நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் சாதனை | Kalvimalar - News

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் சாதனைஅக்டோபர் 17,2020,22:09 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார், 664 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாணவர், 720க்கு, 710 மதிப்பெண் எடுத்து, அகில இந்திய அளவில், எட்டாம் இடம் பெற்றுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களால், நீட் தேர்வில் சாதிக்க முடியாது என்று கூறி வந்த அரசியல்வாதிகள், இனி வாயை மூடுவதே நல்லது. கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், செப்டம்பர், 13 மற்றும் அக்., 14ல், நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும், 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில், 99 ஆயிரத்து, 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நேற்று வெளியிட்டது. இதில், 7.71 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


நாட்டில் அதிகபட்சமாக, திரிபுராவில், 88 ஆயிரத்து, 889 பேரும், மஹாராஷ்டிராவில், 79 ஆயிரத்து, 974 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், 57 ஆயிரத்து, 215 பேர், அதாவது, 57.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்; இது, 2019ம் ஆண்டை விட, ௯ சதவீதம் அதிகம்.


ஒடிசா மாணவர்


இந்திய அளவில், ஒடிசாவை சேர்ந்த ஷோயப் அப்தாப் என்ற மாணவர், 720க்கு, 720 முழு மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை நடந்த, நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற, முதல் மாணவராகவும் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில், முதலிடம் பிடித்த முதல் ஒடிசா மாணவர் என்ற பெருமையும், அவருக்கு கிடைத்துள்ளது.


முதலிடம் பெற்ற ஷோயப் அப்தாப், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர். டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் சேர முடிவு செய்துள்ளார். டில்லியை சேர்ந்த அகன்ஷா சிங் என்ற மாணவி, அகில இந்திய அளவில், இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


மாணவர் சாதனை


தமிழகத்தில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில், 720க்கு, 664 மதிப்பெண் பெற்று, புதிய சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில், 1,823ம் இடம் பிடித்துள்ளார். தேசிய அளவில், அரசு பள்ளி மாணவர்களில், அதிக மதிப்பெண் எடுத்த வர்களில், ஜீவித் குமார் முன்னிலை பெற்றுள்ளார். 


இவரது தந்தை நாராயணசாமி, ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவரது தாய் மகேஸ்வரி, நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்கிறார்.கடந்த, 2018 - 19ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 படித்த ஜீவித் குமார், பிளஸ் 2 தேர்வில், 600க்கு, 548 மதிப்பெண் பெற்றுள்ளார். அப்போது, நீட் தேர்வு எழுதி, 720க்கு, 190 மதிப்பெண் பெற்றார்.


நிதியுதவி


அரசு மருத்துவ கல்லுாரியில் சேர, இன்னும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதால், மீண்டும், நீட் தேர்வை எழுத முடிவு செய்தார். அவரது நம்பிக்கையை பாராட்டி, அரசு பள்ளி ஆசிரியர்கள் நிதி திரட்டி, தனியார் பயிற்சி மையத்தில், ஓராண்டு சிறப்பு பயிற்சி அளித்தனர்.


இதையடுத்து, இரண்டாம் முறையாக, இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார். அதில், 664 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுவரை நடந்த, நீட் தேர்வுகளில், தமிழக அரசு பள்ளி மாணவர் ஒருவர் எடுத்த, அதிகபட்ச மதிப்பெண் இது. அம்மாணவரை, பள்ளி கல்வி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


திருப்பூர் மாணவர்


திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன், 720க்கு, 710 மதிப்பெண் எடுத்து, அகில இந்திய அளவில், 8ம் இடமும், தமிழக அளவில், முதலிடமும் பெற்றுள்ளார். இவர், ஓ.பி.சி., பிரிவில், அகில இந்திய அளவில், முதலிடம் பிடித்துள்ளார். இந்த மாணவர், 2018 - 19ல் பிளஸ் 2 முடித்தார். அப்போது நடந்த நீட் தேர்வில், 380 மதிப்பெண் பெற்றுள்ளார். பின், ஓராண்டு, நாமக்கல்லில் உள்ள, &'க்ரீன் பார்க்&' பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்.


அதே பயிற்சி மையத்தில் படித்த, நாமக்கல்லை சேர்ந்த மோகன பிரபா என்ற மாணவி, 705 மதிப்பெண் பெற்று, தமிழகத்தில், இரண்டாம் இடம் பெற்றுள்ளார். தமிழக மாணவர்களால், அதிலும் குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது, அவர்களால் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் சேர முடியாது என, தமிழக கட்சிகளும், சில அரசியல்வாதிகளும் கூறி வந்தனர். அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார், அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். எனவே, அதுபோன்ற அரசியல்வாதிகள், இனிமேல் வாயை மூடிக் கொள்வதே நல்லது என, ஆசிரியர்களும், பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.


ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்!


ஜீவித்குமார் அளித்த பேட்டி:தமிழ் மொழி, என்னை படிக்கட்டுகளில் ஏற்றிவிட்டு, இன்று அழகு பார்த்துள்ளது. பாரதியார் பாடல் வரிகள், என்னை தன்னம்பிக்கை மாணவராக உருவாக்கியது. தினமும் என்னை உற்சாகப்படுத்தி வந்த, சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மோகன் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு, இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். பொக்கிஷமான, &'தினமலர்&' நாளிதழின் இணைப்பாக வெளிவரும், &'பட்டம்&' மாணவர் இதழ் படித்ததால், நுணுக்கமான கேள்விகளை ஆராய முடிந்தது. சாதனை நிகழ்த்துவதற்கு ஏதுவாக இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.


இணையதளம் &'மக்கர்&'


&'நீட்&' தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையின், www. ntaneet.nic.in என்ற இணையதளத்தில், மாலை, 4:30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆனால், இணையதளத்தின், &'சர்வர்&' முடங்கியதால், மாணவர்களால் மதிப்பெண்ணை பார்க்க முடியவில்லை. பல மணி நேரமாக, மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்த பின்னர், இரவு, 8:00 மணியளவில், படிப்படியாக தேர்வு முடிவுகள் தெரிய தொடங்கின.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us