ஆங்கில மொழித் திறன் தேர்வுகள்! | Kalvimalar - News

ஆங்கில மொழித் திறன் தேர்வுகள்!நவம்பர் 08,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மதிப்பிடும் பொருட்டு நடத்தப்படும் தகுதி தேர்வுகளில் முக்கியமானவை, டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., 
 
ஆங்கில மொழியில் மாணவர்களுக்கு உள்ள மொழிப் புலமையை எழுதுதல், வாசித்தல், பேசுதல் மற்றும் கேட்டல் ஆகிய தேர்வுகளால் சோதித்துத் தர நிலைப்படுத்துவதே இந்த தேர்வுகளின் நோக்கம். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்டுள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டிராத இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களிடம், இந்த தேர்வு மதிப்பெண்களை முக்கிய தகுதியாகவும், அவசியமானதாகவும் எதிர்பார்க்கின்றன.

குறிப்பாக, டோபல் மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்., ஆகிய இரண்டில் ஒரு தேர்வை கட்டாயம் எழுதி, அதில் குறிப்பிட்ட மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் விதிகளை வகுத்துள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு தேர்வுகளின் முக்கியத்துவம், வேறுபாடுகள், தேர்வு முறைகள் போன்ற அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

டோபல்:
டோபல் என்பதற்கான விரிவாக்கம் ‘டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் ஏஸ் எ பாரின் லாங்குவேஜ்’ என்பதே. இத்தேர்வு, ‘எக்ஸாமினேஷன் டெஸ்டிங் சர்வீஸ்’ (இ.டி.எஸ்.,) அமைப்பால் வடிவமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செல்லும். 130க்கும் அதிகமான நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இத்தேர்வு மதிப்பெண்களை அங்கீகரிக்கின்றன.

விபரங்களுக்கு: https://www.ets.org/toefl

ஐ.இ.எல்.டி.எஸ்.,:
ஐ.இ.எல்.டி.எஸ்., என்று சுருக்கமாக கூறப்படும் ‘இன்டர்நேஷனல் இங்கிலிஷ் லாங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம்’, கேம்பிரிட்ஜ் பல்கலையின் இ.எஸ்.ஒ.எல்., பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஐ.டி.பி., எஜூகேஷனல் பிரைவேட் லிமிட்டட் ஆகிய அமைப்புகளால் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன.

இந்த தேர்வு, கல்வி சார்ந்தது மற்றும் பொதுப் பயிற்சி என இரு வகையான வடிவங்களைக் கொண்டுள்ளது. அதாவது இளநிலை, முதுநிலை அல்லது தொழில்முறை பதிவுகளுக்குக் கல்வி சார்ந்த வடிவத் தேர்வு எனவும், வேலை வாய்ப்பிற்கான இட மாறுதல்களுக்கு பொது பயிற்சி வடிவ தேர்வு எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு: https://www.ielts.org/

முக்கிய வேறுபாடுகள்:
* டோபல் தேர்வு மல்டிப்பில் சாய்ஸ் கேள்விகளை மட்டுமே கொண்டுள்ள நிலையில், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு மல்டிப்பில் சாய்ஸ் கேள்விகளுடன், கோடிட்ட இடங்களை நிரப்புக, பொருத்துக ஆகிய கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.

* அமெரிக்க வகை மொழி பயன்பாடு மற்றும் உச்சரிப்பு கொண்டவர்களுக்கு டோபல் தேர்வும், பிரிட்டிஷ் வகை மொழி பயன்பாடு மற்றும் உச்சரிப்பு கொண்டவர்களுக்கு ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வும் ஏற்றது.

* டோபல் தேர்விற்கு 4 மணி 30 நிமிடமும், ஐ.இ.எல்.டி.எஸ் தேர்விற்கு 2 மணி 45 நிமிடமும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:
இரண்டு தேர்வுகளும் படித்தல், கேட்டல், பேசுதல், எழுதுதல் ஆகிய நான்கு பிரிவுகளையே கொண்டுள்ளது. அந்தந்த நாட்டுக் கல்வி முறைக்கு ஏற்றார் போல் இந்த பிரிவுகளில் கேள்விகள் அமைந்திருக்கும். குறிப்பாக உயர்கல்வி மற்றும் குடி உரிமைக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் இந்த இரு தேர்வுகள் பிரபலமானதாகவும், மிக முக்கியமானதாகவும் விளங்குகிறது.

இந்த தேர்வுகள் அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தேர்ச்சி அடைவது என்பதை விட, தேர்வில் பெறும் மதிப்பெண் சதவீதம் தான், இந்த தேர்வுகளை பொறுத்தமட்டில் முக்கியமானவை. முறையான பயிற்சியும், போதிய மொழி புலமையும் கொண்டுள்ள மாணவர்கள் இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தேர்வு:
டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுகளை தவிர பல கல்வி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றொரு ஆங்கில மொழித் திறன் தேர்வு, ‘கேம்பிரிட்ஜ் இங்கிலிஷ் அசஸ்மெண்ட்’.

யு.கே.,வில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இந்த தேர்வு சான்றிதழும் உலகின் 130 நாடுகளில் உள்ள 20,000திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படுகிறது. பிற ஆங்கில மொழி திறன் சோதனை தேர்வுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்வு பள்ளி நிலை, பொது மற்றும் உயர்கல்வி நிலை, வணிக நிலை என மூன்று முக்கிய பிரிவுகளாக நடத்தப்படுகிறது.  இதன்மூலம் தங்களுக்கு தேவையான நிலை தேர்வை மட்டும் எழுதி மொழி புலமையை நிரூபிக்க உதவுகிறது.

விபரங்களுக்கு: www.cambridgeenglish.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us