எம்.பி.ஏ - உள்நாட்டில் படிக்கலாமா? வெளிநாட்டில் படிக்கலாமா? | Kalvimalar - News

எம்.பி.ஏ - உள்நாட்டில் படிக்கலாமா? வெளிநாட்டில் படிக்கலாமா?

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ., மோகம் கொண்ட இளைஞர்களுகு இந்த கேள்விக்கான பதில் முக்கியமானது. அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இப்படிப்பின் பிரதான நோக்கமாக இருப்பதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வாய்ப்புகளைப் பற்றி மாணவர்கள் குழப்பத்துடன் இருப்பர். எனவே, அவர்கள் தெளிவு பெறுவதற்கான கட்டுரை இது.

உலகளாவிய நெட்வொர்க் மற்றும் நடைமுறை அனுபவம்

சில வருடங்கள் பணிபுரிந்துவிட்டு, அதன்பிறகு எம்.பி.ஏ., படித்து அதன்மூலமாக கார்பரேட் தொழில்துறையில் பெரிய நிலைக்கு வளர ஆசைப்பட்டால், உள்நாட்டு எம்.பி.ஏ., படிப்பைவிட, வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பே பல அம்சங்களில் சிறந்தது. ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை, பாடத்திட்ட உள்ளடக்கத்தில் போதுமான அளவில் காலமாறுதலுக்கேற்ற புதுமைகள் புகுத்தப்படவில்லை.

இந்தியாவில் சில கல்வி நிறுவனங்களைத் தவிர, பல விரிவுரைகள், மாணவர்களை, ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கும் வகையில் நெருக்குவதாய் அமைந்துள்ளன. வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ளும் ஒருவர், உலகளாவிய அமைப்பில் நிகழும் கலாச்சார வேறுபாடுகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் மனத்திறனை பெற்றிருப்பார்.

முன் தேவைகள்

வெளிநாட்டில் படிக்க நினைக்கும் ஒருவர், தேவையான நிதி ஏற்பாடுகளை செய்துகொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் படித்த உள்நாட்டு கல்வி நிறுவனத்தில், நீங்கள் பல்கலை அளவில் முதல் ரேங்க் பெற்றிருந்தாலும்கூட, வெளிநாட்டு பல்கலையில் எம்.பி.ஏ., படிக்க, வாழும் செலவினங்கள் தவிர்த்து, குறைந்தது ரூ.7 முதல் ரூ.8 லட்சம் வரை செலவாகும்.

நிதிநிலை தவிர்த்து, தகுதிநிலை என்று பார்த்தால், ஒருவர் குறைந்தபட்சம் 2 அல்லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே, வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பில் சேர முடியும். அதனுடன் சேர்ந்து, GRE/GMAT ஆகிய தேர்வுகளில் ஏதாவதொன்றின் மதிப்பெண் மற்றும் நல்ல அகடமிக் செயல்பாடுகள் போன்றவை முக்கியமானவை.

வேலை வாய்ப்புகள்

பல நாடுகளில், விசா நடைமுறைகளில் பெரியளவிலான மாற்றங்கங்கள் செய்யப்பட்டிருப்பதால், படிப்பு முடிந்தபிறகு நடைபெறும் கோடைகால மற்றும் இறுதி Placement நிகழ்ச்சிகளில், வேலை வாய்ப்புகள் குறைந்தளவே கிடைக்கின்றன.

கடும் உழைப்பே பிரதானம்

இந்தியாவில் பல வணிகப் பெரும்புள்ளிகளின் பிள்ளைகள், தங்களின் குடும்ப வணிகத்தில் கோலோச்சுவதற்காக, வெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிக்க செல்கிறார்கள். மேலும், இந்தியாவில் ஐ.ஐ.எம்., போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காதவர்களும் வெளிநாடுகளுக்கு எம்.பி.ஏ., படிக்க செல்கிறார்கள்.

ஆனால் ஒன்றை நன்றாக புரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பல்கலையில் ஒருவர் எம்.பி.ஏ., படித்துவிட்டால் மட்டும் அவர் வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்றுவிட்டதாக அர்த்தம் இல்லை. கடின உழைப்பு மற்றும் சோர்வில்லாத மனம் ஆகியவைதான், ஒருவரை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை மறந்துவிடக்கூடாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us