சிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

சிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

சி.எம்.ஏ.டி., எனப்படும் புதிய தேசிய அளவிலான நுழைவுத்தேர்வின் மதிப்பெண்கள், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற அனைத்து மேலாண்மைப் படிப்புகளிலும் மாணவர்களை சேர்க்க, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2012ம் ஆண்டு AICTE அமைப்பால், இந்த அகில இந்திய அளவிலான CMAT தேர்வு, நாடெங்கிலும், மேலாண்மை படிப்பில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஏனெனில், பல்வேறான நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவது, அவர்களின் காலம், பணம் மற்றும் உழைப்பு ஆகிய அனைத்தையும் வீணடிக்கிறது.

எனவேதான், தேசியளவில் இந்த நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்வு மதிப்பெண்கள், AICTE அங்கீகாரம் பெற்ற பகுதிநேர எம்.பி.ஏ., படிப்பில் சேரவும் எடுத்துகொள்ளப்படுகின்றன. மேலும், AICTE அங்கீகாரம் பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் பல மாநில அளவிலான நுழைவுத்தேர்வுகள், இந்த புதிய CMAT தேர்வால் நீக்கப்பட்டுள்ளன.

ஆயினும், இத்தேர்வு புதிய ஒன்று என்பதால், இதைப்பற்றிய குழப்பம் அதிக மாணவர்களுக்கு உள்ளது. அவர்களுக்கு இருக்கும் சில கேள்விகள்,

AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, CMAT மதிப்பெண்கள் மட்டும்தான் கணக்கில் எடுக்கப்படுகின்றனவா?

CMAT தேர்வு, வரும் காலங்களில், மேலாண்மை படிப்புகளுக்கான, அனைத்து தேசிய நுழைவுத்தேர்வுகளையும் வழக்கிலிருந்து ஒழித்துவிடுமா?

போன்ற கேள்விகள் முக்கியமானவை. உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவை உள்ளிட்ட சில காரணங்களால், இக்கேள்விகளுக்கு முழு அளவிலான விடைகளை இப்போது வழங்குவது கடினம். இப்போதுவரை, இதர நுழைவுத்தேர்வு மதிப்பெண்களும், AICTE அங்கீகாரம் பெற்ற மேலாண்மை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

CMAT என்பது ஒரு ஆன்லைன் முறையிலான தேர்வாகும். வருடத்திற்கு இரண்டு முறை, அதாவது, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஒரு முறையும், பிப்ரவரி மாதத்தில் ஒரு முறையும் நடத்தப்படுகிறது. அதேசமயம், சில மாநில மாணவர்களுக்கு, சில விசேஷ காரணங்களுக்காக, 2013ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு CMAT தேர்வு நடத்தப்பட்டது.

இது ஒரு புதிய நுழைவுத்தேர்வு என்பதால், www.aicte-cmat.in என்ற வலைதளம் சென்று, சிமேட் மாதிரி தேர்வை எழுதிப்பார்த்து, ஒரு முன் அனுபவத்தை மாணவர்கள் பெறலாம். மாணவர்களின் மெரிட் அடிப்படையில் மட்டுமே, சிமேட் தேர்வு அவர்களை மதிப்பிடுகிறது. இத்தேர்வின் முக்கிய நோக்கம், ஒரு மாணவரை, படிப்பிற்கான சேர்க்கையிலிருந்து வெளியே தள்ளிவிடக்கூடாது என்பதுதான்.

இத்தேர்வில் பின்பற்றப்படும் ரேங்கிங் முறை, அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, மாணவர்களை மெரிட் அடிப்படையில் தேர்வுசெய்ய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தேர்வை எழுதும் ஒவ்வொருவரும், தான் பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

தகுதிகள்

இத்தேர்வை எழுதும் ஒருவர், இளநிலைப் படிப்பின் இறுதியாண்டு படிப்பவர் மற்றும் அப்போதுதான், தனது இளநிலை இறுதியாண்டு தேர்வை எழுதியிருப்பவர் என்ற நிலையில் இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட முறையில் தொலைதூரம் அல்லது பகுதிநேரம் அடிப்படையில் இளநிலைப் படிப்பை முடித்தவர்களும், இத்தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள்.

இத்தேர்வை எழுத அதிகபட்ச வயதுவரம்பு என்று எதுவும் கிடையாது. நீங்கள், ஒரே ஆண்டில் இரண்டுமுறை சிமேட் தேர்வை எழுதிவிட்டீர்கள் என்றால், மூன்றாவது முறை அத்தேர்வை எழுத முடியாது.

தேர்வு பிரிவுகள்

இத்தேர்வில் மொத்தம் 4 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் 25 கேள்விகள் இருக்கும். மேலும், நாம் ஒவ்வொரு பிரிவையுமே வரிசையாகத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மாறாக, நம் விருப்பப்படி எழுதலாம். ஒட்டுமொத்த தேர்வுக்கான காலஅளவு 180 நிமிடங்கள்.

இத்தேர்வில் நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் கிடைக்கும். அதேசமயம், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் தலா 1 மதிப்பெண்ணை இழக்க நேரும். அதேசமயம், பிரிவு வாரியான கட்-ஆப் மதிப்பெண்கள் இதற்கு இல்லை.

கட்டணம்

பொதுப்பிரிவு மற்றும் OBC மாணவர்களுக்கு, வங்கி கட்டணத்தோடு, ரூ.1200ம் சேர்த்து செலுத்த வேண்டும். அதேசமயம், SC/ST/PD பிரிவு மாணவர்களுக்கு வங்கி கட்டணத்தோடு, ரூ.600ம் சேர்த்து செலுத்த வேண்டும். கட்டணத்தை, ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்கின் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்தலாம். ஆனால், bank draft அல்லது cheque மூலமாக கட்டணம் செலுத்த முடியாது.

தயாராதல்

இதர தேசியளவிலான நுழைவுத் தேர்வுகளை ஒப்பிடுகையில், சிமேட் தேர்வானது, எளிதான ஒன்றாகவே மதிப்பிடப்படுகிறது. உங்களின் அடிப்படை அறிவு வலுவாக இருந்தால், பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது என்றே சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உங்களின் அடிப்படை அறிவை வலுவாக்கிக்கொள்ள, 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்களை மீண்டுமொருமுறை படித்து தெளியவும்.

மேலும், கடந்தாண்டு தேர்வு கேள்வித்தாளைப் பார்த்து, பதில் கொடுக்க முயற்சிக்கவும். இது ஒரு புதிய தேர்வு என்பதால், கேள்வித்தாள் கடந்த ஆண்டைப் போலவே கடினமாக இருக்கும் என்று நீங்களே நினைத்துக்கொள்ளக்கூடாது.

இத்தேர்வுக்காக, கடைசி நேரத்தில், உங்களை விரைவாக தயார்செய்யும் பொருட்டு, பல பயிற்சி மையங்கள் இயங்குகின்றன. இத்தகைய மையங்களின் முக்கிய நோக்கமே, பல மாதிரித் தேர்வுகளை நடத்தி, உங்களை மனதளவில், சிமேட் தேர்வுக்காக தயார் செய்வதுதான்.

இத்தகைய பயிற்சிகளின் மூலம், சிலவகையான கேள்விகளுக்கு பதிலளிக்க, short cut முறைகளை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். மேலும், செய்தித்தாள்களையும், புத்தகங்களையும் படித்து, நமது பொதுஅறிவை வளர்த்துக்கொண்டால், பொது விழிப்புணர்வு மற்றும் மொழி புரிந்துணர்வு உள்ளிட்ட சில பகுதிகளில் அதிக மதிப்பெண் பெற முடியும். மேற்கண்ட விஷயங்களை நீங்கள் தினமும் தவறாமல் செய்து வந்தால், உங்களால், நினைத்ததை சாதிக்க முடியும்.

தேர்வின் பகுதிகளும், மதிப்பெண்களும்

பிரிவு  -  கேள்விகளின் எண்ணிக்கை  -  மதிப்பெண்கள்

Quantitative techniques & data interpretation  -  25  -  100
Logical Reasoning  -  25  -  100
Language Comprehension  -  25  -  100
General Awareness  -  25  -  100

இதர விபரங்கள்

ஹெல்ப்லைன் எண் - 022-40679404

பேக்ஸ் எண் - 022-25814283

ஈ-மெயில் - customercare@aicte-cmat.in.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us