இரு மொழி கல்வி தொடரும்: முதல்வர் | Kalvimalar - News

இரு மொழி கல்வி தொடரும்: முதல்வர் ஆகஸ்ட் 04,2020,18:48 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், மும்மொழி கொள்கையை, அரசு எப்போதும் அனுமதிக்காது; இரு மொழி கல்வி கொள்கை மட்டுமே, தொடர்ந்து பின்பற்றப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: 


தமிழக மக்கள், 80 ஆண்டுகளாக, இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டடங்களில், தங்கள் உணர்வை, பல்வேறு போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளனர். 1965ல், ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற, அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது.


போராட்டம்:


அதை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர்.மக்களுடைய மும்மொழி கொள்கை குறித்த கவலைகள் நீங்காததால், அண்ணாதுரை, சட்டசபையில், 1968 ஜன., 23ல், தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும், மும்மொழி திட்டத்தை அகற்றி விட்டு, தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளுக்கு இடமளித்து, ஹிந்தி மொழியை அறவே நீக்க, தீர்மானம் நிறைவேற்றினார்.


அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஹிந்தி மொழி, பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. அண்ணாதுரை அறிவித்த, இரு மொழி கொள்கையை செயல்படுத்துவது தான், எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அவர், முதல்வராக இருந்த போது, 1986 நவம்பர், 13ல், இரு மொழி கொள்கையை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும், &'ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது, ஹிந்தியை திணிக்கக் கூடாது; அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதில், உறுதியாக உள்ளோம்&' என, ஜெயலலிதா சூளுரைத்தார். இப்படிப்பட்ட தலைவர்கள் வழி வந்த இந்த அரசு, வரைவு தேசிய கல்வி கொள்கையை, மத்திய அரசு வெளியிட்ட போதே, அதில் மும்மொழி கொள்கை இடம்பெற்றதை சுட்டிக்காட்டி தீவிரமாக எதிர்த்தது. தமிழகத்தை பொறுத்தவரை, இரு மொழி கொள்கையையே கடைப்பிடிப்போம் என, 2019 ஜூன், 26ல், பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.


அனுமதிக்காது:


இரு மொழி கொள்கையையே, அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதை, கடந்த ஆண்டு சுதந்திர தின உரையிலும், சட்டசபையில் நடந்த, பல்வேறு விவாதங்களின் போதும் தெளிவாக கூறியுள்ளேன். தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள, புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்று இருந்தாலும், ஜெ., அரசு, மும்மொழி கொள்கையை, தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்காது.


இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே, தொடர்ந்து பின்பற்றும். தமிழகத்தில், ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அ.தி.மு.க., உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழியை பின்பற்றுவதையே, கொள்கையாக கொண்டுள்ளன.


வருத்தம்:


இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த, தன் புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த, மும்மொழி கொள்கையை மறு பரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படுத்திக் கொள்ள, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பை களைய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு!


&'டுவிட்டர்&' பக்கத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: 


&'தமிழகத்தில், மும்மொழி கொள்கை நடைமுறை படுத்தப்படாது; இரு மொழி கொள்கையே தொடரும்&' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. இதைத் தான், பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்துகிறது.


மும்மொழி கொள்கையை நிராகரிக்க, தமிழக அரசு கூறியுள்ள அனைத்து காரணங்களும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us