தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜாக்பாட்! | Kalvimalar - News

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜாக்பாட்!ஜூலை 11,2018,10:21 IST

எழுத்தின் அளவு :

மதுரை: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களுக்கு கருணையாக 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும்; அதன் அடிப்படையில் தகுதியான மாணவர்களின் புதிய தர வரிசை பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும்.

அதுவரை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவம் படிக்க காத்திருப்போருக்கு ஜாக்பாட் கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் வரும் 16ம் தேதி முதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்தாண்டு நீட் தேர்வு முடிந்ததுமே தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்தும் பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மே 6ல் ’நீட்’ தேர்வு நடந்தது. தமிழ் வழியில் 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 180 வினாக்கள் இடம் பெற்றன. 49 வினாக்களின் தமிழ் மொழி பெயர்ப்பில் தொழில்நுட்ப வார்த்தைகள் தவறாக இருந்தன. ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

இதை வலியுறுத்தி மத்திய மனிதவளத்துறை, சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு மனு அனுப்பினேன். 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரங்கராஜன் மனு செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில் மருத்துவ சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இந்நிலையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

’தமிழ் வினா - விடைக்கு எதிரே இடம் பெற்றிருந்த ஆங்கில வினா - விடையை படித்தால் புரிந்துகொள்ள முடியும்’ என்ற சி.பி.எஸ்.இ.,யின் வாதம் ஏற்புடையதல்ல. ’கீ’ பதில்கள் வெளியிட்டதாகவும் குறிப்பிட்ட வினாக்களுக்கு இதன்படி பதில் அளித்திருந்தால் அவற்றிற்கு மதிப்பெண் வழங்கப்படும் என தெளிவுபடுத்தியதாகவும் ’அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை’ எனவும் சி.பி.எஸ்.இ., கூறுகிறது.

ஆனால் சி.பி.எஸ்.இ., வடிவமைத்த வினாக்களுக்கு, இவைதான் தகுந்த விடைகள் என்பதை தெளிவாக கூற முடியாத நிச்சயமற்ற நிலை உள்ளது. தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு இணையாக வல்லுனர்கள் பரிந்துரைக்கும் வட்டார மொழி வார்த்தைகளை உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் அதை பயன்படுத்தலாம்.

பட்டதாரிகள் பங்கு பெறும் சிவில் சர்வீஸ் தேர்வில் வினாக்களுக்கு இது தான் விடை என்பதை துல்லியமாக தீர்மானிக்க முடியாத அளவிற்கு கடின வினாக்கள் இடம்பெறும். ’நீட்’ தேர்வை 17 - 18 வயதுள்ள மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களின் நிலையை புரிந்து, அதற்கேற்ப வினா - விடைகளை தயாரித்திருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வு போன்ற நடைமுறையை கையாளக் கூடாது.

தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கவில்லை. அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பிளஸ் 2 தனித் தேர்வர்களை, ’நீட்’டில் பங்கேற்க ஏன் அனுமதிக்கவில்லை என்பது தெரியவில்லை.

அவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக, வேலை பார்த்தபடியே படித்து தேர்வை எதிர்கொள்கின்றனர். நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கம் மாணவர்களை முன்னேற்றுவதே.

’நீட்’தேர்வை எதிர்கொள்ளும் வகையில், போதிய பயிற்சி அளித்திருக்க வேண்டும். அறிவியல் பாடத்திற்கு, கூடுதல் நேரம் பயிற்சி தேவையா? ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை இதுதான் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மாணவர்களின் திறன் ’நீட்’ தேர்வில் தெரிய வந்திருக்கும்.

தமிழ்வழியில் எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட தகுதியான மாணவர்களின் புதிய தரவரிசை பட்டியலை சி.பி.எஸ்.இ., இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும். அதுவரை, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவதை, நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தர விட்டனர்.

மருத்துவ கவுன்சிலிங் நடக்குமா?

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு மருத்துவம் படிக்க காத்திருப்போருக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ’நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர். தீர்ப்பை அடுத்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் வரும் 16ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்டுள்ளோம். சி.பி.எஸ்.இ., நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

39 சதவீதம் அதிகரிக்கும் :

’நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வரும் ’டெக்பார் ஆல்’ அமைப்பின் நிறுவனர் ராம் பிரகாஷ் கூறியதாவது: தமிழகத்தில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி கருணை மதிப்பெண் வழங்கினால் நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 39 சதவீதம் அதிகரிக்கும். மாநில பாடத்திட்டத்தில் படித்த அதிக மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். எங்கள் நிறுவனத்தில் இலவச பயிற்சி பெற்ற 502 பேர் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us