அரசு பள்ளிகளுக்கு அள்ளித் தாருங்கள்! அரசு வேண்டுகோள் | Kalvimalar - News

அரசு பள்ளிகளுக்கு அள்ளித் தாருங்கள்! அரசு வேண்டுகோள்நவம்பர் 22,2019,09:17 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, தாராள நிதி உதவி செய்யுமாறு, அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க, தொழில் நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் முன்வர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில், 24 ஆயிரத்து, 321 அரசு தொடக்கப் பள்ளிகள்; 6,966 அரசு நடுநிலைப் பள்ளிகள், 3,121 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3,051 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 37 ஆயிரத்து, 459 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 44.13 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர; 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

அரசு பள்ளிகளை மேம்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், நிதி ஒதுக்கப்படுகிறது; அது போதுமானதாக இல்லை. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெற்றோர், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பது, அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தனியார் உதவி அளிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கை: அரசு பள்ளிகளில் படித்து, தற்போது உயர் பதவியில் இருக்கும், முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை உள்ள நிறுவனங்களும், தங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி வழியே, அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும். அந்தப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நுாலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வாருங்கள் என்று, அழைக்கிறேன்.

கடந்த ஆண்டு, என் அழைப்பை ஏற்று, பல்வேறு நிறுவனங்கள், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளை செய்ததற்கு நன்றி. அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், சிறிய அளவிலான, பழுதடைந்துள்ள மேஜை, நாற்காலி, ஆய்வுக்கூடப் பொருட்கள், மின் சாதன பொருட்கள் போன்றவற்றை, அந்தந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், தலைமை ஆசிரியர் வழியாக, மாற்றி அமைக்கலாம்.

மேலும், அரசு பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தர விரும்பும், சமூக அக்கறை உள்ள நிறுவனங்களுக்கு, உரிய அனுமதியை, தாமதமின்றி வழங்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் வளர்ச்சியில், பங்கெடுத்துக் கொள்ள விரும்பும், நல்ல உள்ளம் படைத்த, பழைய மாணவர்கள், நல்ல நிலையில் உள்ளவர்கள், தாங்கள் வழங்க நினைக்கும் தொகையை, contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியே, எந்த பள்ளிக்கு வழங்க விரும்புகின்றனரோ, அந்த பள்ளிக்கு வழங்கலாம்.

தாங்கள் வழங்கிய நிதியில் நடக்கும் பணியை, இணையதளம் வழியாக அறியலாம். சம்பந்தப்பட்ட பள்ளிகளில், பணி நடப்பதை, நேரடியாக பார்வையிடலாம். நிறுவனங்களும், நன்கொடையாளர்களும், அந்த தொகைக்குரிய, வருமான வரி விலக்கையும் பெறலாம்.எனவே, அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க முன்வாருங்கள் என்று, அனைவரையும் அழைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து

ஏன் அரசுப் பள்ளி கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை யெல்லாம் ஸ்வாஹா பண்ணி ட்டீங்கன்னு ஒத்துக்கறீங்களா ?
by s t rajan,India    21-நவ-2019 20:43:00 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us