உயர் கல்வியில் உச்சம் தொடுகிறோம் | Kalvimalar - News

உயர் கல்வியில் உச்சம் தொடுகிறோம்ஜூலை 19,2021,22:34 IST

எழுத்தின் அளவு :

நாம் கற்ற கல்வி, ஏழு பிறவிக்கு கூட வருகிறதோ இல்லையோ, நம்மை காக்கிறதோ இல்லையோ, இந்த பிறவியில் நல்லதொரு வாழ்க்கை வாழ உறுதுணையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. 'மோடி அரசு ஒரு கார்ப்பரேட் அரசு; நகர்ப்புறங்களிலும் வசதியானவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படும் அரசு; உயர் ஜாதியினருக்கான அரசு' என, தொடர்ந்து இந்த அரசை விமர்சிக்கின்றனர். ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட, 2019- 20ம் ஆண்டிற்கான உயர் கல்விக்கான அனைத்திந்திய கணக்கெடுப்பு, அத்தனையையும் ஆதாரபூர்வமாக தகர்த்தெறிந்துள்ளது.
மிளிர்வது இந்தியர்களே
மோடி அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டின் உயர் கல்வியில், சத்தமில்லாமல் செய்துள்ள மவுனப் புரட்சியை யாராலும் எளிதில் புறந்தள்ளி விட முடியாது. ஏனெனில், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், தங்களை பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.கடந்த, 60 ஆண்டுகளில், நம் நாட்டில், 723 ஆக இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை, இந்த ஏழு ஆண்டுகளில், 1,043 ஆக உயர்ந்துள்ளது. 135 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், அரசால் மட்டுமே எல்லா நன்மையும் செய்து விட முடியாது. தனியார் பங்களிப்பு உதவியுடன் அதை சாதிக்க முடியும் என உணர்ந்து, 2014ல், 219 ஆக இருந்த தனியார் பல்கலைக் கழகங்கள் இன்று, 396 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம், கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், 276 ஆக இருந்த பல்கலைக் கழகங்கள் இன்று, 420 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள பிள்ளைகளுக்கும் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது; இது மிகப்பெரிய சாதனை. 'எந்த ஒரு நாடு, கல்வி வளத்தில் சிறந்து விளங்குகிறதோ, அதுவே வையத் தலைமை ஏற்கும்' என்பதற்கு ஏற்ப, அமெரிக்கா பெரிய அண்ணனாக, உலக நாடுகளில் ஆளுமை செலுத்தலாம். ஆனால், அங்குள்ள பெரு நிறுவனங்களில், பல்கலைக் கழகங்களில், தம் திறமையால் மிளிர்வது இந்தியர்களே.தொழில்நுட்ப அறிவு பெறும் போது, நாம் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட முடியும். சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் போது, மக்களுக்கு நல்ல வாழ்வை கொடுக்க முடியும். கடந்த ஆறு ஆண்டுகளில், 90 ஆக இருந்த தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், 98 சதவீதம் அதிகரித்து, 177 ஆக உயர்ந்துள்ளன. இதன் மூலம் உயரிய தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது.சுயசார்பு இந்தியாவிற்கும் இந்த முன்னேற்றம் அத்தியாவசியமாகிறது. கடந்த, 2014ல் 43 ஆக இருந்த மருத்துவ பல்கலைக் கழகங்கள், 50 சதவீதம் அதிகரித்து, 66 ஆக உயர்ந்துள்ளன.இந்தியாவில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்மேம்படுவதை இது உணர்த்துகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில்பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை குறிப்பிடத்தகுந்த அளவில்முன்னேறியுள்ளது. மொத்தம், 17.10 சதவீத மாக இருந்த பட்டியலின மக்களின் சேர்க்கை, 23.40 சதவீதமாக, 6.3 சதவீதம் இந்த காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது.மேலும் பழங்குடியின மக்களின் உயர் கல்வி சேர்க்கை, 11 சதவீதத்திலிருந்து, 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதை துரிதப்படுத்த, 'ஏகலைவா' கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கையில் அரசு வலியுறுத்துகிறது.எந்த நாடு ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறதோ, அந்த நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 2014ல், 1 லட்சத்து 7,790 மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 2020ல், 98 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 2,550 மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.
அறிவியல் புலம்மேலும், நம் நாட்டில் 2014ல், 17 சதவீத மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தனர். ஆனால், 2020ல், 12.6 சதவீதமாக இது குறைந்துள்ளது. மாணவர்களுக்கு பொறியியல் கல்வியின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்துள்ளதை காண்பிக்கிறது. அந்த மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது நம் கடமை. உற்பத்தி அதிகரித்து, புதிய தொழிற்சாலைகள் துவங்கும் போது, இவர்களுக்கான தேவையை அவர்கள் உணர்வர். கலைப்பிரிவில் 32.7 சதவீதம் பேரும், வணிகவியலில் 14.9 சதவீதம் பேரும், அறிவியல் பாடங்களை 16 சதவீத மாணவர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்தம், 4.4 6 சதவீத பிள்ளைகள் மட்டுமே, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை பயில்கின்றனர். 2019- 20ல் மட்டும், 38 ஆயிரத்து 986 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.இது, 2014 புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும்போது, 50 சதவீதம் அதிகமாகும். முதுநிலை கல்வியில் மேலாண்மை, சமூக அறிவியல் பாடங்களில் பல மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், முனைவர் பட்டத்திற்கு அதிக அளவில் மாணவர் சேர்க்கை, அறிவியல் புலம் சார்ந்தே இருக்கிறது. இது, நம் நாட்டிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை தேடித் தரும். நம் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சமூகத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் ஆராய்ச்சிக்கு, அரசு கல்வித் தொகை தந்து, அதை காப்புரிமை பெறும் வரை உதவி செய்யும் என கூறியுள்ளது. இது, மாணவர்களிடையே மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்திஉள்ளது.
இஸ்லாமிய சமூகத்தினர்உயர் கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்திலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இதை, தொலைதுார கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து, நேரடி கல்வியில் அதிக மாணவியர் பயில்வதன் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களில் ஆண்களின் எண்ணிக்கை, 61 சதவீதத்திலிருந்து, 57.5 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்களின் பங்களிப்பு, 39 சதவீதத்திலிருந்து, 42.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆசிரியர், செவிலியர் போன்ற பணிகளில், இந்தியப் பெண்களுக்கு ஆர்வமும், சேவை மனப்பான்மையும் உள்ளதை இந்த புள்ளி விபரம் காட்டுகிறது.'மத்திய அரசு, சமஸ்கிருத மொழியை திணிக்கப் பார்க்கிறது' என, தொடர்ந்து தமிழகத்தில் புகார் கூறப்படுகிறது. இது, எவ்வளவு துாரம் பொய் என்பது, கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு சமஸ்கிருத பல்கலைக்கழகம் கூட துவக்கப்படவில்லை என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம். ஆனால், பிற பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை, 195 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, 56ல் இருந்து, 145 ஆக உயர்ந்து உள்ளது. 'பிரதமர் மோடி அரசு, சிறுபான்மை மக்களை, குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை வஞ்சிக்கிறது' என்ற பரப்புரையை, இடதுசாரிகளும், தி.மு.க., மற்றும் இஸ்லாமிய சமூக கட்சிகளும் கூறி வருகின்றன.இது, எத்தனை பெரிய பொய் என்பது, தேசிய கல்வி உதவித்தொகை இணைய அறிக்கையை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டில் மட்டும், 2,433 கோடி ரூபாய் மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனடைந்த இஸ்லாமிய சமூகத்தினர் 61.3 சதவீதம் பேர், கிறிஸ்துவர்கள் 10.5 சதவீதம் பேர், ஹிந்துக்கள் 9.3 சதவீதம் பேர் மட்டுமே. மேலும், முதல் ஐந்து பயன் பெற்ற மாநிலங்களில், மூன்று மாநிலங்கள், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு பெண் கல்வி, கிராமப்புறங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, அனைவருக்குமான திறன் மேம்பாடு, அனைத்து சமூக சமயத்தவரின் சம வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைவதற்கான வழியில் கவனம் செலுத்தி வருகிறது.
வையத் தலைமைமேலும், நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில் உள்ளதை உணர்ந்து, இளைஞர்களுக்கான, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மோடி மவுனமாக இருந்தாலும், பல பொய் பரப்புரைகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தாலும், அரசின் செயல்பாட்டு அறிக்கைகள், அரசின் வளர்ச்சியை வெளிச்சமிட்டு காண்பிக்கின்றன.நாட்டின் உயர் கல்வியில், இந்த ஏழு ஆண்டுகளில், இத்தனை மாற்றம் ஏற்படுத்த முடியுமென்றால், தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுதும் அமல்படுத்தினால், உண்மையில் இந்தியா, வையத் தலைமை கொள்ளும் என்பது உறுதி. அந்த அளவுக்கு, தேசிய கல்விக் கொள்கையில் பல உயரிய அம்சங்கள் உள்ளன. தேசிய கல்விக் கொள்கையானது, வருங்கால சந்ததியினரை சுய காலில் நிற்க செய்பவர்களாக, எந்த செயலைச் செய்தாலும் புரிந்து செய்யக் கூடியவர்களாக மாற்றுகிறது. மனப்பாடம் செய்து படிக்காமல் ஏன், எதற்கு, எப்படி என்று அறிந்து படித்து, அதன் மூலம் கற்பனை சிறகுகளை விரித்து படிக்க உதவுகிறது.
அரசியல் தந்திரம்ஒரு குழந்தை தன் கர்ப்பத்தில் உதித்தது முதலே, தாயின் குரலைக் கேட்கிறது. எனவே, தாய்க்கு பிள்ளையின் செய்கையும், பிள்ளைக்கு தாயின் சப்தமும் புரிகிறது.இது போல் தான், ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழி கல்வி கட்டாயம்; இது, எட்டாம் வகுப்பு வரை நல்லது என்கிறது தேசிய கல்விக் கொள்கை. பிள்ளைகளின் கற்பனை சக்தியை இது துாண்டும். 10 வயதிற்குள் மூளை முழு வளர்ச்சி பெறுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதனால், அடிப்படை மொழி அறிவும் கணித அறிவும் புரிகிறதா என ஆராய, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வு எனக் கூறப்பட்டுள்ளது.இது, மாணவர்களை தோல்வி அடையச் செய்வதற்காக அல்ல; புரிதலை ஆராய்ந்து அதை மேம்படுத்துவதற்கே இந்த திட்டம்.'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றார் கவிஞர் பாரதியார். அவர் பல மொழிகளை கற்றதால் தான் இதை கூற முடிந்தது. இன்றும் மத்திய பாடத் திட்டத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு, மூன்று மொழிகள் உள்ளன. ஆனால், இலவசமாக எந்த மொழி வேண்டுமானாலும், தமிழ், ஆங்கிலம் தவிர ஒரு மொழியை கற்கலாம் என்றால், 'ஹிந்தித் திணிப்பு' என புறக்கணிப்பது, நம் அறியாமை மட்டுமல்ல அரசியல் தந்திரமும் தான்.ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, வருடத்திற்கு 10 நாட்கள் புத்தகப் பை இல்லாத நாட்கள்.மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள ஏதேனும் ஒரு தொழிலை, மாணவர்கள் விருப்பப்படி கற்கலாம். மேலும் விரும்புபவர்கள் கோடை விடுமுறையில் கற்கலாம். இது, அந்த பகுதி யில் உள்ள தொழிலை அங்குள்ள மாணவர்கள் கற்கவும், பின்னாளில் தொழில் துவங்கவும் ஏதுவாக இருக்கும்.தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒன்பதாம் வகுப்பு முதல், தமிழ், ஆங்கிலம் தவிர மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனால் தோல்வியடைய வாய்ப்புகள் மிக மிக குறைவு. இன்று வரை கல்லுாரியில் இறுதி ஆண்டு, இறுதித் தாள் எழுதவில்லை என்றால் கூட, நம் கல்வித் தகுதி பிளஸ் 2 வகுப்பு தான். ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி முதலாமாண்டு கல்லுாரியில் இருந்து வெளியேறினால், அந்த கல்விக்கு ஏற்ப சான்றிதழ்கள் வழங்கப்படும்.இந்தக் கல்விக் கொள்கையை நாம் விரைவில் செயல்படுத்துவதன் மூலம், இந்தியா வரும் காலத்தில் வையத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.முனைவர் ரா.காயத்ரி


சமூக ஆர்வலர்


தொடர்புக்கு:


இ - மெயில்: r.gayatrisuresh@yahoo.com


மொபைல்: 094442 09529


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us