வெளியே வரும் நபரிடம் பொதுவாக எதிர்பார்க்கப்படுவது என்ன? அவரது பாடத்தில் திறனை எதிர்பார்க்கிறார்கள். மேலும் அவருடைய ஐ.டி., திறன், அதாவது இன்பர்மேஷன் டெக்னாலஜி திறன் என்பதும் மிக முக்கியமான தேவை. தற்போது ஐ.டி., தொடர்புடைய படிப்பல்லாத பிரிவுகளில் படிப்பவரிடம் கூட அவரது பிரிவில் ஐ.டி.,யை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது . அடுத்ததாக அவரது மேலாண்மைத் திறன். அதாவது மேனேஜ்மென்ட் திறன் ஒரு முக்கிய காரணியாகிறது.

குறிப்பிட்ட பணி தரப்படும் போது அவர் அதை எப்படி திறம்பட நிர்வகிக்கிறார் என்பதை இது குறிக்கிறது. நான்காவதாக அவரிடம் எதிர்பார்க்கப்படுவது அவரது தகவல் தொடர்புத் திறன். உங்களது தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் சில இடங்களில் தேசிய மொழியான இந்தியிலும் உங்களுக்குள்ள தகவல் தொடர்புத் திறன் என்பது மிக மிக முக்கியமான தேவையாக தற்போது கருதப்படுகிறது. கடைசியாக அவரது அடிப்படையான பொது அறிவுக்கும் முக்கிய
பங்கிருக்கிறது. இந்த 5 தேவைகளில் அனைத்து பட்டப்படிப்பு முடித்து வருபவர்களையும் கூறி விடலாம்.

இன்ஜினியரிங், கலைப் பிரிவு, அறிவியல் பிரிவு என அனைத்து பிரிவு பட்டப்படிப்பு முடித்து வருபவர்களிடமும் இவை தான் பரிசோதிக்கப்படுகிறது. கேம்பஸ் இன்டர்வியூ என்று மட்டுமல்லாமல் வேலை மேளாக்கள், நேர்முகத் தேர்வுகள், குழு விவாதங்கள் என அத்தனையிலும் இவை தான் பரிசோதிக்கப்படுகின்றன.
;
கல்லூரிகளில் இறுதியாண்டு படிப்பவராக இருந்தாலும், படிப்பு முடித்து வேலைக்காகக் காத்திருப்பவராக இருந் தாலும் உங்களை நீங்களே இவற்றைக் கொண்டு பரிசோதித்துக் கொள்ள முடியும். கல்லூரியோ பல்கலைக்கழகத்திலோ நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை இவை பரிசோதிப்பதில்லை. மாறாக, குறிப்பிட்ட பாடத்தை நீங்கள் எப்படி புரிந்து கொண்டு மனதில் வைத்திருக்கிறீர்கள் என்பது தான் பரிசோதிக்கப்படுகிறது.

பி.காம்., முடித்து விட்டு வருபவர் கம்ப்யூட்டரின் உதவியோடு எப்படி அவரது பணிகளை மேற்கொள்ள முடிகிறது என்பதை ஐ.டி., திறனாக ஒரு உதாரணத்திற்குச் சொல்லலாம். ஆரக்கிள், டேலி போன்ற சாப்ட்வேர்களில் பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே சிறப்பான திறன் பெற்றிருப்பவரை தற்போது எண்ணற்ற கம்பெனிகள் வேலை மேளாக்களிலும் கேம்பஸ் இன்டர்வியூக்களிலும் தேர்வு செய்வதை நாம் பார்க்கிறோம். வேலை தரும் நிறுவனத்தில் நடை
முறையில் ஒரு சூழலை நீங்களாகவே கற்பனை செய்து இந்தத் திறன்களை நாம் பெற்றிருக்கிறோமா என்பதை பரிசோதிப்பது சிறப்பான பலன் தரும்.

நிறைய படிக்காமல், நடைமுறைச் சூழல்களை கவனிக்காமல் உங்களால் மேனேஜ்மென்ட் திறனைப் பெறவே முடியாது. பாங்குகளிலும் பல் துறை நிறுவனங்களிலும் அன்றாட நிகழ்வுகளை உங்களுக்குத் தெரிந்தவர் மூலமாக கவனித்துப் பாருங்கள். இதில் கற்றுக் கொள்ளலாம் எண்ணற்ற மேலாண்மைத் திறன்களை. அன்றாட செய்தித்தாள்களைப் படிக்காமல், செய்திகளைக் கேட்காமல் அல்லது பார்க்காமல் பொது அறிவைப் பெற முடியுமா? இப்படி செய்யத் தொடங்கினால் மட்டுமே உங்களால் நம்பிக்கையுடன் பேச, பழக முடியும். அப்போது தான் உங்களது தகவல் தொடர்புத் திறன் மேம்படும்.

எப்படி இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா? இந்த 5 திறன்களில் தற்போது நீங்கள் எத்தனை பெற்றுள்ளீர்கள்? எவற்றில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது? எந்த கால கட்டத்திற்குள் இவற்றைப் பெற முடியும் மட்டும் வேண்டும் என்று உங்களுக்காகவே நீங்கள் இவை பற்றி ஒரு SWOT ANALYSIS என்னும் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெகு விரைவில் உங்கள் திறன்களின் தேவைக்கும் வெற்றிக்குமான தூரம் குறையத் தொடங்கி வசந்தம் உங்கள் வாசல் தட்டும்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us