‘அமெரிக்க விசா எளிது’! | Kalvimalar - News

‘அமெரிக்க விசா எளிது’!ஜூன் 12,2018,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த 20 ஆண்டுகளாக சிறியதும், பெரியதுமான அனைத்து அமெரிக்க பல்கலைக்கழகங்களும், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தரமான உயர்கல்விக்கான வாய்ப்பினை வழங்கி வருகின்றன!

பிற நாட்டு மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கத்தோடு, உலக நாடுகளில் மாணவர்களுக்கான விசா வழங்கும் முறைகளில் மிகவும் எளிமையான நடைமுறைகளை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. குறிப்பாக, இந்திய மாணவர்களுக்கு, இது ஒரு விலை மதிக்க முடியாத வாய்ப்பாக அமைகிறது. அமெரிக்காவில் பயிலும் 6ல் ஒரு வெளிநாட்டு மாணவர், ‘இந்தியர்’ என புள்ளிவிபரங்கள் தெரிவிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இயங்கும் அமெரிக்க துணை தூதரகத்தில், ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கான அனுமதி வழங்கப்படுகிறது. சில நாட்களில் 100க்கும் அதிகமான மாணவர் விசாக்கான அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்காவில் உயர்கல்வி பெறுவதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரது திறமைக்கும், ஆர்வத்திற்கும் ஏற்ப, அவரவர் விரும்பும் துறை மற்றும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. உதாரணத்திற்கு, இயற்பியலை முதன்மை பாடமாக எடுத்துப் படிப்பவர், துணை பாடமாக இசை  பாடத்தை தேர்வு செய்யலாம். அதேபோல், வேதியியலை முக்கிய பாடமாக படிப்பவர், அரசியல் தத்துவங்களை துணைப் பாடமாக தேர்வு செய்து கொள்ளலாம்!

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலுவதால், மாணவர்களுக்குப் பிற நாட்டு மாணவர்களுடனான அறிமுகம் எளிதில் கிடைக்கிறது. அத்தகைய தொடர்பு, எதிர்காலத்தில் அதிகாரிகள், தொழிலதிபர்கள், தகவல் ஆலோசகர்கள் என சர்வதேச அளவிலான நல்லுறவாக வலுப்பெறுகிறது. இவ்வாறு, சர்வதேச கல்வி, ஒருவரது வாழ்நாள் முழுவதும் பல்வேறு பலன்களை வழங்குவதாக அமைகிறது.

அமெரிக்காவின் மனித உரிமைச் சட்டங்கள், சமமான பாதுகாப்பு நடைமுறைகள், பன்முகத்தன்மைக் கொண்ட கருத்துகள், தரமான கல்வி உள்ளிட்ட சிறப்பம்சங்கள், உயர்கல்வி பெறத் தகுதியான இடமாக அமெரிக்காவை உருவாக்கியுள்ளது!

விசா தகவல்களுக்கு...

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள்,  www.educationusa.state.gov  என்கிற வலைத்தளத்தில் தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை 044-28574134 எனும் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம் .

-டேவிட் ராபர்ட்ஸ், விசா அதிகாரி, அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us