சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணியிடங்களுக்கு 2 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
முதனிலைத் தேர்வானது 2 மணி நேரத் தேர்வாகும். இதில் அப்ஜக்டிவ் பகுதியில் ரீசனிங், கணிதம், பொது அறிவு, கம்ப்யூட்டர் திறன், ஆங்கிலம் ஆகியவற்றில் கேள்விகள் அமையும். இதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும். 2வதான நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்க வேண்டிய கேள்விகள் இடம் பெறும்.
அப்ஜக்டிவ் பகுதிக்கு 2 மணி நேரம் தரப்படும். இதில் ரீசனிங், டேட்டா அனலிசிஸ் மற்றும் இன்டர்பிரடேஷன், மார்க்கெட்டிங் நாலெட்ஜ் மற்றும் ஆங்கில பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விரிவாக விடையளிக்கும் இதன் 2வது பகுதியை ஆங்கிலத்தில் எழுத வேண்டும். முதனிலைத் தேர்வில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்றிருப்பவர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இது போலவே 2வது தேர்விலும் தனித்தனியாக குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுகளான குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வெறும் பாஸ் செய்தால் மட்டும் போதாது. ரேங்கிங் பட்டியலிலும் இடம் பெறுவதும் அவசியம்.
பி.ஓ. பணிக்கான காலியிடங்களை சிண்டிகேட் பாங்க் போன்ற பொதுத் துறை பாங்குகளே போட்டித் தேர்வின்றி நேரடியாக நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்புகின்றன.
இந்த நிலையில் 2 கட்டத் தேர்வுகளையும் அடுத்ததாக குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளையும் கொண்டிருப்பதால் ஸ்டேட் பாங்க் பி.ஓ. தேர்வானது மிகக் கடினமாகவே உணரப்படும். எனினும் இதற்கு மிக நுண்ணிய கவனத்துடன் தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்யும் போது வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரீசனிங், கணிதம் போன்றவற்றுக்கு பதிலளிக்க போதிய பயிற்சியுடன் அவற்றின் அடிப்படைகளை நன்கு அறிவது மிக மிக அவசியம். பொது அறிவுப் பகுதிக்கு நல்ல புத்தகங்களைப் பெற்று தயாராக வேண்டும்.
மேலும் ஸ்டேட் பாங்க் பி.ஓ. தேர்வில் பொதுவாக நடப்புச் செய்திகளிலிருந்து கேள்விகள் அதிகம் கேட்கப்படுவதால் சி.எஸ்.ஆர்., காம்படிஷன் மாஸ்டர், பாங்கிங் சர்வீசஸ் கிரானிகிள், ஜி.கே.டுடே போன்ற மாதப் பத்திரிகைகளையும் தொடர்ந்து படிக்க வேண்டும். செய்தித்தாள் படிப்பதன் அவசியம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
ஆங்கிலம் தான் மிகவும் கடினமான பகுதியாக பொதுவாக நமது மாணவர்களால் உணரப்படுகிறது. இந்தத் தேர்வில் இதில் பாஸ் செய்தால் மட்டும் போதாது. அதிலும் ரேங்க் பெற வேண்டும் என்று இருப்பதால் இது மிக மிக சவாலானதாகவே அமையும். அடிப்படை இலக்கணம், வார்த்தை பயன்பாடு, வரி அமைப்பு போன்ற அனைத்து அடிப்படை ஆங்கில அம்சங்களிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அக்டோபர் மாதம் முதனிலைத் தேர்வு நடக்கவிருப்பதால் இப்போதிருந்தே தினமும் 3 மணி நேர பயிற்சி கட்டாயம் தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். 2008ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அறிவிக்கப்படும் பாங்க் காலியிடங்கள் 2009ல் குறைய தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் காற்றுள்ள போதே பயனடையுங்கள்.