நீங்கள் ஒரு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்கையில், தேர்வு கமிட்டியிடமிருந்து உங்களுக்கு வரும் முதல் கேள்வி, உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். இந்த ஒரே கேள்வியின் மூலம், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், இரண்டு காரியங்களை மேற்கொள்கிறார்கள். ஒன்று, உங்களுக்கு நன்றாக தெரிந்து ஒரு கேள்வியைக் கேட்டு, அதன்பொருட்டு உங்களை எளிதாக பேச வைக்கிறார்கள். மற்றொன்று, அதன்மூலமாக, உங்களின் மொழி மற்றும் தகவல் தொடர்பு திறனை, ஆரம்ப நிலையிலேயே மதிப்பிடுகிறார்கள்.
இந்த ஒரு விஷயத்திற்கு, அவர்கள் 40 முதல் 60 விநாடிகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதன்மூலமே, உங்களிடம் இதற்கு மேலும் நேரம் செலவழிக்கலாமா? அதனால் பயனுண்டா? உங்களை வெளியே அனுப்பி விடலாமா? என்பதைப் பற்றி முடிவு செய்கிறார்கள். எனவே, ஒரு நிமிடத்திற்கும் குறைவான இந்த நேரம், உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நேரத்தை, நீங்கள் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தி, உங்களை நிலைநிறுத்திக் கொள்கிறீர்கள் என்பதில்தான், உங்களுக்கான வெற்றி அடங்கியுள்ளது.
நேர்முகத் தேர்வு எனும் கிரிக்கெட் ஆட்டத்தின் முதல் பந்து போன்றதுதான் இந்த முதல் கேள்வி. இந்த பந்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் இங்கே முக்கியம். அந்தப் பந்தை லாவகமாக பயன்படுத்தினால், அந்த வேலையை நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம். இல்லையெனில், முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறி விடுவீர்கள்.
எனவே, இந்த முதல் கேள்வியை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, சிறப்பாக பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணாடி முன்பாக நின்று அல்லது நெருங்கிய நண்பர்கள் மூன்பாக நின்று, உங்களுக்கு நீங்களே பலமுறை பேசிப் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், உங்களின் உடல் மொழியை(Body language) மேம்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
இத்தகைய பயிற்சியின் மூலம், உங்கள் தகவல் தொடர்பில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு நீக்கலாம். என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் எந்தளவு சத்தமாக பேச வேண்டும் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தனிப்பட்ட விபரங்களை சொல்லுகையில், தேவைக்கதிகமாக குடும்ப விபரங்களை சொல்லக்கூடாது. சுருக்கமாக, தேவையான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். உங்களின் படிப்புத் தகுதிகள் மற்றும் பழைய பணி அனுபவங்கள் ஆகியவற்றில், குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தால் அவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இந்த விஷயங்களை கேட்கையில், உங்களின்பால், நேர்முகத் தேர்வை நடத்துபவர்களுக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டு, உங்களிடம் மேலும் மேலும் பேசுவதற்கு அவர் தூண்டப்படுவார். எனவே, முதல் அடியை கவனமாக எடுத்துவைத்தால், அடுத்தடுத்த விஷயங்கள் சிறப்பாகவே அமையும்.