எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவு | Kalvimalar - News

எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள்; உயர்நீதிமன்றம் உத்தரவுமே 23,2019,11:38 IST

எழுத்தின் அளவு :

மதுரை: அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளில் கற்பிக்க இடைநிலை ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான அரசின் உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி.,வகுப்புகளை அரசு துவக்க உள்ளது. இதில் கற்பிக்க, துவக்கக் கல்வித்துறையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்த அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கலாகின. நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.

 மனுதாரர்கள் தரப்பில், &'இடைநிலை ஆசிரியர்களை சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மைய எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு மாற்ற முடியாது. அவ்வாறு செய்வது பதவி இறக்கம் செய்வதற்கு சமம். எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் கற்பிக்க அதற்குரிய கல்வித் தகுதியை இடைநிலை ஆசிரியர்கள் பெறவில்லை,&' என தெரிவிக்கப்பட்டது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: இத்திட்டம் சோதனை அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். அதன் வெற்றியை பொறுத்து மேலும் தொடர முடிவு செய்யப்படும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 7913 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இவர்கள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,வகுப்புகளுக்கு கற்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இது அரசின் கொள்கை முடிவு. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 7 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவிடப்படும். எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,க்கு மாற்றப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது, என்றார்.

நீதிபதிகள் உத்தரவு: குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது அரசின் கடமை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்காக தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் 52 ஆயிரத்து 933 ஏழை குழந்தைகளுக்காக எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,வகுப்புகளை அரசு துவக்க முடிவு செய்துள்ளது. 

குழந்தைகளுக்கு, இலவச தரமான கல்வி வழங்க புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பதில் ஏற்கனவே உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை அப்பணியில் ஈடுபடுத்த அரசுக்கு உரிமை உண்டு. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு மாதம் 37 கோடி, ஆண்டுக்கு 445 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். பொதுநலனிற்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவு குறித்தும் குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளின் நலனிற்காக அரசு எடுக்கும் முடிவு குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் அரசு பொதுநலன் கருதி எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் எதிராக ஆசிரியர்கள் நீதிமன்றத்துக்கு வருவது &'பேஷனாகி&' விட்டது. நீதிமன்றத்துக்கு வந்து நேரத்தை வீணடிப்பதைவிட ஆசிரியர்கள் தங்கள் அறிவு, நேரத்தை கற்பித்தலுக்கு செலவிட வேண்டும். நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன் அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் கல்வித்தரம் குறைவு, அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது தொடர்பாக தீவிரமாக சிந்திக்க வேண்டும். 

எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,யில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசு தெரிவித்துள்ளதால் அச்சப்படத் தேவையில்லை. இத்திட்டத்தையும், இதில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, காலணி, கல்வி உபகரணங்களுக்கு நிதி ஒதுக்குவதையும் இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி.,வகுப்புகளில் கற்பிக்க இடைநிலை ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான அரசின் உத்தரவிற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

ஜூன் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் இத்திட்டத்தை துவக்கலாம். இதில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க இடைநிலை ஆசிரியர்களை ஈடுபடுத்துவதுடன், அவர்களுக்கு மாண்டிசோரி அடிப்படையிலான கல்வி பயிற்சியை 6 மாதங்களில் அளிக்க வேண்டும் என்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us