கிராமப்புற மாணவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு | Kalvimalar - News

கிராமப்புற மாணவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு

எழுத்தின் அளவு :

நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஒரு குறைபாடு நீண்டகாலமாக உண்டு. தேர்வுக்கு படிக்கும் காலங்களில், நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் பல சவுகரியங்கள், கிராமப்புற மாணவர்களுக்கு(பொதுவாக, பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு) கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

கிராமத்திலிருந்து பயணம் செய்து, தேர்வு மையத்திற்கு வந்து தேர்வெழுதி, பின்னர், தேர்வு முடிந்ததும் மீண்டும் பயணம் செய்து, கிராமத்தை அடைவதற்குள் அசதியாகி, பின்னர் அந்த சோர்வுடன் உட்கார்ந்து படித்து, மீண்டும் விரைவாகவே எழுந்து, பயணம் செய்து, நகர்ப்புற தேர்வு மையத்திற்கு வந்து தேர்வெழுதி செல்ல வேண்டும் என்பன உட்பட, பல குறைபாடுகளை கிராமத்து மாணவர்கள் சந்திக்கிறார்கள்.

அதிலும், குறைவான எண்ணிக்கையில் உள்ள பேருந்துகளை, அவை வரும் நேரத்திற்கு நாம் தயாராகி, கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு சென்று (சிலருக்கு அதிலேயே சோர்ந்து, மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள், படித்த விஷயங்களில் கணிசமானவை மறந்துவிடும்), சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைந்து, பரீட்சை எழுத வேண்டும்.

தூரம் மற்றும் கடினமான பயணம் என்ற சிக்கல்களைத் தாண்டி, கணினி மற்றும் இணைய வசதி, டியூஷன் வசதி, ஸ்டேஷனரி கடைகள் போன்றவை இல்லாமை ஆகிய இன்னபிற அசவுகரியங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள பல விஷயங்களையும் தாண்டித்தான், ஆண்டுதோறும், தேர்வுகளில், பல கிராமப்புற மாணவர்கள் சாதிக்கிறார்கள் என்பது தனிக்கதை.

அமைதி எனும் பேரின்பம்

ஆனால், எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதும், எவ்வளவு கொடுத்தாலும், நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கவே கிடைக்காத ஒரு அற்புதமான, அருமையான வசதி, கிராமப்புற மாணவர்களுக்கு உண்டு. அதுதான், அமைதியான சூழல். படிப்பதற்கு உகந்த அமைதியான சூழல்.

கிராமப்புற மாணவர்களுக்கு, வீட்டிலும், வீட்டு அருகாமையிலும் சில தொந்தரவுகள் இருந்தாலும்கூட, அவர்களுக்கு, ஆலமரத்தடிகள், அரச மரத்தடிகள், வேப்ப மரத்தடிகள், கண்மாய் மேட்டு நிழல்கள், ஆற்றங்கரை அமைதி, மாந்தோப்பு, தென்னந்தோப்பு உள்ளிட்ட பலவிதமான தோப்புகள், அய்யனார் கோயில், முனியசாமி மற்றும் கருப்பசாமி கோயில் உள்ளிட்ட சில கோயில் வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறான அமைதி தவழும் ஏகாந்தமான இடங்கள் உண்டு.

மாணவிகளைப் பொறுத்தமட்டில், இவற்றில் தங்களுக்கு எது பாதுகாப்பனதோ, அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், மாணவர்களைப் பொறுத்தவரை, பாதுகாப்பு பிரச்சினைகள் எழுவதில்லை.

அதுபோன்ற இடங்களில், வாகனச் சத்தங்கள் இருப்பதில்லை, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ தொந்தரவுகள் இருப்பதில்லை, தொழில் நிறுவன இரைச்சல்கள் இருப்பதில்லை மற்றும் மனித சத்தங்களும், அவர்களால் ஏற்படும் வேறுபல இடைஞ்சல்களும் இருப்பதில்லை.

எனவே, எந்த தொந்தரவும் இல்லாத, மேற்கண்ட இடங்களை, கிராமப்புற மாணவர்கள், மிகச் சிறப்பான முறையில், தங்களின் விடுமுறை நாட்களில், தேர்வுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற இடங்களில், சரியான நண்பர்கள் வட்டாரம் அமைந்தால், குரூப் ஸ்டடியையும் மேற்கொள்ளலாம்.

இதுபோன்ற அமைதியான இடங்களில், நன்றாக திரும்ப திரும்ப படித்து, பதியவைத்துக்கொள்ளும்போது, அடித்து பிடித்து, பேருந்து கூட்டத்தில் பயணம் செய்து, நேரத்திற்கு சென்றாக வேண்டுமென்பதற்காக, ஓடியும் நடந்தும், தேர்வு மையம் சென்று சேரும்போதும்கூட, படித்தது எளிதில் மறக்காது.

ஆனால் வேறுசில பிரச்சினைகளும் உள்ளன. இதுபோன்ற அமைதியான இடங்களில், தூக்கமும் நன்றாக வரும் மற்றும் வேறுசில பொழுதுபோக்குகளும், அதுபோன்ற இடங்களில் இருக்கும். ஆனால், தமது இக்கட்டான சூழலை உணர்ந்து, கிடைத்த வாய்ப்பை முறையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்திக் கொள்வது மாணவர்களின் கைகளில்தான் உள்ளது.

படிப்பதற்கு கிடைத்த நேரத்தையும், வாய்ப்பையும், தூக்கத்திற்கோ, பொழுதுபோக்கிற்கோ பயன்படுத்திக்  கொண்டால், பிறகு, நகர்ப்புறத்தில் கூலி வேலை பார்ப்பதற்காக, அதே கிராமத்தை விட்டு செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், இப்போது கிராமப்புறங்களில் கிடைக்கும் வேலையை மட்டுமே நம்பி, பிழைப்பை ஓட்ட முடிவதில்லை என்பது கிராமத்து மாணவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us