உயர்கல்வி சேர்க்கை குறித்த கவலை வேண்டாம் | Kalvimalar - News

உயர்கல்வி சேர்க்கை குறித்த கவலை வேண்டாம்ஜூன் 24,2021,08:53 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி குறித்த அச்சமும், வாய்ப்புகள் குறித்த குழப்பத்தையும் மாணவர்கள் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டாம். அனைத்திற்கும் வழி உண்டு என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை துணை வேந்தர் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியதாவது:


இன்றைய கொரோனா பெருந்தொற்று காலம் நம் அனைவருக்குமே புதியது; யாருமே எதிர்பார்க்காதது. தற்போது 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை எதன் அடிப்படையில் வழங்குவது? என்ற கேள்வி எழுகிறது. இந்த அசாதாரண சூழல் நமக்கு மட்டுமல்ல. உலகமே இந்த சூழலை எதிர்கொண்டு வருகிறது. 


ஆன்லைன் வழிக்கல்வி நமக்கு புதியதுதான். இருந்தாலும், அதை முறையாக கையாண்டு, கடந்த ஆண்டில் நாம் வெற்றிகரமாக ஆன்லைன் வழியில் பள்ளி, உயர்கல்வி என  அனைத்தையும் வழங்கியுள்ளோம். இந்த ஆண்டும், ஆன்லைன் வழியாகவே கற்பிக்க துவங்கியுள்ளோம். கற்றலில் நாம் சிறப்பாக செயல்படும் அதேநேரம் மாணவர்களது மீதான மதிப்பீட்டு முறைகளே நமக்கு முன் நிற்கும் மிகப்பெரிய சவால் என்பதை மறுப்பதற்கு இல்லை.


இதுவும் கடந்து போகும்


நம் நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் உயர்கல்வி சேர்க்கை குறித்த குழப்பம் நிலவினாலும், இது உலக அரங்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளும் எதிர்கொள்வதால், அனைத்து நாட்டு கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு உயர்கல்வி சேர்க்கையில் சில தளர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’அனைத்தும் கடந்து போகும்’ என்ற சொல்லிற்கு ஏற்ப கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையும் கடந்து போகும். மாணவர் சேர்க்கை முறையில் சில மாற்றங்கள் நிகழும். எனவே, பெற்றோர்களும், மாணவர்களும் எந்தவித அச்சமும் இன்றி இருக்க வேண்டும். 


சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்கள் நிகழும். அவ்வாறு அட்மிஷன் முதல் கற்பித்தல், வீட்டுப்பாடம், செயல்முறைப் பயிற்சி, தேர்வு, மதிப்பீடு என அனைத்தும் ஆன்லைன் வழியாகவே வழங்கப்படுகின்றன. எங்கள் கல்வி நிறுவனத்திலும் 8 பட்டப் படிப்புகளை முழுக்க முழுக்க ஆன்லைன் வாயிலாக வழங்குகிறோம். 


சவீதா பல்கலைக்கழக பதிவாளர் தனசேகரன் கூறியதாவது:


நாடுமுழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க பதிவு செய்தாலும், 15 லட்சம் பேர் தான் வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்கின்றனர். அதில், வேலைக்கான திறன்களை பெற்று கல்லூரியை விட்டு வெளியே வரும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு. 


புத்தாக்க செயல்பாடுகள் அதிகளவிலான வேலை வாய்ப்புகளை வழங்கும். பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி உட்பட பயோலஜி சார்ந்த வாய்ப்புகளும், கம்ப்யுட்டர் சயின்ஸ், ஏ.ஐ., டேட்டா சயின்ஸ், ஆட்டோமொபைல், கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், எனர்ஜி மற்றும் என்விரான்மெண்ட் ஆகிய துறைகளிலும் வரும் காலங்களில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டத்துடன் வழங்கப்படும் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், ஆண்ட்ராய்டு ஸ்டூடியோ உட்பட மாணவர்களின் துறை சார்ந்த பல வேலை வாய்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு படிப்புகள் வாய்ப்புகளை விரிவடையச் செய்கின்றன.


கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள நிறுவனங்களுடன் மட்டுமின்றி சர்வதேச நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் புராஜெக்ட் செய்வதற்கு சாதகமாக வாய்ப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. சம்பளத்துடன் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வருகின்றன.


நிதி உதவி


பொதுவாக, அனைத்து அங்கீகரக்கப்பட்ட படிப்புகளுக்குமே கல்விக்கடன் பெற முடியும். கல்விக்கட்டணம் மட்டுமின்றி, புத்தகம், கற்றல் உபகரணங்கள் என கல்வி சார்ந்த இதர செலவீனங்களுக்கும் வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம். கல்விக்கடன் பெறுவதற்கு கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை விரைவில் வழங்கி உறுதுணையாக உள்ளன. கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களேவும் உதவித்தொகை, கல்விக்கட்டண விலக்கு வழங்குகின்றன. அவற்றையும் மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us