பொதுவாக எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும், முன்னனுபவம் தேவை எனக் கூறுகிறார்கள். ஏற்கனவே வேலை தெரிந்தவருக்கும் வேலையிலிருப்பவருக்கும் மட்டுமே வேலை தந்தால், அனுபவம் இல்லாமல் புதிதாக படிப்புகளை முடித்துவிட்டு வருபவர்கள் பாடு என்ன? | Kalvimalar - News

பொதுவாக எந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும், முன்னனுபவம் தேவை எனக் கூறுகிறார்கள். ஏற்கனவே வேலை தெரிந்தவருக்கும் வேலையிலிருப்பவருக்கும் மட்டுமே வேலை தந்தால், அனுபவம் இல்லாமல் புதிதாக படிப்புகளை முடித்துவிட்டு வருபவர்கள் பாடு என்ன?செப்டம்பர் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இது இன்றைய வேலையில்லாத இளைஞர்கள் மத்தியில் உள்ள மிக முக்கியமான கேள்வி. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே பொதுத் துறைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த நமது மத்திய அரசுகள் 90களிலிருந்து தனியார் துறைக்கும் பொதுத் துறைக்கும் எந்த பாகுபாடும் இல்லாத பொருளாதாரத்தையே நம்புகின்றன. உலகமயமாக்கல் நமது பொருளாதாரத்தின் அங்கமாக மாறியதால் போட்டிச் சூழலை இன்று சாதாரணமாக அனைத்துத் துறைகளிலும் காணமுடிகிறது.

எனவே இன்றைய கால கட்டத்தில் வெறும் தகுதிகளுக்கு வேலை என்ற சூழ்நிலை தற்போது இல்லை. தகுதிகளை விட மிக முக்கியம் திறன்கள் என்பதே இன்றைய உண்மை நிலை. Skill Set என்ற வார்த்தை தற்போது அடிக்கடி வேலை வாய்ப்பு தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது. இது திறன்களைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் திறன்களின் தொகுப்பை இப்படி அழைக்கிறார்கள்.

ஒரு கால் சென்டரில் பிரண்ட் ஆபிஸ் அசிஸ்டண்டாக பணி புரிய தேவைப்படும் திறன்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்கள

* சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருப்பது.

* Inter Personal Relationship எனப்படும் தனி மனித உறவுகளை வளர்ப்பது மற்றும் மேம்படுத்தும் திறன்.

* பொதுவான விஷய ஞானம். அதாவது ஓரளவுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது.

* சம்பந்தப்பட்ட துறையில் சிறப்பான திறன் பெற்றிருப்பது.

* அடிப்படை கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் திறன் பெற்றிருப்பது. அதாவது எம்.எஸ். ஆபிஸ், இன்டர்நெட், இமெயில், சாட்டிங் போன்றவற்றில் பரிச்சயமும் திறனும் பெற்றிருப்பது.

* இவை எல்லாவற்றையும் விட, உலகளாவிய வாடிக்கையாளர்களுடன் உரையாடத் தேவையான ஆங்கில தகவல் தொடர்புத் திறனை நீங்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இவை இல்லாத நபர்களைத் தேர்வு செய்து அதில் பயிற்சி கொடுப்பதென்பது இந்த நிறுவனங்களுக்கு ஓரளவுக்குத் தான் முடியும்.

தற்போது கால் சென்டர்களில் வேலைக்குச் செல்ல வேண்டும் என இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். இதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இருப்பதை மட்டுமே இவர்கள் நினைக்கிறார்கள். திறன்களைப் பற்றி யோசிப்பதில்லை.

எனவே மிகக் குறைவான சம்பளத்திற்கோ அல்லது சம்பளமே இல்லாமலோ கூட நீங்கள் செல்ல விரும்பும் பணிக்கு முதலில் செல்வதும் மிகக் குறைவான காலகட்டத்தில், அந்தத் துறையின் தன்மையை அறிவதும், இதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதும் மிக முக்கியம். ஒரு வேலையிலேயே காலத்தை ஓட்டுவது என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுவான விதியாக இருந்தது. ஆனால் ஒரு வேலையில் ஒருவர் 10 ஆண்டுகள் இருப்பதே கடினமாக இருக்கிறது.

எந்தத் துறையில் நமக்கு வேலை பெற முடியும் அதற்கு நம்மிடம் ஏற்கனவே உள்ள எந்தத் தன்மையும் திறனும் உதவும் என அடையாளம் கண்டு கொண்டு திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us