மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு சடலம் இல்லாமல் தவிக்கும் கல்லூரிகள்!பிப்ரவரி 09,2019,15:54 IST
எழுத்தின் அளவு :
மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியில் இனி மின் தொழில்நுட்பம் வசதிகள் அத்தியாவசியமாகிறது என்று சென்னையில் நடைபெற்ற உடற்கூறியியல் மருத்துவர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கைத் துவக்கி வைத்த ஸ்ரீ இராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தர் டாக்டர்.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 491 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் பலவும் தனியார் துறையிடம் உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பயிற்சி பெறத் தேவையான சடலங்கள் கிடைப்பதில்லை. எனவே மாணவர்களும், மருத்துவர்களும் முதலில் மனித மாதிரிகளிலும் பின்பு சடலங்களிலும் அறுவை சிகிச்சை முறைகளைப் பயின்று தேர்ச்சி பெறுவது பின் நாளில் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொள்ள உதவிக்கரமாக இருக்கும். இதற்காக உருவாக்கப்பட்டதே ‘செக்ட்ரா’ எனப்படும் முப்பரிமாண மின்மய தொழில்நுட்ப கருவி. கூடிய விரைவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் இதைப் பயன் படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்குபெற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ இராமச்சந்திராவின் உடற்கூறியியல் துறை தலைவர் டாக்டர்.விஜயசாகர் கூறுகையில், “உலகெங்கும் மனித சடலங்களை மருத்துவ அறுவை சிகிச்சை பயிற்சிக்குப் பயன்படுத்தும் பொருட்டு அவை புற்றுநோயை உண்டாக்கும் “பார்மிலின்” எனப்படும் ரசாயனம் கலந்த தொட்டியில் பதப்படுத்தப்பட்டு வருகிறது. பயன்படுத்தப்பட்ட ஆறு மணிநேரங்களில் இந்த சடலம் சீரழிந்து போகும் நிலையில், ஒரு முறை மட்டுமே இதைப் பயன்படுத்த முடிகிறது. இதனால், மருத்துவக் கல்லூரிகளுக்கு மிகுந்த அளவில் சடலங்கள் தேவைப்பட்டு அவை கிடைக்காத நிலையில் சிறந்த பயிற்சி அளிக்க முடியாத நிலை இருக்கிறது”.
சமீபத்தில் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியின் உடற்கூறியியல் மருத்துவர்கள் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நவீன முறை சடல பதப்படுத்தும் முறைசார் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அதில் பாதுகாப்பான வேதியியல் பொருட்களை பயன்படுத்தி சடலங்களை மீண்டும் மீண்டும் பதப்படுத்தி பாதுகாத்துப் பல உறுப்புகளில் பயிற்சி அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும் என்று விளக்கப்பட்டது. இத்துறை நிபுணர்களான அடிலெய்டு மற்றும் டோக்கியோ பல்கலையைச் சேர்ந்த மைக்கேல் ஹாட்ஜஸ் மற்றும் ஜரோடு வார்டு பிரிசன் ஆகியோர் கலந்து கொண்டு நேரடி பயிற்சிகளை அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.