சிற்பக்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ஸ்தபதி பணியில் முன்னுரிமை: ஐகோர்ட் | Kalvimalar - News

சிற்பக்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ஸ்தபதி பணியில் முன்னுரிமை: ஐகோர்ட்ஜனவரி 14,2020,01:50 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அறநிலைய துறையில், ஸ்தபதிகள், பொறியாளர் பணிகளுக்கு, சிற்பக் கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், அரசு சிற்பக்கலை கல்லுாரி துவங்கப்பட்டது. கட்டடக் கலை, ஆகம சாஸ்திரம், சிற்பக்கலை உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதுவரை, 11௦௦ மாணவர்கள், இந்த கல்லுாரியில் படித்து முடித்துள்ளனர். மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லுாரியில் பட்டப்படிப்பு முடித்தவர்களை, கோவில்களில் ஸ்தபதிகள், உதவிப் பொறியாளர்களாக நியமிக்கக் கோரி, இதே கல்லுாரியில் படித்த முருகன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் .

மனு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. கோவில்களில் ஸ்தபதி, பொறியாளர் பதவிகளை ஏற்படுத்த உள்ளதாகவும், அதற்கான விதிகளை வகுக்க இருப்பதாகவும், கோவில்கள் சீரமைப்பு, பாதுகாப்புக்காக, 2019ல் தனிப்பிரிவை ஏற்படுத்தி இருப்பதாகவும், அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:

கோவில் புனரமைப்புக்கு, சிவில் இன்ஜினியரிங் தெரிந்திருப்பது மட்டுமே, போதுமானதாக கூற முடியாது. மாமல்லபுரம் சிற்பக் கல்லுாரி மாணவர்கள் அல்லது அதே துறையைச் சேர்ந்த கல்லுாரிகளில், சிற்பக்கலை பற்றிய முழுமையான படிப்பு முடித்தவர்கள் தான், அறநிலைய துறையில் நியமிக்கப்பட தகுதி பெற்றவர்கள். இவர்களை, ஸ்தபதிகளாக நியமிக்கும்போது, அவர்களாகவே சிறு சிறு பணிகளை மேற்கொள்ள முடியும். ஸ்தபதி, பொறியாளர் என, இரண்டு பணிகளையும், அவர்களால் நன்றாக மேற்கொள்ள முடியும். குறிப்பிட்ட நோக்கத்துக்காக, ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது, அதில், போதிய வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டிய கடமை, அரசுக்கு உள்ளது.எனவே, ஹிந்து அறநிலைய துறை, பொறியியல் மற்றும் சார்பு பணி விதிகளை, மூன்று மாதங்களில், இறுதி செய்ய வேண்டும்.

கோவில்கள், சிற்பங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட துறை, அதன் நோக்கத்தை செயல்படுத்த வேண்டும்.இந்த துறையில், பொறியாளர், வரைவாளர், ஸ்தபதி பதவிகளில், தகுதி, அனுபவம் படைத்தவர்களை நியமிக்க வேண்டும்.ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை கருதி, ஸ்தபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.பொறியாளர், ஸ்தபதி, வரைவாளர் பணியிடங்களில் நியமனம் செய்யும்போது, மாமல்லபுரம் சிற்பக் கல்லுாரி அல்லது அதே துறையில் இயங்கும், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும். மாமல்லபுரம் சிற்பக் கல்லுாரிக்கு, தேவையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை, அறநிலையத் துறை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us