புதுடில்லி: ஆயுர்வேதத்தில், முதுநிலை பட்டம் பெற்றவர்கள், பயிற்சிகளைப் பெற்று, அறுவை சிகிச்சைகளை செய்ய, மத்திய அரசு, நேற்று அனுமதி வழங்கியது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சி.சி.ஐ.எம்., எனப்படும் இந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்சில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மத்திய அரசால், 2016ம் ஆண்டின், &'இந்தியன் மெடிசின் சென்ட்ரல் கவுன்சில்&' ஒழுங்குமுறைகளில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஆயுர்வேதத்தில், முதுநிலை பட்டம் பெற்றவர்கள், முறையான பயிற்சிகளை பெற்று, அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதாவது, ஆயுர்வேதத்தில், ஷால்யா, ஷாலக்யா பிரிவுகளில், முதுநிலை பட்டம் பெற்றவர்கள், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு, பயிற்சிகளை பெறவும், தனியாக அறுவை சிகிச்சை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா கூறியதாவது:
சி.சி.ஐ.எம்., பிறப்பித்த இந்த உத்தரவு, எந்த கொள்கை மாற்றங்களையும் ஏற்படுத்தாது. ஆயுர்வேத முதுநிலை கல்வியில், ஏற்கனவே உள்ள ஒழுங்குமுறைகளை நெறிப்படுத்தவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்களால், குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளை மட்டுமே செய்ய முடியும். அதுவும், ஷால்யா, ஷாலக்யா பிரிவுகளில், முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே, அதற்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
சி.சி.ஐ.எம்., மூத்த அதிகாரி வைத்யா ஜெயந்த் தேவ்புஜாரி கூறுகையில், “ஆயுர்வேத மையங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, இந்திய மருத்துவ சங்கம், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.