ஜே.இ.இ., மெயின் - 2022 | Kalvimalar - News

ஜே.இ.இ., மெயின் - 2022மார்ச் 16,2022,11:32 IST

எழுத்தின் அளவு :

நாட்டிலுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய முக்கியமான தேர்வு ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்’ எனப்படும் ஜே.இ.இ.,முக்கியத்துவம்:


இத்தேர்வு 2018ம் ஆண்டு வரை சி.பி.எஸ்.இ.,யால் நடத்தப்பட்டு வந்து நிலையில், 2019 முதல் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி - என்.டி.ஏ.,யால் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்வை, மாணவர்கள் விருப்பப்படி ஏதேனும் ஒரு தேர்வு அல்லது இரண்டு தேர்வுகளையும் எழுதலாம். இரண்டு தேர்வுகளையும் எழுதும்பட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்ற தேர்வே தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வி நிறுவனங்கள்:


ஜே.இ.இ., தேர்வு, முதல் நிலைத் தேர்வு - மெய்ன் மற்றும் முதன்மைத் தேர்வு - அட்வான்ஸ்டு என இரு நிலைகளில் நடத்தப்படுகிறது. 'மெய்ன்’ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எப்.டி.ஐ., எனும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகளால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் போன்ற கல்வி நிறுவனங்களிலும், 'அட்வான்ஸ்டு’ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., போன்ற கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை பெறலாம். ஜே.இ.இ., மெயின் -2022 தேர்வு எழுதியவர்களில் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் ரேங்க் பெறும் மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வுக்கு பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, ஜே.இ.இ., மெயின் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதிகள்:


12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதி பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். 2020 அல்லது 2021ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2022ம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் ஜே.இ.இ., மெயின் - 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும். வயது வரம்பு: இந்த தேர்விற்கு வயது வரம்பு கிடையாது. தேர்வு மொழிகள்: ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் இத்தேர்வுக்கான கேள்விகள் இடம்பெறும். நாடுமுழுவதிலும் நடைபெறும் இத்தேர்வில் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆங்கில மொழியில் கேள்விகள் இடம்பெறும். மாநிலங்களைப் பொறுத்து, இதர மொழிகளில் கேள்விகள் இடம்பெறுவது மாறுபடும். உதாரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தமிழ் வழியிலும் கேள்விகள் இடம்பெறும்.தாள்கள் மற்றும் கேள்வி முறைகள்:ஜே.இ.இ., மெயின்ஸ் தேர்வானது இரு தாள்களைக் கொண்டது. பொறியியல் அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் தாள் ஒன்றையும், ஆர்க்கிடெக்சர், பிளானிங் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் முறையே 2ஏ, 2பி, என இரண்டாம் தாளை எழுத வேண்டும். ஆர்க்கிடெக்சர் படிப்பிற்கான தேசிய அளவிலான தகுதி தேர்வாக 'நாட்டா’ இருக்கும் நிலையில் ஜே.இ.இ., தேர்வின் வாயிலாகவும் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேரலாம். தாள் 1 - கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து மல்ட்டிப்பிள் சாய்ஸ் வகையில் கேள்விகள் கேட்கப்படும். முற்றிலும் கணினி வழித் தேர்வாக நடைபெறும். 


தாள் 2ஏ - கணிதம் மற்றும் அப்டிடியூட் பிரிவில் மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக கணினி வழியில் நடைபெறும். டிராயிங் தேர்வு மட்டும் காகித வழியில் நடைபெறும்.


தாள் 2பி - கணிதம், அப்டிடியூட் மற்றும் பிளானிங் பிரிவில் மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக கணினி வழியில் நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் இடம்பெற்றுள்ள மூன்று பாடங்களில், ஒவ்வொரு பாடத்திலும் தலா இரண்டு பிரிவுகளில் கேள்விகள் இடம்பெறும். பி.இ., பி.டெக்., படிப்புகளுக்காக நடைபெறும் முதல் தாள் தேர்வைப் பொறுத்தவரை, முதல் பிரிவில் 20 கேள்விகளும் இரண்டாம் பிரிவில் 10 கேள்விகளும் கேட்கப்படும். இரண்டாம் பிரிவில் மட்டும் கேட்கப்படும் 10 கேள்விகளில் ஏதேனும் 5 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது. ஆக, ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சம் 100 மதிப்பெண்கள் வரை பெறலாம். இவ்வாறு மூன்று தாள்களில் மொத்தம் 300 மதிப்பெண்கள் வரை பெற முடியும்.தாள் 2ஏ மற்றும் தாள் 2பி தேர்வுகளில் அதிகபட்சமாக 400 மதிப்பெண்கள் வரை பெறலாம். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் அதேநேரம், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது. பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை. தேர்வு நேரம்: 3 மணிநேரம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 4 மணிநேரம்.


தாள் 2ஏ மற்றும் 2பி இரண்டையும் சேர்த்து எழுதுபவர்களுக்கு மூன்றரை மணிநேரம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு  4 மணி 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://jeemain.nta.nic.in/ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us