மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் கவர்னர் பதிலுக்காக காத்திருப்பு | Kalvimalar - News

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் கவர்னர் பதிலுக்காக காத்திருப்புஅக்டோபர் 17,2020,22:18 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட மாட்டோம் என, உயர் நீதிமன்ற கிளையில், தமிழக அரசு உறுதியளித்தது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், மேலக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முத்துகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: 


அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம், தமிழக சட்டசபையில், செப்., 15ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் இசைவிற்காக, அச்சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இசைவு அளிக்கவில்லை.


&'நீட்&' தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிடில், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். சட்டத்தை, 2020 - 21ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தனர்.


மனுவை அக்., 14ல் விசாரித்த நீதிபதிகள், &'கவர்னரின் செயலரிடம் விபரம் பெற்று, அக்., 16ல் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும்&' என்றனர். 


நேற்று காலை, 11:00 மணிக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.


தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்: சட்ட மசோதா, கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. இசைவளிக்க, கவர்னருக்கு காலவரம்பு எதுவும் அரசியல் சட்டத்தில் நிர்ணயிக்கவில்லை. கவர்னரின் செயலரிடம் விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை.


நீதிபதிகள்: கவர்னருக்கு, நீதிமன்றம் உத்தரவிட இயலாது. இசைவு பற்றிய நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு மாதம் போதாதா; இன்னும் எவ்வளவு அவகாசம் தேவை. தொழில்நுட்ப காரணங்களை கூறி, சட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் கூடாது.


மனுதாரர் வழக்கறிஞர்: மசோதாவில் திருத்தம் செய்யுமாறு, அரசுக்கு கவர்னர் பரிந்துரைத்து திருப்பி அனுப்பலாம். திருத்தத்துடன் அரசு மீண்டும் அனுப்பும் போது, கவர்னர் இசைவு தெரிவிக்க மறுக்க முடியாது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பும் போது, இசைவு அளிப்பதில் தாமதம் ஏற்படலாம். அவசர சூழல் கருதி, மாநில அரசே, தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டத்தை தற்காலிகமாக செயல்படுத்தலாம்.


சட்டத்திற்கு, கவர்னர் இசைவு தெரிவிக்கும் வரை, மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதை நிறுத்தி வைக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன்:


நான் கிராமப்புறத்தில் பிறந்தேன். கிராமப்புற மாணவர்களின் வலி எனக்கு தெரியும். நீட் தேர்வை, கிராமப்புற மாணவர்கள் அச்சத்துடன் எதிர்கொள்கின்றனர். அதிக கட்டணம் செலுத்தி, நீட் பயிற்சி மையங்களில், பயிற்சி பெற இயலாத நிலையில் உள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள், நீட்டுக்கு விண்ணப்பிக்கவே தயங்குகின்றனர்; உளவியல் ரீதியாக பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது தெளிவாகிறது.


நீட் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. சட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், ஏழை மாணவர்கள், எத்தகைய பின்விளைவுகளை சந்திப்பர் என்பதை உணர வேண்டும். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை முடிந்த பின், சட்டத்தை அமல்படுத்தி என்ன பயன்? இவ்வாறு கேள்வி எழுப்பியவர், உணர்ச்சி பொங்க நா தழுதழுக்க, கண்ணீர் விட்டார். பின், கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தார்.


பின், நீதிபதிகள், &'இவ்விவகாரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக, சாத்தியமான அனைத்து வழிகளையும் அரசு பரிசீலித்து, தகுந்த முடிவை தெரிவிக்கும் என, நம்புகிறோம். &'மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு குறித்த, அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்&' என உத்தரவிட்டு, சிறிது நேரம் ஒத்தி வைத்தனர்.


மீண்டும் பகல், 12:30 மணிக்கு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, &'தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை செயலரிடம் ஆலோசித்தோம். &'உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு கவர்னர் இசைவு அளிக்கும் வரை, மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது&' என, உறுதியளித்தார்.


தமிழக அரசின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அக்., 29க்கு ஒத்தி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us