அண்ணா பல்கலை குட்டி விமானம் உலக சாதனை; மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து | Kalvimalar - News

அண்ணா பல்கலை குட்டி விமானம் உலக சாதனை; மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்துஜூலை 12,2018,11:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை : அண்ணா பல்கலை உருவாக்கிய, &'தக் ஷா&' ஆளில்லா விமானம், தொடர்ந்து, ஆறு மணி நேரம் பறந்து, உலக சாதனை படைத்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேரில் பார்த்து, மாணவர்களை வாழ்த்தினார். 

சென்னை அண்ணா பல்கலையின், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியும், &'இந்திய ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்கள்&' கூட்டமைப்பான, எஸ்.ஏ.ஐ., இந்தியா அமைப்பின் தென் மண்டல பிரிவும் இணைந்து, ஆளில்லா விமான வடிவமைப்பு போட்டியை, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடத்தின.

உலக சாதனை முயற்சி :

பல்கலையின் துணைவேந்தர் சுரப்பா; எஸ்.ஏ.ஐ., அமைப்பின் துணை தலைவர் சண்முகம் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். இதையடுத்து, &'தக் ஷா&' என்ற, ஆளில்லா விமானத்தின், உலக சாதனை முயற்சியையும் பார்வையிட்டு, மாணவர்களை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில், எம்.ஐ.டி., கல்லுாரி, விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மாணவர்கள் தயாரித்த, தக் ஷா என்ற, கேமரா பொருத்தப்பட்ட, ஆளில்லா குட்டி விமானத்தை, தொடர்ந்து பல மணி நேரம் பறக்க விடும் முயற்சி நடந்தது.

காலை, 9:00 மணிக்கு விமானம் பறக்கவிடப்பட்டது. உலக சாதனை முயற்சி என்பதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், நான்கு திசைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்த இடத்தில் தரையில் இருந்து, 10 முதல், 15 அடி உயரம் வரை, விமானம் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்து &'ரிமோட் கன்ட்ரோல்&' வழியாக பறக்கவிடப்படப் பட்டது.

6 மணி நேரத்திற்கு மேல்...

சாதனை நிகழ்வின் நடுவராக, புதுடில்லி, &'ஏரோ க்ளப் ஆப் இந்தியா&' நிறுவனத்தின் பிரதிநிதி, யோகேந்திரா ஜஹாகிர்தார் பங்கேற்று, உலக சாதனை நிகழ்வுகளை குறிப்பு எடுத்தார். எம்.ஐ.டி.,யின் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர், பேராசிரியர் செந்தில்குமார், அண்ணா பல்கலையின் தொழில்நுட்ப மேம்பாட்டு மைய இயக்குனர், தாமரை செல்வி ஆகியோர் தலைமையில், 60 மாணவர்கள் உலக சாதனை முயற்சி திட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து, ஆறு மணி நேரம், ஏழு நிமிடம், 45 வினாடிக்கு, குட்டி விமானம் பயணத்தை நிறுத்தியது. எந்த குட்டி விமானமும் பறக்காதவகையில், &'தக் ஷா&' விமானம், நீண்ட நேரம் பறந்து, உலக சாதனை படைத்தது. இதை மாணவர்களும், பேராசிரியர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

பலத்த காற்றிலும் அசராத விமானம் :

சாதனை குறித்து, திட்ட தலைமை விஞ்ஞானிகள், செந்தில்குமார் மற்றும் தாமரை செல்வி கூறியதாவது: கின்னஸ் சாதனையாக, இதுவரை, 1:30 மணி நேரம் வரை மட்டும், குட்டி விமானம் பறக்கவிடப்பட்டு உள்ளது. அதன்பின், 4:30 மணி நேரம், குட்டி விமானத்தை பறக்கவிட்டு, ரஷ்யாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், அதிகாரப்பூர்வமின்றி சாதனையை பதிவு செய்துள்ளார். 

ஆனால், உலகில் வேறு எந்த நாடும் மேற்கொள்ளாதவாறு, அண்ணா பல்கலை மட்டுமே, ஆறு மணி நேரத்துக்கு மேல், குட்டி விமானத்தை தொடர்ந்து பறக்க விட்டு, உலக சாதனை படைத்துள்ளது. இயல்பை விட அதிக வேகத்தில் பலமான காற்று, தொடர்ந்து வீசிய நிலையிலும், இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்ற குட்டி விமானங்கள், பேட்டரியால் இயங்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. தக் ஷா விமானம், ஆறு கிலோ எடையில் எரிபொருள் நிரப்பி, அதில் இருந்து, மின்சாரம் தயாரித்து, இயங்கும் வகையில், மொத்தம், 18 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனை, புதுடில்லி, &'ஏரோகிளப் ஆப் இந்தியா&' வழியாக, உலக சாதனை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதன்பின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் கிடைக்கும்.

பயன்பாடு என்ன?

குட்டி விமானங்கள், வெள்ள மீட்பு பணி, ராணுவ பணி, வேளாண் பணியில் பல ஏக்கர் நிலத்துக்கு உரம் துாவுதல், உறுப்பு தானத்துக்கு, மருத்துவமனைக்கும், விமான நிலையத்துக்கும் இடையே உறுப்புகளை எடுத்து செல்வது போன்ற பல பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

அண்ணா பல்கலையின் குட்டி விமானங்கள், குரங்கணி மலை தீ விபத்து, சென்னை பெரு வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம், மதுரை கிரானைட் விவகாரம் உள்ளிட்டவற்றில், ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும், பெரியளவில் மக்கள் கூடும் நிகழ்வுகள், விழாக்கள், மாநாடுகளில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்களை கவர்ந்த கவர்னர்:

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த குட்டி விமான வடிவமைப்பு போட்டியை துவக்கி வைத்த, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஒவ்வொரு குட்டி விமானத்தையும், நேரில் பார்வையிட்டு, அதன் தொழில்நுட்பங்களை கேட்டு தெரிந்து கொண்டார். இந்த நிகழ்வில், 90 அணியினர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குட்டி விமான மாடல்களை காட்சிக்கு வைத்தனர். அவற்றை பார்வையிட்ட கவர்னர், நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட பூக்கூடையில் இருந்து, ஒவ்வொரு மலரையும் எடுத்து, ஒவ்வொரு மாணவருக்கும் பரிசளித்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


வாசகர் கருத்து

Vaazhthukkal
by Gopi,India    14-ஜூலை-2018 06:45:10 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us