அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் - உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம்! | Kalvimalar - News

அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் - உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம்!பிப்ரவரி 01,2015,10:40 IST

எழுத்தின் அளவு :

உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது, அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்.

எகிப்து நாட்டின், அலெக்சாண்டிரியா நகரில் உள்ள, மிகப் பழமையான நூலகத்திற்கு இணையான இந்த நூலகம், தொல்லியல் துறையின் கீழ், சென்னை பல்கலை வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன.

விடுதலைக்கு முன் இருந்த இந்தியாவின், தலைமை நில அளவையாளர் காலின் மெக்கன்சி உள்ளிட்டோர் சேகரித்த, வாய்மொழி எழுத்தாக்கம் பெற்ற குறிப்பேடுகள், தாள் சுவடிகள், 300 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகள் இங்கு, பாதுகாக்கப் படுகின்றன.

இந்த நூலகத்தில், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரபி, பெர்ஷியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின், ஆவணங்களும், மொழி கண்டறிய முடியாத சுவடிகளும் உள்ளன. இவற்றில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருத்துவ குறிப்புகள், கணிதம், வானியல், வேதங்கள், ஆகமங்கள், கட்டட கலை, இசை, சிற்பம், கவின் கலைகள், வரலாறு, இலக்கண, இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

அதனால், ஆய்வாளர்களும், பதிப்பாளர்களும் இந்த நூலகத்தை மொய்த்தவண்ணம் இருப்பர். பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கும், பழைய ஆவணங்களுக்கும் இடையில், சில வேறுபாடுகள் ஏற்படுவதாலும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிப்பதாலும், ஆய்வாளர்கள், ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரமுடியாமல், பல்வேறு அவதிக்குள்ளாயினர்.

இந்த நிலையில், அனைத்து ஆவணங்களையும், ஸ்கேன் செய்து, இணையதளத்தில் வெளியிட தொல்லியல் துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், எல்காட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், ஓலைச்சுவடிகளை, லெமன்கிராஸ் எண்ணெய், சிட்ரெனெல்லா எண்ணெய், கார்பன் உள்ளிட்டவற்றை கொண்டு பதப்படுத்தி ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்து வருகிறது, தொல்லியல் துறை.

இந்த ஆவணங்கள், 600 டி.பி.ஐ., கொண்ட, டிப் வகை வண்ணப் படங்களாக மாற்றப்பட்டு, பி.டி.எப். வடிவத்தில், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று லட்சம் பக்கங்களுக்கு மேல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அவை, http:/www.tnarch.gov.in என்ற இணையதளத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை பதிவேற்றப்பட உள்ளன. இந்த பணிகள், இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் முழுமையாக முடியும் என்பது தொல்லியல் துறையின் கணிப்பு.

இந்த இணையத்தில், சப்தரிஷி நாடியின் ஓலைச்சுவடியில் உள்ள ஒவ்வொரு லக்னமும், பல்வேறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளது. அரிய தாள் சுவடிகளான, அகராதிகள், நிகண்டுகள், இலக்கண விளக்கம், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர் மற்றும் பெயர் அறிய முடியாதோரின் உரைகளுடன் உள்ள தொல்காப்பியம், நன்னூல் விருத்தி, நாற்கவிராச நம்பி அகப்பொருள் விளக்கம், நேமிநாதம், புறப்பொருள் வெண்பா மாலை, பதிற்றுப்பத்து, மதுரைக் காஞ்சி, ஆசாரக் கோவை, திருக்குறள், நீதித்திரட்டு உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களுக்கு, உரையுடன் கூடிய பல கையெழுத்து குறிப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வேடுகள், அகழாய்வு, சோழர்கால சிலைகள், சிந்துவெளியும் சங்கமும் குறித்த சான்றுகள், கல்வெட்டுகள், குடைவரை ஓவியங்கள், தமிழக செப்பேடுகள், கோவில்கள், காசுகள், மாவட்ட வரலாறுகள் உள்ளிட்ட அரிய ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால், உலகெங்கிலும் பண்டைய, இந்திய, தமிழ் பண்பாடு, கலை, கலாசாரம் குறித்த ஆய்வுகளும், கருத்துருக்களும், விவாதங்களும் விரிவடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நூலகத்தில் உள்ள அரிய சுவடிகளில் சில...

* சிவலிங்க வடிவில் உருவாக்கப்பட்டுள்ள, திருவாசக ஓலைச்சுவடி
* விரல் அளவு நீளமே உள்ள, விளக்கமான, கரிநாள் விளக்கம் நூல், 1.5 அடிநீளமுள்ள ஓலைச்சுவடிகள்
* ஒரே ஓலையில் அதிகபட்சமாக, 36 வரிகளை கொண்ட தொல்காப்பியம் * சக்கர வடிவ சூலினி மந்திர சுவடி
* 70 சதவீதத்துக்கும் அதிகமான சங்க இலக்கிய நூல்கள்
* திருவள்ளுவர், மதுரை தமிழ்ச் சங்கத்தில், திருக்குறளை அரங்கேற்றியதற்கான ஆதாரம் சொல்லும் சங்கத்தார் சரித்திரம்
* உ.வே.சா., குறிப்பெடுத்த, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை
* பல நிகண்டுகள்
* திருக்குறள் கதைகள், சிற்றிலக்கியங்கள், மாலைகள், பள்ளுகள்
* மொழி தெரியாத சுவடிகள்
* திருமாலின் பத்து அவதாரங்களும் கோட்டோவியங்களாக வரையப்பட்ட ஒரே ஓலை
* தோல் சுவடியில், பெர்ஷிய மொழியில் எழுதப்பட்ட, பைபிளின் புதிய ஏற்பாடு
* சிவப்பு நிறம், பூச்சிகளுக்கு வெறுப்பை உண்டாக்கும் என்பதால், இங்குள்ள, தாள் சுவடிகளுக்கு, சிவப்பு நிற அட்டைகள் போடப்பட்டுள்ளன.

இங்குள்ள நூல்களில் பல, மதுரை நாயக்கர் மகாலிலும் உள்ளன.

இதற்கான காரணங்கள் இரண்டு...

* அப்பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பது.
* இங்கு, இடப்பற்றாக்குறை உள்ளது.
* இங்கு, அரிய வகை, வாரெழுத்து ஆணி, குண்டெழுத்தாணிகள் உள்ளன.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us