வங்கி பணியாளர் தேர்வாணையம் | Kalvimalar - News

வங்கி பணியாளர் தேர்வாணையம்டிசம்பர் 10,2022,12:49 IST

எழுத்தின் அளவு :

ஐ.பி.பி.எஸ்., என பிரபலமாக அறியப்படும் 'வங்கி பணியாளர் தேர்வாணையம்’, சர்வதேச தரத்தில் மதிப்பீடு மற்றும் பணியாளர் தேர்வை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு.

முக்கியத்துவம்:

வங்கி, காப்பீடு மற்றும் நிதி அமைப்புகளுக்கு தேவையான மற்றும் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்வதை முக்கிய பணியாக கொண்டுள்ளது. பணிக்கு தேவையான திறன் படைத்த நபர்களை வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் வாயிலாகவும் தேர்வு நடத்தும் திறன் பெற்றுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் மட்டும் பல்வேறு ஐ.பி.பி.எஸ்., தேர்வுகளை எழுத, 92 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.


அங்கீகாரம்:

சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 மற்றும் பம்பாய் பொது அறக்கட்டளை சட்டம் 1950ன்படி, ஒரு பொது அறக்கட்டளையின் கீழ் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் ‘அசோசியேட் உறுப்பினர்’ ஆகவும் இந்நிறுவனம் செயல்படுகிறது.

பணிகள்:

நவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் அனுபவத்தைக் கொண்டு, அனைத்து செயல்பாடுகளையும் விரைவாகவும், துல்லியமாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.



பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான பணியார்களை தேர்வு செய்தல், அதற்கான தேர்வுகளை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் உட்பட ஏராளமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்ப, பொருத்தமான அளவீட்டு சோதனைகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி, மதிப்பீடு செய்து, தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதுடன் இதர சேவைகளையும் வழங்கி வருகிறது.



பங்குபெறும் முக்கிய நிறுவனங்கள்:

ஐ.பி.பி.எஸ்., சமூகத்தின் வழக்கமான உறுப்பினர்களான பொதுத் துறை வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நபார்டு மற்றும் ஐ.டி.பி.ஐ., ஆகிய வங்கிகளுக்கு தேவையான மனித வளத்தை தேர்வு செய்து தருவதை முக்கிய பணியாக கொண்டுள்ளது.



மேலும், கிராமப்புற வங்கிகள், எஸ்.ஐ.டி.பி.ஐ., எல்.ஐ.சி., பொது காப்பீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் தேவையான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. சில முன்னணி பல்கலைக்கழகங்ள் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை தேர்வை திறம்பட நடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.



சாதனைகள்:
நாட்டின் பிரதான பணியாளர் தேர்வு அமைப்பான ஐ.பி.பி.எஸ்., ‘மல்டிபிள் சாய்ஸ்’ வகை கேள்விகள் மற்றும் உபகரகணங்களை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. ஒரே தருணத்தில், சில வெளிநாட்டு மையங்கள் மற்றும் நாடு முழுவதிலும் 200க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் லட்சக்கணக்கானவர்களுக்கு தேர்வை நடத்தும் வல்லமை கொண்டுள்ளது. பணியாளர்களுக்கு மட்டுமின்றி ஏ.ஜி.எம்., டி.ஜி.எம்., ஜி.எம்., போன்ற பல்வேறு உயர் பதவிகளுக்கான தேர்வையும் திறம்பட நடத்தி வருகிறது.

பிஎச்.டி., படிப்பு:
நிறுவனங்களுக்கு தேவையான மனித வளத்தை பெருக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள், பயிலரங்குகளை ஐ.பி.பி.எஸ்., நடத்தி வருகிறது. இவற்றுடன், எஸ்.என்.டி.டி.,  மகளிர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்று மேனேஜ்மெண்ட் துறையின் எச்.ஆர்., பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டியும் வருகிறது.

விபரங்களுக்கு:
www.ibps.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us