ஒரு சரியான வெளிநாட்டு பல்கலையை தேர்வு செய்தல் எப்படி? | Kalvimalar - News

ஒரு சரியான வெளிநாட்டு பல்கலையை தேர்வு செய்தல் எப்படி?

எழுத்தின் அளவு :

தனக்கான வெளிநாட்டுப் பல்கலையை ஒரு மாணவர் தேடும்போது, கல்வி அனுபவத்திற்கு அப்பாற்பட்டு, தான் விரும்புவது எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். எனவே, அதற்கு ஏற்றாற்போல், அவர் தனக்கான பல்கலையைத் தேர்வு செய்ய வேண்டும். அதுதொடர்பான சில ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

எதில் உங்கள் ஆர்வம்

நீங்கள் விரும்பும் துறையில் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகம் எது என்பதைப் பார்க்க வேண்டும். உங்களின் உள்ளார்ந்த திறமை மற்றும் எதிர்காலப் பணி லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் படிப்பு பற்றிய ஒரு தெளிவான எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

படிப்பைத் தேர்வுசெய்தல்

பல வெளிநாட்டுப் பல்கலைகள், ஒரே படிப்பை, வேறு வேறு பெயர்களில், சிறியளவு வித்தியாசங்களுடன் வழங்கலாம். எனவே, அவைப்பற்றி விரிவாக ஆராய்ந்து, அவைகளில் உங்களுக்கு எது சரியாகப் பொருந்தி வரும் என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.

தர நிலை

எந்த பல்கலை, உலகளவில் எத்தனையாவது தர நிலையில்(ranking) இருக்கிறது என்பதைப் பற்றிய விபரங்களைப் பார்த்து, அதன்மூலம் உங்களின் தேர்வை மேற்கொள்ளவும். கல்வி மலர் இணையதளத்தில், அந்த ரேங்கிங் விபரங்களைப் பெறலாம்.

உதவிகள்

பல வெளிநாட்டுப் பல்கலைகள், மாணவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிசெய்ய, பல திட்டங்களை வைத்துள்ளன. எனவே, அதைப்பற்றி விரிவாக, தவறின்றி அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட துணைத் தூதரகங்களுக்கு சென்று, தொடர்புடைய பல்கலைப் பற்றிய தெளிவான விபரங்களை அறிந்துகொள்ளவும்.

சீனியர் அல்லது முன்னாள் மாணவர்

உங்களால், ஒரு வெளிநாட்டுப் பல்கலையின் சீனியர் மாணவர் அல்லது முன்னாள் மாணவரை சந்திக்க முடிந்து, அவரிடம் சிறிதுநேரம் செலவழிக்க முடிந்தால், அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

முதல் காரணம், அவர் படிக்கும் பல்கலையிலேயே நீங்களும் போய் சேருகையில், ஒரு தெரிந்த முகத்தின் அருகாமையை உணர முடியும் மற்றும் அதன்மூலம் வேறு சில நண்பர்களின் அறிமுகமும் எளிதாக கிடைக்கும். இரண்டாவது, முன்னாள் மாணவர்களின் பரிந்துரையின் மூலமாக, குறிப்பிட்ட பல்கலையில் உங்களுக்கு இடம் கிடைப்பதை எளிதாக்கலாம்.

பணி வாய்ப்புக்கான சந்தை

உங்கள் துறை தொடர்பான தொழில் நிறுவனங்கள் எந்த பல்கலைக்கு அருகிலேயே இருக்கின்றன என்பதைப் பார்க்கவும். ஏனெனில், பல தொழில் நிறுவனங்கள், தங்கள் பகுதியில் அமைந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிலிருந்தே, தங்களுக்கான பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

அங்கீகாரம்

உள்ளூர் அளவிலும், சர்வதேச அளவிலும் அந்த குறிப்பிட்ட பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

தங்குமிடம்

குறிப்பிட்ட பல்கலையிலுள்ள தங்குமிட வசதிகள் மற்றும் அப்பல்கலையின் இருப்பிடம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக கவனிக்க வேண்டும். அப்போதுதான், அதிக செலவின்றி, உங்களுக்கான ஒரு வசதியான தங்குமிடத்தை அமைத்துக்கொள்வதைப் பற்றி திட்டமிட முடியும்.

ஒரு பொருத்தமான வெளிநாட்டுப் பல்கலையைத் தேர்ந்தெடுக்க மேற்கூறிய அம்சங்களை சிறப்பாக ஆராய்ந்து முடிவுசெய்தால், எதிர்காலத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us