ஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா? | Kalvimalar - News

ஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா?

எழுத்தின் அளவு :

இந்தாண்டிற்கான ஜே.இ.இ., மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடக்கிறது. அத்தேர்வின் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் உள்ள சாதக - பாதகங்களை தெளிவாக அறிந்தால், நமக்கானதை தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.

பொறியியல் படிப்புகளில், இளநிலைப் பட்டப் பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாக JEE தேர்வு திகழ்கிறது. மெயின் மற்றும் அட்வான்ஸ்டு ஆகிய இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது இத்தேர்வு.

JEE Main தேர்வை, ஆன்லைன் முறையில் எழுதுவதா அல்லது ஆப்லைன் முறையில் எழுதுவதா என்ற குழப்பம், பல மாணவர்களிடம் உண்டு. எந்த முறையில் எழுதினால், சிறப்பாக இருக்கும் என்ற தெளிவு இருந்தால்தான், தங்களுக்கு ஏற்றதை மாணவர்களால் தேர்வு செய்ய முடியும்.

எனவே, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளிலுள்ள சாதக - பாதக அம்சங்களை இக்கட்டுரை அலசுகிறது.

ஆப்லைன் தேர்வு

பேப்பர் - பேனா அடிப்படையில் நடைபெறவுள்ள இத்தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது.

இதன் சாதக அம்சங்கள்

ஆப்லைன் முறைதான், பெரும்பாலான மாணவர்களால், நகரங்களில் வசிப்பவர்கள் உட்பட, விரும்பி தேர்வு செய்யப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே இந்த முறையில் தேர்வு எழுதி பழகியதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலும், ஆன்லைன் முறையில் எழுதும்போது, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்வெட்டு பிரச்சினையால், தேர்வை இருமுறை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பல மாணவர்கள் ஆப்லைன் முறையையே தேர்வு செய்கின்றனர்.

மேலும், பல சமயங்களில் ஆன்லைன் தேர்வை எழுதும்போது, சம்பந்தப்பட்ட கணினிகள், நன்கு பரிசோதிக்கப்பட்டு, தயார்செய்து வைக்கப்படுவதில்லை. இதனாலும் பல சிக்கல்கள் எழுகின்றன.

இதுதவிர, ஆப்லைன் முறையில் எழுதுவோர், நேரத்துக்கு தக்கபடி எழுதிப் பார்த்து பயிற்சி செய்து கொள்கிறார்கள். அந்த பயிற்சியின் பொருட்டும், அவர்கள், ஆப்லைன் முறையையே விரும்பி தேர்வு செய்கின்றனர். திடீரென ஆன்லைன் முறையை தேர்வு செய்தால், தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தயங்குகின்றனர்.

Test Booklet

தேர்வு முடிந்தவுடன், test booklet -ஐ வீட்டிற்கு கொண்டு வர முடிவதன் மூலமாக, தாங்கள் வழங்கிய பதில்களை சரிபார்க்க முடியும். இதன்மூலம் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என்பதை அவர்களால் தோராயமாக கணக்கிடவும் முடிகிறது.

பாதகங்கள்

நேர விரயம்

இந்த முறையில் அனைத்து விபரங்களையும் ஒவ்வொன்றாக எழுதி நிரப்ப வேண்டியுள்ளது மற்றும் சரியான விடையை, பென்சில் மற்றும் பேனாவைக் கொண்டு shade செய்ய வேண்டியுள்ளதால் அதிக நேரம் விரயமாகிறது.

திருத்த முடியாது - ஒரு தடவை ஒரு பதிலில் shade செய்துவிட்டால், அதை மீண்டும் மாற்றுவது இயலாத காரியம்.

தேடுதல்

முன்னதாக அல்லது முந்தையப் பக்கத்தில் அளிக்கப்பட்ட ஒரு பதிலை மீண்டும் சரிபார்க்க முயலும்போது, தேவையற்ற நேர விரயம் ஏற்படுகிறது.

ஆன்லைன் தேர்வு

JEE Main ஆன்லைன் முறையிலான தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் 9, 11, 12, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

சாதக அம்சங்கள்

நேர சேமிப்பு

சரியான பதிலை, கணினி mouse மூலமாக எளிதாக கிளிக் செய்து அளிக்கலாம். கணினி இயக்குவதில் நல்ல பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்த தேர்வு  எளிதாக இருக்கும். ஏனெனில், ஆப்லைன் முறையில், பதில்களை shade செய்து அளிக்கும்போது, பலரும் அதை சிரமமாகவும், நேர விரய அம்சமாகவும் உணர்கிறார்கள்.

ஆப்லைன் முறையில் shade செய்து ஒரு பதிலை அளிக்கும் நேரத்தில், ஆன்லைன் முறையில் கிளிக் செய்வதன் மூலம், குறைந்தது 3 பதில்களை அளித்து விடலாம்.

திருத்தம்

ஆன்லைன் தேர்வு முறையில், ஒரு பதிலை தவறாக கிளிக் செய்துவிட்டால், அதை திருத்துவதற்கான வசதி உண்டு. இது உண்மையில் மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம். ஆனால், ஆப்லைன் முறையில் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆன்லைன் முறையில் எப்போது வேண்டுமானாலும், திருத்த நினைக்கும் பதிலை திருத்திக் கொள்ளலாம்.

எளிதான தேடல்

சரியாக பதில் தெரியாத சில கேள்விகளுக்கு நாம் உத்தேசமாக பதில் அளிப்போம். ஆனால், அதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். எனவே, கடைசியில் நாம் அதை மதிப்பாய்வு செய்து, நமக்கு உறுதியாக தெரியும் பதிலை மாற்ற, ஆன்லைன் முறையில் முடியும்.

வித்தியாசம்

கணினி திரையில், கேள்விகள் தங்களின் வகைக்கேற்ப பல நிறங்களில் தெரியும். உதாரணமாக, பதிலளிக்கப்பட்ட கேள்விகள் ஒரு நிறத்திலும், பதிலளிக்கப்படாத கேள்விகள் ஒரு நிறத்திலும், மீண்டும் மதிப்பாய்வு செய்ய வேண்டிய பதில்களுக்கான கேள்விகள் ஒரு நிறத்திலும் தெரியும். இதன்மூலம், தேர்வெழுதுபவர் மிகவும் எளிதாக உணர்கிறார்.

ஆனால், ஆப்லைன் முறையில், ஒவ்வொன்றையும் கவனமாக தேட வேண்டும் மற்றும் இதனால் நேர விரயம் அதிகம் மற்றும் மாற்றி செய்துவிடவும் வாய்ப்புண்டு.

நிற வித்தியாச அம்சமானது, GATE தேர்வில் இருக்கும் Pool - Proof போன்றது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

வசதியான தேதிகள்

ஆன்லைன் தேர்வு மொத்தம் 4 தேதிகளில் நடத்தப்படுவதால், தனக்குப் பொருத்தமான தேதியை ஒருவரால் தேர்வு செய்ய முடியும்.

குறைந்த கட்டணம் - ஜே.இ.இ., மெயின் 2014 தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் CBT -க்காக மிகவும் குறைந்தளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதக அம்சங்கள்

பழகும் சிக்கல்

புதிதாக பழகுபவர்களுக்கு ஆன்லைன் தேர்வு சில சிக்கல்களை உருவாக்கலாம். மேலும், JEE Main கணினி அடிப்படையிலான தேர்வில், மாணவர்களுக்கு போதுமான அளவில் பழக்கமும், பயிற்சியும் இல்லை.

மின்வெட்டு

ஆன்லைன் தேர்வில் மின்வெட்டு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால், தேர்வை திரும்பவும் எழுதும் சிக்கல் எழும். 2013ம் ஆண்டில் இதுதொடர்பான சில புகார்கள் எழுந்தன. ஆனால், இந்த 2014ம் ஆண்டில் இந்த பிரச்சினையை தவிர்க்கும் பொருட்டு, விரிவான ஏற்பாடுகளை CBSE செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களுக்கு, மின்வெட்டு தொடர்பான பயமும், தயக்கமும் இன்னும் நீங்கவில்லை.

Booklet இல்லாமை

தாங்கள் அளித்த பதில்கள் சரியானவையா என்று சரிபார்க்கும் வகையில், ஆப்லைன் முறை போன்று, test booklet வசதி இங்கே கிடையாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us