எதிர்கால தலைவர்களுக்கு உன்னத உயர்கல்வியை வழங்கும் நோக்கில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் உயர்ந்த குறிக்கோள், சிறந்த தலைமைப் பண்புகள் மற்றும் தரமான கல்வி பின்புலத்தை பெற்றவர்களுக்கு யு.கே., அரசாங்கம் வழங்கும் ஒரு முக்கிய உதவித்தொகை திட்டம் தான், செவனிங் ஸ்காலர்ஷிப்
இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படுபவர்கள் யு.கே.,வில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் ஓர் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கலாம். இந்தியர்களுக்கு என்று பிரத்யேகமாகவும் இந்த உதவுத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தகுதிகள்
* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க, தகுதியான இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* யு.கே.,வில் படித்து பட்டம்பெற்ற பிறகு குறைந்தது 2 ஆண்டுகளில் சொந்த நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.
* யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதேனும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில், நிர்பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.
* உரிய ஆங்கில மொழிப் புலமையையும் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கில மொழிப் புலமை
அகடமிக் ஐ.இ.எல்.டி.எஸ்., பியர்சன் பி.டி.இ. அகடமிக், டோபல் ஐ.பி.டி., சி1 அட்வான்ஸ்டு, டிரினிட்டி ஐ.எஸ்.இ. 2 (பி2) ஆகிய ஆங்கில மொழிப் புலமை தகுதித்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்
செவனிங் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, யு.கே., சென்று வருவதற்கான பயண செலவு, விசா கட்டணம், தங்குமிட செல்வு, யு.கே.வில் நடைபெறும் செவனிங் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான போக்குவரத்து செலவு ஆகியவை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்பும் படிப்புகளுக்கு உரிய கல்வித்தகுதிகள், பணி அனுபவம் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை பெற்றவர்கள் தேவையான விபரங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.chevening.org/scholarship/india