தூரத்தில் வசித்தால் செய்ய வேண்டியது என்ன? | Kalvimalar - News

தூரத்தில் வசித்தால் செய்ய வேண்டியது என்ன?

எழுத்தின் அளவு :

உங்களுக்கு ஒரு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்திருக்கலாம். ஆனால், நேர்முகத் தேர்வு நடைபெறும் நகரத்திலிருந்து, நீங்கள் பல மணி நேரங்கள் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் இருக்கலாம். எனவே, இதுபோன்ற சூழலில் தயாராவது குறித்து சில யோசனைகள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரத்து, உங்களுக்கான அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும். நீங்கள், குறிப்பிட்ட இடத்திலிருந்து தொலைவில் வசிப்பவராக இருப்பின், முடிந்தளவு முதல் நாளிலேயே, நேர்முகத் தேர்வு நடக்கும் நகரத்திற்கு சென்றுசேருதல் மிகவும் நன்று.

ஏனெனில், ரயில் மற்றும் பேருந்து பயணங்களில், எப்போது எந்தமாதிரி தடங்கல்கள் வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. நாம் சரியாக இந்த நேரத்தில் போய் சேர்ந்து விடலாம் என்று கணக்கிட்டு பயணம் செய்வது புத்திசாலித்தனமான காரியமாக இருக்காது.

எனவே, முடிந்தளவு முதல் நாள் மதியமாவது குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேருவது நலம். அதன்மூலம், அந்த இடம் தெரியாத இடமாக இருந்தால், அதற்கு எப்படி போவது, எந்த எண் பேருந்து பிடிப்பது அல்லது ஆட்டோவில் போகலாமா என்பதை குறித்து விசாரித்து, ஒரு முடிவுக்கு வர முடியும்.

நேர்முகத் தேர்வு இடம் உங்களுக்கு தெரியாத இடமாக இருப்பின், தொலைபேசி மூலமாக, அந்த இடத்திற்கான குறிப்பிட்ட Land mark பற்றி விசாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இதன்மூலம் விசாரிப்பதற்கு எளிதாக இரக்கும்.

மேலும், நேர்முகத் தேர்வுக்கு நீங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்களோடு பல பேர் அழைக்கப்பட்டிருப்பார்கள். எனவே, காலையில் அல்லது மதியம் தொடங்கும் நேர்முகத் தேர்வானது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்துவிடும். எனவே, இரவே ஊர் திரும்பி விடலாம் என நினைத்து, அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ஏனெனில், பல நேர்முகத் தேர்வுகள் (ஆண்களைப் பொறுத்தவரை), நடு இரவு வரைக்கும் நீண்டு கொண்டே செல்லும் வாய்ப்புள்ளவை. எனவே, முன்கூட்டியே திட்டமிடுவதோ அல்லது ரயில், பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்வதோ கூடாது. அப்படி ஒரு நிலை வரும்போது, அந்த நேரத்தில் எங்கு தங்குவது என்பது குறித்து தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள், நேர்முகத் தேர்வு குறித்து கடிதம் மூலமான அழைப்பையும், தகவலையும் பெற்றாலும் கூட, புறப்படும் முன்பாக, ஒருமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிசெய்து விட்டு புறப்படவும். ஆனால், அதற்காக, திட்டமிட்டபடி நேர்முகத் தேர்வு நடக்குமா? அல்லது நடக்காதா? என்று கேட்கக்கூடாது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடமோ அல்லது தேதியோ அல்லது நேரமோ, எதிர்பாராமல் மாறலாம். அதற்கு நிர்வாக காரணங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கலாம். அதுகுறித்து அவர்கள் உங்களுக்கு அவசரமாக கடிதம் மூலம் தெரிவித்தாலும்கூட, அது உங்களுக்கு கிடைப்பதற்கு தாமதமாகலாம். எனவே, அதற்குரிய தகவல், தொலைபேசி அல்லது ஈ-மெயில் ஆகியவற்றின் மூலமே தரப்படும். இல்லையெனில், குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்திலும் அந்த தகவல் வெளியிடப்படும்.

எனவே, புறப்படுவதற்கு முன்னதாக, உங்களின் ஈ-மெயில் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டே புறப்படவும். இல்லையெனில், தொலைபேசி மூலமாகவும் கேட்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், உங்களின் பணமும்,நேரமும் மிச்சமாகும்.

நேர்முகத் தேர்வுக்காக, வெளியூர் என்று புறப்பட்டால், மிக நுணுக்கமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றாற்போல், மிக அளவாக பணம் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனமான காரியமல்ல. எந்த விதத்தில் வேண்டுமானாலும் அவசர செலவு நேரலாம். எனவே, அப்போது எங்கே ஓரிடத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்க வேண்டியிருக்கும். எனவே, தேவைக்கும் சற்று அதிகமாகவே பணம் எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது வங்கியில் இருந்தால், ATM Card வைத்துக்கொள்ளலாம்.

வெளியூர் நேர்முகத் தேர்வுக்கு செல்லுகையில், உடை விஷயத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில், நீங்கள் போட்டுக்கொண்டு கிளம்பும் ஒரு உடை, பயணத்தின்போது கசங்கிவிடும். எனவே, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்கையில், அழுக்கற்ற, கசங்காத உடையணிந்து செல்லும் வகையில், ஒரு செட் உடையை தயாராக உடன் கொண்டு செல்வது முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us