வெளிநாட்டுக் கல்வி: சோனோகிராபி | Kalvimalar - News

வெளிநாட்டுக் கல்வி: சோனோகிராபிசெப்டம்பர் 26,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாடுகளில் துணை மருத்துவம் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்புகள் என்றுமே பிரகாசம். அவற்றில், ‘சோனோகிராபி’ குறிப்பிடத்தக்கது!

முக்கியத்துவம்
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் உதவியால் மருத்துவ துறை வியக்க வைக்கும் அளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளது. அவ்வகையில், மனித உடலின் உட்பாகங்களை அப்படியே படம் பிடிப்பது குறித்து படிக்கும் படிப்பே, ‘சோனோகிராபி’!

அதிக ஒலி அலைகளை ஒருவரது உடலில் செலுத்தி, அதன்மூலம் உடலின் உட்பாகங்களை படமாகப் பெறுவதே இந்த தொழில்நுட்பம். ஒலிக் கதிர்கள் மிகவும் மென்மையான திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளில் பட்டு எதிரொலிக்கும் போது ஒரு வடிவத்தைப் படமாக காட்டுகிறது. பிரச்சனையின் தன்மையை, மருத்துவர்கள் இந்த படங்களின் மூலம் கணித்து, அதற்கான சிகிச்சைகளை சரியான நேரத்தில் தொடங்க இது பெரிதும் உதவுகிறது.

இந்தியாவில் பெரும்பாலும், ரேடியாலஜி மற்றும் இமேஜிங் படிப்பில் ஒரு சிறப்பு பாடமாகவோ அல்லது உட்பிரிவாகவோ மட்டுமே இது உள்ளது. ஆனால், அயல்நாடுகளில் தனி பட்டப்படிப்பாகவே இது வழங்கப்படுகிறது.

தகுதிகள்: பள்ளிப் படிப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெறலாம் அல்லது ரேடியாலஜியில் பட்டம் பெற்றவர்கள் அல்லது நர்சிங் போன்ற துணை மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தனி சான்றிதழ் படிப்பின் மூலம் ‘சோனோகிராபர்’ ஆகலாம்.

தேவைப்படும் திறன்:
சாமர்த்தியமாக ஒரே சமயத்தில் கை மற்றும் கண்களால் துல்லியமாக வேலை செய்யும் திறன்.
பதட்டமான நிலையில் இருப்பவர்களை அமைதிப்படுத்தும் பேச்சு திறன்.
புதிய தொழில்நுட்பங்களை திறமையாகக் கையாளும் ஆற்றல்.

சிறப்பு பிரிவுகள்: ஜெனரல் அண்ட் ஸ்பெஷலைஸ்ட் சோனோகிராபி, அப்டாமினல் அல்ட்ராசவுண்ட், பிரெஸ்ட் அல்ட்ராசுவுண்ட், நியூரோசோனோகிராபி, கைனகாலஜிகல் அல்ட்ராசவுண்ட், வாஸ்குலார் அண்ட் மஸ்கிலோஸ்கெலிட்டல் சோனோகிராபி.

வேலை வாய்ப்புகள்: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பினை பெறலாம். சமீபத்திய புள்ளி விவரத்தின்படி இவர்களுக்கான தேவை உலகம் முழுவதிலும் அதிகமாக உள்ளது. ஆகையால் இந்தியாவில் மட்டுமின்றி இந்த துறை பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளிலும் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிறந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்:
* வெஸ்ட் கோஸ்ட் அல்ட்ராசவுண்ட் இன்ஸ்டிடியூட், அமெரிக்கா
* சிட்டி யூனிவர்சிட்டி ஆப் லண்டன், இங்கிலாந்து
* யூனிவர்சிட்டி ஆப் மெல்போர்ன், ஆஸ்திரேலியா
* சியாட்டல் யூனிவர்சிட்டி, அமெரிக்கா
* மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டி, இங்கிலாந்து

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us