புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ., சேர... | Kalvimalar - News

புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ., சேர...

எழுத்தின் அளவு :

ஒரு புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ., படித்தவருக்கு, உலகளாவிய அளவில், தான் விரும்பிய இடத்தில் பணி வாய்ப்பை பெற முடியும். ஏற்கனவே, தொழில் நிறுவனங்களில் பணியில் இருக்கும் பலர், தங்களது தொழிலில் உயர் தகுதியை விரைவாக அடையவும், தங்களின் வலிமையை அதிகரிக்கும் ஒரு கல்வி ஆயுதத்தை வைத்துக்கொள்ளவும், எம்.பி.ஏ., படிப்பை தேர்வு செய்து படிக்கின்றனர்.

இதன்மூலம், உயர்நிலை மேலாண்மை பதவியை நோக்கிய அவர்களின் பயணம் வேகம் பிடிக்கிறது. ஆனால், புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் எப்படி இடம் பிடிப்பது என்ற பெரிய கேள்வி, நம் முன்னால் நிற்கிறது. அது தொடர்பான சில ஆலோசனைகள்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஜிமேட் தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன என்றாலும், நாம் தேர்வு செய்யப்படுவதற்கு இன்னும் பல காரணிகள் முக்கியமானவை.

கல்வி நிறுவன செயல்பாடுகள்

நீங்கள் உங்களின் முந்தைய படிப்புகளில், எவ்வாறு செயல்பட்டுள்ளீர்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த விஷயத்திற்குத்தான், தேர்வு கமிட்டியினர் முதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, குறைந்தபட்சம், அனைத்திலும், சராசரியைவிட, அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

பின்புலம்

புகழ்பெற்ற பல்கலையில் எம்.பி.ஏ., சேர்வதன் பொருட்டு, நீங்கள் விண்ணப்பித்ததை, மதிப்பாய்வு செய்யும் நபர், அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் முன்னதாக, சில அம்சங்களை ஆராய்வார். உங்களின் பணி அனுபவம், extra curricular activities, சமூக சேவை, வெளிப்படையான பின்புலம் ஆகிய அம்சங்கள் கணக்கில் எடுக்கப்படும்.

அந்த வகையில் பார்க்கையில், மிகச் சிறப்பான தகுதிகளை கொண்டவர்களுக்கே, வாய்ப்புகள் கதவைத் தட்டும். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகில், அதிகம் பேர், எம்.பி.ஏ., படிக்க புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கையில், அதிக திறனுடையவர்களுக்கே வாய்ப்புகளை வழங்க முடியும் என்பது ஒரு சராசரி எதார்த்தம் என்பதைப் பரிந்து கொள்ள வேண்டும்.

திறன்சார் நடவடிக்கைகள்

Extra curricular activities என்று அழைக்கப்படும் திறன்சார் நடவடிக்கைகள், எம்.பி.ஏ., சேர்க்கையில் முக்கிய இடம் வகிப்பவை. உங்களின் பள்ளி வாழ்க்கையாகட்டும் அல்லது கல்லூரி வாழ்க்கையாகட்டும் அல்லது பணிபுரியும் இடமாகட்டும், திறன்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மிகவும் அவசியம்.

இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் எதை கற்றுக்கொண்டீர்கள் என்பதை உங்களின் விண்ணப்பத்தோடு தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில், திறன்சார் நடவடிக்கைகள், நமது வாழ்க்கையில் பல அனுபவங்களைத் தருபவை. அமைப்பாக்க செயல்பாடு, மேலாண்மை செய்தல், குழு உணர்வு மற்றும் தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த திறன்சார் நடவடிக்கைகளில் அடங்கும்.

சமூகப் பணி

இன்றைக்கு, பல பெரிய நிறுவனங்கள், என்.ஜி.ஓ., உள்ளிட்ட பல்வேறான அம்சங்களின் மூலமாக, பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இது அந்நிறுவனங்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுபவை என்பது வேறு விஷயம். எனவே, புகழ்பெற்ற வணிகப் பள்ளிகள், தாங்கள் வழங்கும் எம்.பி.ஏ., படிப்பில் சேரும் மாணவர்கள், எந்தளவு சமூக ஆர்வம் கொண்டுள்ளார்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் அவர்களுக்கு எந்தளவுக்கு ஆர்வமுள்ளது மற்றும் அவர்களுக்கு அதில் எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்பதற்கு வணிகப் பள்ளிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றன.

எனவே, களப்பணி அனுபவம் என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இதுவரை இந்த அனுபவத்தைப் பெறாதவர்களும், இப்போதே அதற்கான பணியைத் தொடங்குங்கள்.

பணி அனுபவம்

உங்களுக்கு இருக்கும் பணி அனுபவம், உங்களுடைய விண்ணப்பத்தில் முக்கிய அம்சமாகும். பணி அனுபவம் என்பது, ஒருவருக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும், குழுவாக இணைந்து செயல்படும் தன்மையையும் அளிக்கின்றன. ஒரு பணிசார் ஆலோசகரை நாடி, அவரின் ஆலோசனைப்படி, சிறப்பானதொரு விண்ணப்பத்தை, தேர்வு கமிட்டியினரை கவரும் விதத்தில், தயாரிக்க முயற்சி செய்யும்.

ஏனெனில், அதுபோன்ற ஆலோசர்களுக்கு, தேர்வு கமிட்டியினர் எந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் மற்றும் அதன்பொருட்டு, நமது விண்ணப்பத்தை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஜிமேட் மதிப்பெண்கள்

பொதுவாக, பல கல்வி நிறுவனங்களில், சராசரியான ஜிமேட் மதிப்பெண்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதேசமயம், சில கல்லூரிகள் குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் முறையைக் கொண்டுள்ளன.

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்பில் சேர, பல்வேறான பின்னணிகள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட அதிக நபர்கள் விண்ணப்பிப்பதால், வெறும் மதிப்பெண்ணை மட்டுமே வைத்துக்கொண்டு, உங்களின் வாய்ப்பை உறுதிசெய்வது மிகவும் கடினம்.

அதிகபட்ச ஜிமேட் மதிப்பெண்கள் உங்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்பது உண்மையென்றாலும், மேலே சொன்ன பல்வேறான அனுபவங்களின் தொகுப்பே, இறுதி முடிவை தீர்மானிக்கும் என்பதை நினைவில் வைப்பது நல்லது.

பல்வேறான ஜிமேட் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. அவை, வகுப்பறை பயிற்சி, ஆன்லைன் தயாரிப்பு மற்றும் சுயமாக படிப்பதற்குரிய உபகரணங்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. எனவே, உங்களின் ஆய்வை சுதந்திரமாக மேற்கொண்டு, உங்களுக்கு தேவைப்படும் குறிப்பிட்ட உதவிகளை, மையத்திடம் கேட்க தயங்க வேண்டாம். சிறந்த ஜிமேட் பயிற்சி மையத்தை தேர்வு செய்வதற்கான சில ஆலோசனைகள்,

* குறிப்பிட்ட பயிற்சி மையத்தின் பழைய சாதனைகள்.

* அங்கே பயிற்சியளிக்கும் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் அனுபவங்கள்.

* ஒவ்வொரு படிப்பிற்குமான பயிற்சியளிக்கும் காலஅளவு.

* ஒவ்வொருவருக்கும், அவரின் அறிவுநிலை மற்றும் திறனைப் பொறுத்து, வகுக்கப்படும் பயிற்சித் திட்டம் மற்றும் அணுகுமுறை.

மேற்கூறிய அனைத்து ஆலோசனைகளை பின்பற்றினால், சிறந்த கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., சேரும் உங்களின் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us