நீட் தேர்வு எளிமையும் இல்லை கடினமும் இல்லை | Kalvimalar - News

நீட் தேர்வு எளிமையும் இல்லை கடினமும் இல்லைசெப்டம்பர் 15,2020,09:11 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கட்சியினரின் மறைமுக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மருத்துவ படிப்புக்கான, &'நீட்&' தகுதி தேர்வு, நாடு முழுதும் இனிதே முடிந்தது. தேர்வில், உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்ததாக, மாணவ - மாணவியர் கூறினர்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு, நாடு முழுதும், 3,842 மையங்களில் நடந்தது. தேர்வுக்கு, 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்; அவர்களில், 14 லட்சம் பேர் பங்கேற்றனர்.தமிழகத்தில் விண்ணப்பித்திருந்த, 1.17 லட்சம் பேருக்கு, 14 நகரங்களில், 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. புதுச்சேரியில், 17 ஆயிரம் மாணவர்களுக்கு, 42 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.


பிற்பகல், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது. காலை, 11:00 மணி முதல், &'ஷிப்டு&' முறையில், தேர்வு மையங்களுக்குள் மாணவ - மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை, ஐ.ஐ.டி., தேர்வு மையத்தில், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதிக்க பட்டது. கூடுதல் வெப்பநிலை உள்ளவர்கள், தனி அறைகளில் அனுமதிக்க பட்டனர். முறைகேடு நடக்காமல் தடுக்க, தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கப்பட்டது.


தாலிக்கு தடை


மின்னணு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவையும், மாணவியர் அணிந்திருந்த ஆபரணங்களும், தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், சமீபத்தில் திருமணமான மாணவி ஒருவர், தாலி மற்றும் ஆபரணங்களுடன் தேர்வு எழுத வந்தார். அவர் தாலிச் சங்கிலியை கழற்றிய பின்பே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். மாலை சரியாக, 5:00 மணிக்கு தேர்வு முடிந்தது.


இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தேர்வுகளில் மொத்தம், 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. &'மல்டிபிள் சாய்ஸ்&' கொள்குறி வினாக்கள் அடங்கிய, ஓ.எம்.ஆர்., வினாத்தாளில், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் இருந்தது. மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இருந்தன. சரியான விடையின்றி தவறானதை குறிப்பிட்டால், ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்படும் என்பதால், மாணவ - மாணவியர் திட்டவட்டமாக, விடை தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே பதில் அளித்தனர்.


நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. நீட் தேர்வு தொடர்பான எதிர்மறையான விமர்சனங்களும் செய்யப்பட்டு வந்தன. இவற்றுக்கு மத்தியில், மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றதால், நீட் தேர்வு இனிதே நிறைவடைந்தது. பெற்றோரும், நீட் தேர்வின் அவசியத்தை உணர்ந்து, ஆர்வத்துடன் தங்கள் பிள்ளைகளை தேர்வு எழுத அழைத்து வந்திருந்தனர்.


மாணவர்கள் சொல்வது என்ன?


&'&'வினாத்தாள் நடுத்தரமாக இருந்தது. உயிரியலில் அதிக கேள்விகளுக்கு, சரியான பதில் எழுத முடிந்தது. இயற்பியலில் கணக்குகள் அடங்கிய கேள்விகள் இருந்தன. வேதியியலில், எளிமையும் இல்லாமல், கடினமும் இல்லாமல் வினாக்கள் இருந்தன.


- சாரிகா, மயிலாப்பூர், சென்னை


&'&'வினாக்கள் எல்லாம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., தயாரித்த பாடத் திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றன. பெரும்பாலான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த பாடத் திட்டத்தை பின்பற்றுவதால், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பரிச்சயமான கேள்விகளாக இருந்தன.


- சப்ரின் பாத்திமா, எழும்பூர்


&'&'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளிலும் உள்ள பாடங்களில் இருந்து, சமமான அளவு கேள்விகள் இடம் பெற்றன. புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் மட்டுமே, அதிக கேள்விகளுக்கு பதில் எழுத முடியும். முக்கியம் இல்லை என, படிக்க தவறிய பல கேள்விகள், இந்த வினாத்தாளில் இடம் பெற்றன.


- க.ரூபேஷ்ராஜன், திருவொற்றியூர்


தமிழில் அறிவிப்பு இல்லை


* பகல், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை தேர்வு எழுத நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான தேர்வு மையங்களில், 2:15 மணிக்கே மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்தனர். பெயர் விபர பதிவு, ஹால் டிக்கெட் சரி பார்க்க, கண்காணிப்பாளர்கள், 15நிமிடம் எடுத்தனர். வரும் காலங்களில், இதற்கு தனியாக, 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்க, கோரிக்கை எழுந்துள்ளது


* தேர்வு அறைக்குள் உணவுப் பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனி போன்றவை அனுமதிக்கப் படவில்லை. அதனால், காலை, 11:00 மணிக்கு தேர்வு மையத்துக்குள் சென்ற மாணவர்கள், தேர்வு முடியும், 5:00 மணி வரையிலும், மதிய உணவு அருந்தாமல் பட்டினியுடன் இருந்தனர்


* நீட் தேர்வுகள், 11 மொழிகளில் நடந்தன. மாநில மொழிகளில் தேர்வு நடந்தாலும், பல இடங்களில், தேர்வு மையங்களில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டும் தகவல்கள் இடம் பெற்றன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தேர்வு மையங்களில், தமிழில் அறிவிப்பு பலகைகள் இடம் பெறவில்லை


* சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், தேர்வு அறைகளில், 12 மாணவ - மாணவியர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். சில தேர்வு மையங்களில், சோப் ஆயில் மற்றும் சோப் வைத்து கை, கால் கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us