கடன் பெறும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் | Kalvimalar - News

கடன் பெறும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்

எழுத்தின் அளவு :

வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட, நன்றாக படிக்க வேண்டும். மற்ற மாணவர்கள் நான்கு லட்சம் ரூபாய் படிப்புக்காக செலவிடுகிறார்கள் என்றால், வங்கி கடன் பெற்று பயிலும் மாணவர்கள், வட்டியுடன் சேர்ந்து 5.40 லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர், என ஸ்டேட் பாங்க் உயரதிகாரி விருதாச்சலம் பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது : சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. எந்தவொரு மாணவ, மாணவியரும் வறுமை காரணமாக பள்ளி படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக வங்கிக்கடன் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. வங்கிகளில் கல்வி கடன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; வழங்கப்பட்டும் வருகிறது.

வங்கி கடன் பெற, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கல்லூரியில் சேர்ந்ததற்கான, கல்லூரிகளில் பெறப்பட்ட உத்தரவு கடிதம் இருக்க வேண்டும். உங்கள் வீடு எந்த இடத்தில் இருக்கிறதோ, அதற்கு உட்பட்ட பொதுத்துறை வங்கி கிளைகளில் வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடங்களுக்கும் வங்கிக்கடன் வழங்கப்படும். நல்ல கல்லூரியில் சேர்ந்தால் மட்டும் போதாது; அங்கீகாரம் பெற்ற படிப்பா என்பதையும் பார்த்து சேர வேண்டும். உள்நாட்டில் படிக்க 10 லட்சம் வரை, வெளிநாட்டில் படிக்க 20 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

இதில், நான்கு லட்சம் ரூபாய் வரை விண்ணப்பித்தால், முழு பணமும் வங்கியில் இருந்து வழங்கப்படும். நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் விண்ணப்பித்தால், ஐந்து சதவீத பணத்தை நீங்கள் செலவிட வேண்டும். விடுதி, வாகன கட்டணம் என படிப்பு சார்ந்த அனைத்து செலவுக்கும் வங்கியில் இருந்து பணம் வழங்கப்படும். ஆனால், அதற்கான ரசீதை கல்லூரியில் இருந்து பெற்று வர வேண்டும்.

உங்கள் படிப்புக்கு கம்ப்யூட்டர் அவசியம் என்றால், அவை வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும். முதலாண்டு வங்கி கடன் கிடைப்பதற்கு முன், கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தி விட்டால், அந்தாண்டுக்கான பணம் மட்டும் கையில் வழங்கப்படும். மற்ற ஆண்டுக்கான பணம், வங்கியில் இருந்து நேரடியாக கல்லூரிகளிடம் கல்வி கட்டணம் வழங்கப்படும். பெற்றோர் குடும்ப வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால், வட்டியில் சலுகை உண்டு. வங்கிக்கடன் பெற்று படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் கண்காணிக்கப்பட்டு வரும்; மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வங்கிகளில் இருக்கும்.

பட்டம் பெற்ற மாணவர்கள், வேலைக்கு சென்று ஆறு மாதத்துக்கு பின், கடனை செலுத்த துவங்க வேண்டும். படித்து முடித்து ஓராண்டு வரை வங்கிகள் மாணவர்களுக்கு பணம் செலுத்த அவகாசம் தரும். அதன் பின், மாணவர்கள் செலுத்தாமல் இருந்தால், பெற்றோர் செலுத்த வேண்டும். வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட நன்றாக படிக்க வேண்டும். மற்ற மாணவர்கள் நான்கு லட்சம் ரூபாய் படிப்புக்காக செலவு செய்கிறார்கள் என்றால், வங்கி கடன் பெற்று பயிலும் மாணவர்கள், வட்டியுடன் சேர்ந்து 5.40 லட்சம் ரூபாய் செலவிடுகின்றனர். வங்கி கடன் பெற்று படிக்கும் மாணவர்கள், கடனை முறையாக திருப்பிச் செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்து வரும் தலைமுறை மாணவர்களுக்கும் இத்திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தும், என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us