மகிழ்ச்சியாக படியுங்கள்! | Kalvimalar - News

மகிழ்ச்சியாக படியுங்கள்!அக்டோபர் 20,2022,19:31 IST

எழுத்தின் அளவு :

யு.பி.எஸ்.சி., வகுத்துள்ள விதிகளின்படி, சிவில் சர்விசஸ் தேர்வு எழுத ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு போதுமானது... ஆனால், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக அந்த தகுதி மட்டும் போதாது!அதிகாரிகளுக்கான தகுதிகள்மக்களின் பல்வேறு விதமான தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. தேசிய வளர்ச்சிக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் உறுதுணையாக விளங்கும் ஆட்சி நிர்வாகம் செயல்படும் விதம் குறித்த தெளிவான அறிவை ஐ.ஏ.எஸ்., தேர்வாகி ஆட்சியராக அமர விரும்பும் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும். ஆட்சியில் உயர் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளும் பெரும்பாலும் அதிகாரிகளின் ஆலோசனைகளே பெற்றே செயல்படுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் உட்பட அரசியலமைப்பில் உள்ள ஒவ்வொருவருடைய அதிகாரங்கள், கடமைகள், பணிகள் எவை என்பது குறித்து அறிந்துகொள்வதோடு, புதியவற்றை கற்றுக்கொள்வதில் தொடர் ஆர்வமும் இருத்தல் வேண்டும்.  சிறப்பான வாழ்க்கையை எதிர்நோக்கும் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில், அவர்களது தேவையை பூர்த்தி செய்யவும் கண்ணியமாக அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும், பல்வேறு தரப்பினரோடும் இணைந்து செயல்படும் வகையில் பலதரப்பு மக்களையும் புரிந்துகொள்ளும் மற்றும் அவர்களை முறையாக கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அரசாங்கம் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகளுக்கு திறந்த மனநிலையுடன் சரியான தீர்வு காணும் பண்பு வேண்டும். எந்த ஒரு நிலையிலும் பாரபட்சமற்ற, பாகுபாடற்ற, நடுநிலையை பின்பற்றும் பொறுப்பாளர்களாக இருத்தல் வேண்டும். ஆராய்ந்து அறிதல்உலகம் முழுவதும் நடைபெறும் அன்றாட முக்கிய நிகழ்வுகளை இடைவிடாது அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு சரியான நாளிதழ்கள், பத்திரிக்கைகளை தேர்வு செய்து வாசிக்க வேண்டும். 'எலக்ட்ரானிக் மீடியா’க்களை விட, நாளிதழ்களில் வரும் கருத்துக்கள் தரமானவை என்பது எனது கருத்து. சில ஊடகங்கள் ஒருதலை பட்சமாக செயல்படலாம் அல்லது ஒரு பரிமாணத்தை மட்டுமே மக்களிடையே ஆழமாக பதியவைக்க முற்படலாம். அவ்வாறு மறைமுக செயல்திட்டங்களுடன் செயல்படும் ஊடங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது. உண்மையை தேடி அறிய வேண்டும்; அதற்கான ஆற்றல்களை பெற்றிருக்க வேண்டும். சுய கருத்துக்கள் என்பவை உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருத்தல் அவசியம். அவை ஒருதரப்பிற்கு சாதகமானதாக இருக்கக்கூடாது.யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறை எந்த பாகுபாடும் இன்றி மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் எந்த பாகுபாடும் இன்றி நடைபெறுகிறது. அதில் வெற்றிபெற தொடர் கற்றல் வேண்டும். கற்றல் என்பது தேர்வுக்கானது மட்டுமல்ல... அது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய ஒன்று. மிகவும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொண்டே இருங்கள்... வாழ்க்கை வளமாகும்!-வி.பி. குப்தா, தலைவர், ராவ்ஸ் ஐ.ஏ.எஸ்., ஸ்டடி சர்க்கிள்.Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us