அக்., 10ல் வெளியாகிறது பிளஸ் 2 துணை தேர்வு முடிவு | Kalvimalar - News

அக்., 10ல் வெளியாகிறது பிளஸ் 2 துணை தேர்வு முடிவு செப்டம்பர் 25,2020,08:08 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், அக்., 10ம் தேதி வெளியிடப்படும். அம்மாத இறுதிவரை கல்லுாரி மற்றும் பல்கலைகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தெரிவித்துள்ளன.


சி.பி.எஸ்.இ., நடத்திய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், தேர்ச்சி பெறாத மற்றும் மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்வதற்கான, துணைத் தேர்வுகள், செப்., 22ல் துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது.


வழக்கு


இந்தத் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடக் கோரியும், மாணவர்களை கல்லுாரிகளில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.


இவற்றை விசாரித்த, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சஞ்சிவ் கன்னா அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு, இது தொடர்பாக பதிலளிக்கும்படி, சி.பி.எஸ்.இ., மற்றும் யு.ஜி.சி.,க்கு உத்தரவிட்டிருந்தது.&'இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவதால், அவர்களது நலன் பாதுகாக்கப்பட வேண்டும்&' என, அமர்வு கூறியிருந்தது.


வாய்ப்பு


வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:துணைத் தேர்வு முடிவுகளை, அக்., 10ம் தேதி, சி.பி.எஸ்.இ., அறிவிக்கும். அக்., இறுதிவரை கல்லுாரி மற்றும் பல்கலைகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.


இளநிலை படிப்புகளுக்கான, இந்தக் கல்வியாண்டு, அக்., 31 முதல் துவங்குகிறது. அதற்குள் கல்லுாரிகளில் சேருவதற்கு மாணவர்களுக்கு போதிய அவகாசம் உள்ளது.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது. அதை அமர்வு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இந்த வழக்கு முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


மனு தள்ளுபடி


நாடு முழுதும் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையங்களில், மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர், கவுரவ் பன்சால் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த, நீதிபதிகள், நவின் சின்ஹா, இந்திரா பானர்ஜி அமர்வு, &'இது அற்பத்தனமான வழக்கு. இதை தள்ளுபடி செய்கிறோம். நேரத்தை வீணடித்ததற்காக, வழக்கறிஞருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது&' என, உத்தரவிட்டுள்ளது.


தேர்வை ஒத்திவைக்க வழக்கு


ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக, யு.பி.எஸ்.சி.,எனப்படும் மத்திய பணியாளர் வாரியத்தின் முதல்கட்டத் தேர்வு, அக்., 4ம் தேதி துவங்க உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தேர்வை ஒத்தி வைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, வரும், 28க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us