பன்முகத்திறன் அவசியம் | Kalvimalar - News

பன்முகத்திறன் அவசியம்ஜூலை 01,2022,16:58 IST

எழுத்தின் அளவு :

புதிய புதிய தொழில்நுட்பங்களால் கல்வித் துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அளவிட முடியாத மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அத்தகைய மாற்றங்களால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனா தாக்கத்துக்கு பிறகு உலகம் முழுவதும் பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லாமல் கற்றலும், பணிகளும் நடைபெற்றன என்றால் அதற்கு பேருதவியாக இருந்தது டிஜிட்டல் தொழில்நுட்பம். மேலை நாடுகளில் வீட்டில் சுவிட்ச் ஆப் செய்வதிலிருந்து விண்ணில் பறந்து கொண்டிருக்கும் செயற்கை கோள்களை இயக்குவது வரை அனைத்திலும் சாப்ட்வேர் ஆதிக்கம் செலுத்த தொடங்கி  உள்ளன. கொரோனா சில துறைகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய மற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தற்போது புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம். ரோபோடிக்ஸ், மின்வாகனங்கள், இணையம், தொலையுணர்வு தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, பசுமை தொழில்நுட்பம், செயற்கை  நுண்ணறிவு மற்றும் கருவிகள் வழி கற்றல், தரவு அறிவியல் ஆகிய சிறப்பு பாடப்பிரிவுகள் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 
தேர்வு செய்தல்நம்மிடம் என்ன திறமை இருக்கிறதோ அதற்கேற்ப பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். &'இந்த துறையில் சென்றால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவேன்’ என்ற உறுதி மாணவர்களிடையே வர வேண்டும். தினம் தினம் ஒரு மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் மாணவர்கள் தங்களை தினம் தினம் மேம்படுத்திக்கொண்டே இருக்க  வேண்டும். அப்போது தான் அந்த துறையில் மாணவர்கள் நிலைத்து நிற்கமுடியும். நற்பண்புகள், பெரியவர்களை மதிக்கும் குணம், மற்றவர்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்கும் நடத்தை, மற்றவர்களுக்கு உதவும் பண்புகள் ஆகியவை இருந்தால் தான் கற்றலில் மாணவர்கள் முழுமை அடைகிறார்கள். நன்றாக படித்தோம். பெரிய கம்பெனியில் வேலை கிடைத்தது என்பதோடு மாணவர்கள் நிற்க கூடாது. இந்த சமூகத்துக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்ய முன்வருவது தான் மனித பண்பு. ஆராய்ச்சி
உலக அளவில் இதுவரை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களின் பங்கு தான் அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அங்குள்ள பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் ஊக்குவித்து வருகின்றன. அதுபோன்ற முன்னேற்பாடுகள் தற்போது தான் நமது நாட்டில் தொடங்கி உள்ளன. சிறந்த கல்வியில் மட்டுமல்லாமல் ஆராய்ச்சியிலும் மாணவர்கள் நாட்டம் கொள்ள வேண்டும். இத்தகை ஆராய்ச்சி திறன்கள் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து வர வேண்டும். இதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும். மாணவர்கள் பன்முகத்திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொள்ளுதல், புதிய சிந்தனை, கற்பனை திறன், தலைமை பண்பு போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இன்றைய மாணவர்கள் உள்ளனர். -டி.லட்சுமி நாராயணசுவாமி, நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள், கோவை.
Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us